“நல்ல இசையமைப்பாளர் ஏனோ சமையல்காரர் ஆனார்..!” - ஆதித்யனை நினைத்து வேதனைப்படும் இயக்குநர் ராஜேஸ்வர் #RIPAdithyan

சீனியர் இசையமைப்பாளர் ஆதித்யன், சமீபத்தில் ஹைதராபாத்தில் திடீரென மரணம் அடைந்தது தமிழ்சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 'அமரன்', 'சீவலப்பேரி பாண்டி', ' கோவில்பட்டி வீரலட்சுமி', 'நாளைய செய்திகள்', 'லக்கிமேன்', 'மாமன் மகள்' உள்பட ஏராளமான படங்களுக்கு இசைமைத்தவர் ஆதித்யன். அவரை முதன்முதலாக 'அமரன்' படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் ராஜேஸ்வர். அவரிடம் ஆதித்யன் நினைவுகள் குறித்து கேட்டோம்.

இசையமைப்பாளர் ஆதித்யன்

''மறைந்த நண்பர் ஆதித்யனின் உண்மையான பெயர் டைட்டஸ். 'அமரன்' படத்தில் அவரை அறிமுகப்படுத்தும்போது நான்தான், ‘ஆதித்யன்’ என்கிற பெயரை சூட்டினேன். நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டைரக்‌ஷன் கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்தபோது ஆதித்யன் எனக்கு ஜூனியர். சவுண்டு இன்ஜினியர் கோர்ஸ் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரும், நடிகர் லிவிங்ஸ்டனும் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்ரா குழு வைத்து இருந்தனர்.

இளையராஜா சார் இசையமைத்த 'கடலோரக் கவிதைகள்' போன்ற ஏராளமான ஹிட் படங்களுக்கு அவரது இசைக்குழுவில் ஆதித்யன் தலைமை சவுண்ட் ரெக்காடிஸ்டாக பணியாற்றினார். அந்த சமயத்தில் நான் 'அமரன்' படத்தை இயக்க ஆரம்பித்தபோது முதலில் விஸ்வகுரு என்பவரை இசையமைப்பாளராக நியமித்தேன். அப்போது சாதாரணமாக இசை கம்போஸ் செய்த நேரத்தில் 6 ட்ராக் கொண்ட இசையை 'அமரன்' படத்தில் இடம்பெற்றதால் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக ஏ.ஆர். ரஹ்மானிடம் மியூஸிக் கம்போஸ் செய்த எமியையும், ஆதித்யனையும் ஆடியோ ரெக்காடிஸ்டாக நியமித்தேன். 

இந்த இருவரும் எப்போதும் என்னுடன் படப்பிடிப்பில் இருந்தனர். 'அமரன்' படத்தில் இடம்பெற்ற 'வெத்தலை போட்ட ஷோக்கிலே...' என்று கார்த்திக் பாடிய பாடலை முதலில் விஸ்வகுரு கம்போஸ் செய்திருந்த விதத்தில் எனக்கு திருப்தியில்லை. அதனால் ஆதித்யனிடம் சரிசெய்யச் சொன்னேன். அவர் சரிசெய்தபிறகு அந்தப் பாடலை கேட்டபோது எனக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது. அதன்பின் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து இருந்த விஸ்வகுருவிடம் பேசி அவருக்குப் பதிலாக ஆதித்யனையே இசையமைப்பாளராக நியமித்தேன். 

இயக்குனர் ராஜேஷ்வர்

ஆதித்யன் இசையமைத்த அமரன் படத்தின் இசை பெரிதாகப் பேசப்பட்டது.  அடுத்து 'சீவலப்பேரி பாண்டி' படத்தில் அவர் இசையமைத்த 'ஒயிலா பாடும் பாட்டுல...' பாடல் பாப்புலரானது. அதே படத்தில் நான் எழுதி இடம்பெற்ற 'கிழக்கு செவக்கையில..’. பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது. 

இப்படி மிகச்சிறப்பாக இசையமைக்கும் ஆதித்யன், தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பர், திரைப்பட இயக்குநர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பணியாற்றும் திறமைமிக்கவர். தன்னிடம் மிகப்பெரிய இசைத்திறமை இருந்தும் துளிகூட தலைக்கனம் இல்லாதவர். சினிமா துறையில் உயரமான இடத்துக்கு போகக்கூடிய இசைத்திறமை அவருக்கு இருக்கிறது என்று முழுமையாக நம்பினேன். ஆதித்யன் திடீரென இறந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தார், சுகாதாரமான உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்பார். அவர் ஒரு நாளும் தன் உடலை பெருக்கவிட்டதே இல்லை. உடலை ஸ்லிம்மாகவே வைத்துக்கொண்டார். 

ஹைதராபாத்தில் மகள் வீட்டுக்கு அடிக்கடி போய்வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சந்தித்தேன் அப்போது 'டிவியில சமையல் செய்யற மாதிரி எல்லாம் ஏன் நடிக்கிறீங்க? என்னாச்சு?' என்று கேட்டேன். 'எனக்கு சினிமாவில் பெரிசா சான்ஸ் இல்லை, டிவியில சமையல் செய்வது எனக்கு திருப்தியா இருக்கு’ என்றார். அவர் அப்படி சொன்னது எனக்கு வேதனையாக இருந்தது. தமிழ்சினிமாவில் பெரும்பாலான இயக்குநர்களுக்கு இசைஞானம் அவ்வளவாக கிடையாது. தாங்கள் எடுக்கப்போகும் படத்தின் சிச்சுவேஷனை மட்டும் இசையமைப்பாளரிடம் சொல்வார்கள். அதற்கு தகுந்த மாதிரி மெட்டுக்களை உருவாக்குவது இசைமைப்பாளரின் திறமையை பொறுத்தது, என்னைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஒரு டாக்டரைப்போல் இருக்க வேண்டும். அந்த அசகாய திறமை தமிழ்சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருக்கிறது. ஆதித்யனியனிடமும் இருந்தது. ஆனால் அந்தத்திறமை ஏனோ மிளிராமல், ஒளிராமல் போனது” என்று வேதனையுடன் முடித்தார் ராஜேஷ்வர்.          

Do you like the story?

Please Appreciate the Author by clapping!