Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘’சினிமாவில் ஒரு சிஸ்டம் இல்லாததால் பறிபோகும் உயிர்களில் அசோக்கும் ஒருவர்..!’’ - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

தயாரிப்பாளர்கள்,  தயாரிப்பாளர்கள் சங்கம், பைனான்ஸியர்கள் ஆகிய வார்த்தைகள் சமீபகாலமாக  நாம் அன்றாடச் செய்திகளில் கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு பக்கம் பெரிய பொருட்செலவில் படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் திரைத்துறை நலிந்து வருவதாகப் பெரிய தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கூறிவருகிறார்கள். இதில் எது உண்மை, எது முரண் எனத் தெரிந்துகொள்ள பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள எஸ்.ஆர்.பிரபுவை அணுகினோம்.     

         

"கையில் பணம் இருப்பவர்கள் சினிமாவை நம்பத்தகுந்த வியாபாரமாய்ப் பார்ப்பதில்லை. அதனால், சினிமா எடுக்க வருவதில்லை. கையில் பணம் இல்லாமல் எவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்தாவது தொழில் பண்ண வேண்டும் என்பவர்களால் மட்டும்தான் தொழிலைச் செய்ய முடியும். ஒரு தொழிலில் முதலீட்டிற்கென ஒரு குறிப்பிட்ட பகுதியை  மட்டும்தான் நாம் கடனாகப் பெற முடியும். வங்கிகளை எடுத்துக்கொண்டால்கூட வெறும் 40%  தொகையை மட்டுமே அவர்கள் கடனாகக் கொடுப்பார்கள். மீதமுள்ள 60% தொகையை அந்ததந்த நிறுவனங்கள்தான் சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

எஸ் ஆர் பிரபுசினிமாவில் அப்படியில்லாமல் மொத்த ரிஸ்கையும் தயாரிப்பாளர்களே  எடுத்துக்கொண்டு, மொத்த முதலீட்டையும் பைனான்ஸியர்களிடம் வாங்கவேண்டிய  சூழ்நிலைக்கு  மாறிவிட்டது. முழுப் பணத்தையும் பைனான்ஸியர்களே தருவதால் அந்தப் பணத்தின் பாதுகாப்புகாக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பிரச்னைகளாக உருவெடுக்கின்றன. 

முந்தைய காலங்களில் ஸ்டுடியோ நிறுவனங்கள் அவர்களது சொந்தப் பணத்தை வைத்தே படங்களை எடுத்தன. பின்நாள்களில் படங்களை 'ப்ரீ-சேல்' செய்ய ஆரம்பித்தனர். அதாவது, படம் வெளியே வருவதற்கு முன்பே அதை விற்று விடுவார்கள். சில நேரங்களில் பூஜை போட்டவுடனேயே சில படங்கள் விற்றுவிடும். அப்படி விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் தரும் பணத்தை வாங்கி படம் எடுத்தனர். பற்றாக்குறைக்குத்தான் கடன் பெறுவார்கள். அந்தக் கடன் தொகை சொற்பமாகவே இருக்கும். அப்படி முழுப் படத்தையும் எடுத்துக் கொடுப்பார்கள். படங்கள் நாளடைவில் தோல்வியைத் தழுவ, இங்கு வணிக நிலையும் ஆட்டம்காண, 'ப்ரீ-சேல்'  கான்செப்ட் அடிப்பட்டது. அதனால்தான் முழுக்க முழுக்க பைனான்ஸியரை நம்பி படம் எடுக்கும் சூழ்நிலை வந்தது. இதில் எந்த ஒரு தனி நபரையும் குற்றம் சொல்ல முடியாது. இந்த மார்க்கெட் சிஸ்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்." 

"மார்க்கெட் சரியில்லை என்ற நிலையைத் தயாரிப்பாளர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?" 

"திரைப்படத் தயாரிப்பு என்பது இயற்கையான முறையில் நடக்க வேண்டும். முதலில் கதையை முடிவு செய்ய வேண்டும், அதற்கான பட்ஜெட் முடிவு செய்ய வேண்டும். அந்த பட்ஜெட்டிற்கேற்ற  நடிகர்களை முடிவு செய்ய வேண்டும். பின்னர்தான் படத்தின் தயாரிப்பைத் தொடங்கவேண்டும். இங்கே நடிகரைச் சுற்றித்தான் வணிகம் இயங்குவதால், மேற்சொன்ன முறையைக் கடைப்பிடிப்பதற்கான சூழ்நிலை எளிதாகவில்லை." 

