விஷாலுக்கு 40 கோடி கடன்தான் இருக்கிறது 'மருது' இயக்குநர் முத்தையா

'குட்டிப்புலி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. அதைத்தொடர்ந்து 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட படங்களை இயக்கியவர், தற்போது நடிகர் சசிகுமாரை வைத்து 'கொடிவீரன்' படத்தை இயக்கியிருக்கிறார். முத்தையாவிடம் பேசியதிலிருந்து... 

''நான், கிராமத்திலிருந்து வந்தவன். தெரிந்த விஷயத்தை முதலில் செய்து ஜெயித்துவிட்டு அதன்பிறகு நாம் நினைக்கும் வேறு ஜானர் சினிமாக்களைப் பண்ணலாம் என்று நினைத்து 'குட்டிப்புலி' இயக்கினேன். அந்தப்படம் கலெக்‌ஷன் ரீதியாக வெற்றிபெற்றது. அதனால் அடுத்தடுத்து வந்த தயாரிப்பாளர்களும் என்னிடம் கிராமத்து சாயலில் கதை கேட்டதால், 'கொம்பன்', ‘மருது’ படங்களைத் தொடர்ந்து இப்போது ‘கொடிவீரன்’ பண்ணியிருக்கிறேன்.

முத்தையா

'கொம்பன்' படமும் கலெக்‌ஷன் ரீதியாக ஹிட்டடிக்க, ‘இவனுக்குக் கிராமத்துப் படங்கள்தான் வரும்’ என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஆனால் என்னிடம் சிட்டி சப்ஜெக்ட் கதைகள் நிறைய உள்ளன. ஆனால் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. எனக்கு எல்லாத் தரப்பு படங்களும் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள் செய்ய வேண்டுமென்ற ஆசைகூட உண்டு. தமிழ் பாரம்பர்யத்தை எடுத்துச்சொல்கின்ற மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அதற்காக, அனுபவத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். அதேபோல நகரத்தை மையப்படுத்திய ஜாலியான, ஒரு காதல் படம் பண்ணவேண்டும் என்ற எண்ணமும் உண்டு” என்றவரிடம் விஷாலின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டோம், 

முத்தையா

'' என் படங்களில் பயணித்த மூன்று ஹீரோக்களும் ரொம்ப நல்லவர்கள். சசிகுமார் மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த மாட்டார். கார்த்தி சார் ஆதங்கப்படுவார். விஷால் சார், கோபத்தை வெளிப்படையாகக் காட்டிவிடுவார். அவர் எப்போதும் நல்ல மனிதர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார். சினிமாவில்தான் நடிப்பாரே தவிர நேரில் நடிக்கவே மாட்டார். நிறைய உதவிகள் செய்யக் கூடியவர். ஒரு ஹீரோவுக்கு ஸ்க்ரீனில் எவ்வளவு கோபம் இருக்குமோ அதே அளவுக்கு அவருக்கு நேரிலும்  கோபம் இருக்கும். எத்தனையோ ஹீரோக்கள் நன்றாகச் சம்பாதித்துவிட்டு லைஃப்பில் செட்டில் ஆகிக்கொண்டிருக்கும்போது இவருக்கு நாற்பது கோடி ரூபாய் கடன்தான் இருக்கிறது. நேற்று வந்த ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அப்பார்ட்மென்ட்ஸ் கட்டி செட்டிலாகிக்கொண்டிருக்கும்போது இவர் இருப்பதை எல்லாம் விற்றுக்கொண்டிருக்கிறார். 

விஷாலுக்குப் பணம் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். அவர் நடித்துவிட்டு பேங்க் பேலன்ஸை ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். இவரை மாதிரியான ஆட்களை வரவேற்கவேண்டும்''.என்கிறார். 

முத்தையா

“குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கதைகளையே திரும்பத்திரும்ப எடுப்பது ஏன்?”

“இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. என் படத்தில் மண்வாசனை இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அந்தச் சூழலில் என்ன பண்ண முடியும். கிராமத்துச் சாயலில் படம் எடுக்கும்போது, என் வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை பிரதிபலிக்கிறேன். ''என்னடா இந்த டைரக்டர் நம்மை இப்படிக் காட்டிவிட்டாரே'' என்று சொல்கிறமாதிரி படம் எடுக்கமாட்டேன். ஒரு சில விஷயங்களை பின்னணியாகத்தான் எடுத்திருப்பேன். ஏனெனில், வன்மம் பகை கிராமத்துக் கதைகளில் அதிகம். மற்ற இடங்களில் சொன்னால், ''நாங்கள் எல்லாம் அப்படியா'' என்ற கேள்வி வரும். அதைத் தவிர்க்கத்தான் இப்படிப் பண்ணுறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!