"இன்றைய  படங்கள் மக்களைச் சென்றடைவதற்குப் பெரிய விளம்பரம் தேவைப்படுகிறது அல்லது பெரிய நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படி ஏதும் இல்லாமல் திரைக்கு வரும் சின்னப் படங்கள் மக்களைச் சென்றடைகிறதா? இதற்கு ஏதும் முறைபடுத்துதல் இருப்பதாகத் தெரியவில்லையே?"     

"டிமாண்ட் & சப்ளை அப்படிங்கிற பேலன்ஸ் இங்கே இல்லை. ஆண்டுக்கு 60, 70 படங்கள் மட்டுமே ரிலீஸாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எப்போதாவது ஒரு வாரத்தில்தான் 3, 4 படங்கள் வரும். மற்ற வாரங்களில் ஒரு படம் மட்டும்தான் திரைக்கு வரும். அதனால்தான் அன்றைய படங்கள் 50 நாள்கள், 100 நாட்கள் ஏன்.. வருடக்கணக்கில்கூட ஓடியது.  

நமது காலண்டர் மாறவே இல்லை. அதே 52 வாரங்கள்தாம் உள்ளன. ஆனால், ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 300க்கும் அதிகம் என்ற இலக்கைத் தொட்டுவிட்டது. இன்று நாம் படங்களால் தியேட்டர்களைத் திணற வைக்கிறோம். அதனால், மக்களைப் பெரிதளவில் ஈர்க்க பெரிய நட்சத்திரங்களின் பெயர்கள் தேவைப்படுகிறது. ஒரு படத்திற்கான ஆயுள் ஒருவாரம்தான். அதற்குள் எல்லோரையும் கவர சில சமயங்களில் படத்தின் கதையைத்தாண்டி, அதை விளம்பரபடுத்த வேண்டிய சூழ்நிலை இங்கு நிலவுகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் படங்கள் எடுக்கக் கூடாது என நாம் யாரையும் தடுத்து நிறுத்த இயலாது. அதிகப்படியான வெங்காயத்தை விளைவித்து ரோட்டில் கொட்டுவதில்லையா அதுமாதிரி ஆகிவிட்டது இன்றைய சினிமாவின் நிலை. நாங்கள் கேட்டதற்கேற்ப அரசு நிலுவையிலிருந்த மானியம் மற்றும் அரசு விருதுகளை அறிவித்தது. பின் திரையரங்க டிக்கெட் விலை முறைப்படுத்துதல், பார்க்கிங் கட்டணங்களையும் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுபோல சிலவற்றை ஒரு சங்கம்  தனிப்பட்ட கட்டமைப்புகளால் முறைப்படுத்துதல் கடினம். அமைப்புகளின் அதிகாரங்கள் ஒரு வரையறைக்குட்பட்டிருக்கிறது. உண்மையில் அவை அதிகாரங்கள் கிடையாது. அவையாவும் அமைப்புகளுக்குள் இருக்கும் புரிதல்களே. இதுதான் வியாபாரத்தை நடத்தி வருகிறது. இதைத்தாண்டி, முறைப்படுத்தல்களை அரசாங்கம்தான் செய்யவேண்டும். அது அவர்களின் கடமையும்கூட. ஏனெனில், அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கிறது."  

"ஒரு அரசாங்கம் தனித்துச் செயல்படும் சினிமாத் துறையில் முறைப்படுத்துதல் மேற்கொள்வது ஒரு கூட்டமைப்பின் சுதந்திரத்தில்  தலையிடுவதுபோல் இருக்காதா?"

"சினிமாவில் முறைப்படுத்துதல் இல்லாததால் ஒரு உயிரைப் பலிகொடுத்து நிற்கிறோம். இதற்கு யார் காரணம்? முறைப்படுத்துதலை இந்த அமைப்புகள் செய்யமுடியாது என்ற சூழல் உருவாக யார் காரணம்? இங்கே அதிகப்படியான படங்கள் வருகின்றன, அதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்தத் துறையினால் அரசு பெற்றுக்கொள்கிற வரி வருமானம் அதிகம். இந்தத் துறையை முறைப்படுத்துவதில் அவ்வளவு பங்கு அரசுக்கு இருக்கிறது. இங்கு சட்டங்கள் போட்டால் மட்டும் பத்தாது, அதைக் கண்காணிக்கவும் செய்யவேண்டும். இங்கு ட்ரான்ஸ்ஃபரென்சி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு அரசு ஒரு முறையைக் கொண்டு வரவேண்டும். ஒரு அமைப்பு அரசாங்கத்திடம்தானே முறையிட முடியும். ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட அதேநாளில் ஒருங்கிணைந்த கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனையைக் கொண்டுவந்திருக்க வேண்டும். என்றைக்கு மார்க்கெட் வெளிப்படைத் தன்மையுடையதாய் மாறுகிறதோ, அன்றுதான் ஒரு படத்திற்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பது தெரியும். நாம் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று ஹீரோக்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்தால், இந்தப் பிரச்னைகள் சீராகிவிடும்." 

"வளர்ந்து வரும் ஆன்லைன், டிஜிட்டல் பிளாட் ஃபார்ம், வெப்சீரிஸ் கலாசாரத்தால் திரையரங்கிற்குள் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைகிறது என நினைக்கிறீர்களா?" 

"அப்படி ஏதும் கிடையாது. இன்றைக்கு ஆடியன்ஸ் எண்ணிக்கை கூடிவிட்டது. உலகம் முழுதும் தமிழ்ப் பேசும் மக்கள் கிட்டத்தட்ட 10 கோடி பேர் உள்ளனர். இங்கு எடுக்கப்படும் திரைப்படங்கள் அவர்கள் அனைவருக்கும் சென்று சேரும் அனைத்து வழிவகைகளும் இங்கு உள்ளது. அடிப்படை என்னவென்றால் அதிகபடியான பொருள்கள் கிடைக்கும்போது மக்களுக்குத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி அந்தந்தக் களங்களுக்கு ஏற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். டிமாண்ட் இங்கே இருக்கத்தான் செய்கிறது. அதற்கான சப்ளயை நாம் ஒரே இடத்தில் குவிக்கிறோம். அதைத்தான் நாம் மாற்றவேண்டும். அதற்காகத்தான் கேபிள் டிவி, ஆன்லைன் ரிலீஸ் ஆகிய முறைகளைத் தேர்ந்தெடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம்  மூலம் முறைப்படுத்தி வருகிறோம். இங்கே ஒரு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்பது பொண்ணுக்குச் சீர் செய்வது போல. நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதென்பது பெரும்குறையாகவே பார்க்கப் படுகிறது. இந்நிலை மாறினால் அந்தந்த படத்திற்கான வருவாயை ஈட்டமுடியும்."

" 'அருவி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக, அரசியல் கருத்துகள் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரிப்பதன் காரணம் என்ன?"  

"நாம ஆடியன்ஸோட கனெக்ட் பண்ணனும்னு நினைக்கிறோம். இன்றைக்கு சோஷியல் மீடியாக்களில் எது அதிகம் பேசப்படுகிறதோ, அவையே மக்களைப் படத்தோடு ஒன்ற வைக்கிறது. இன்றைக்கு ரசிகனைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளைப் பேசும்போது அவர்கள் அதற்கு ரியாக்ட் செய்கிறார்கள். தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்கிறார்கள். அப்படிதான் 'ஜோக்கர்', 'மெர்சல்', 'அறம்' போன்ற படங்களுக்கு ரியாக்ட் செய்கிறார்கள்."

"படம் சர்வதேச விருதுகள் வாங்கவேண்டும் என்பதற்காகவே படம் எடுக்கிறீர்களா... இல்லை அதில் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகவா?"    

"எங்களுடைய படங்களுக்குக் குறிப்பிட்ட பட்ஜெட்டைத் தாண்டி செலவு செய்யமுடியாது. அப்பொழுது எங்கள் படங்களை நாங்கள் விற்பதைவிட, மக்களே அடுத்தவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். அதற்கு அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும் என்பதே  எங்கள் நோக்கம். ஒரு படத்தை ஏன் எடுக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்க வேண்டும். இந்தப் படத்தை ஏன் எடுத்தீர்கள் என யாரும் கேட்கக் கூடாது என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. அந்த பயம்தான், தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்கத் தூண்டுகிறது. அதேசமயம், நாங்கள் தயாரிக்கும் படங்களை உலகளாவிய ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. மிக முக்கியமாக, வியாபார நோக்கமும் எங்களுக்குப் பிரதானமாய் இருக்கிறது."         

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement