வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (11/12/2017)

கடைசி தொடர்பு:13:00 (11/12/2017)

2017... ரஜினி,கமலுக்கு எப்படிப்பட்ட வருடம்..!

2017... பல ஹீரோக்களுக்கு ஹிட் படங்களின் மூலம் இந்த வருடம் முக்கியமானதாக இருந்திருக்கலாம். பல புதுமுகங்கள் இந்த வருடம் திரைத்துறையினுள் அடியெடுத்து வைத்து கலக்கியிருக்கலாம். சில படங்கள் மீது ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கலாம். வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சில படங்களின் பட்டியல் நிச்சயம் வைரலாக பேசப்பட்டிருக்கும். ஆனால், தங்களின் படம் வந்தாலும் வராமல் போனாலும் என்றுமே இவர்கள் வைரல் தான் என்று சொல்லக்கூடிய நபர்கள் வெகு சிலர். அந்த சிலரின் பட்டியலில் முன் வரிசையில் அமர்ந்திருப்பது  ரஜினி - கமல் என்னும் இந்த இரு துருவங்கள் தான்.

ரஜினி - கமல்

ரஜினி காந்த்: 

வருடத்தில் இவரது ஒரு படம் கூட வரவில்லை என்ற நிலை ஏற்படுவது மிகவும் சொற்பான ஆண்டுகளே. ஆனால், அந்த இடைவெளிக்கு பிறகு, மிகப் பிரமாண்டமான முறையில் என்ட்ரி கொடுத்து போன வருடத்திற்கும் சேர்த்து ட்ரீட் கொடுப்பார் என்ற மிகுந்த நம்பிக்கையில் ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதற்கு தகுந்தாற்போல், இவரது படங்களும் ரசிகர்களை திருத்திப்படுத்தும். அந்த வகையில், ரஜினிக்கு இந்த வருடம் எந்த படமும் வெளியாகவில்லை. ஷங்கரின் '2.0' படம் இந்த வருடம் வெளியாகும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்தது. ஆனால், அடுத்த வருடம் படத்தை வெளியிடலாம், இந்த வருடம் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மட்டும் நடத்தலாம் என்று ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் துபாயில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. கடந்த வருடம், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி' படம் உலகளவில் எதிர்பார்க்கப்பட்டு மிகுந்த ஆரவாரத்துடன் கோலாகலமாக திரைக்கு வந்தது மட்டுமல்லாமல், `காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும் அம்பேத்கர் கோட் மாட்டினதுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு’ என்று அழுத்தமான அரசியலையும் பேசியது. இந்த வருடம், பா.ரஞ்சித் ரஜினி வைத்து தனுஷ் தயாரிப்பில் 'காலா' படத்தை இயக்கியுள்ளார். ஆக, இரண்டு படங்களும் ரஜினியின் மீது உள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

2.0 - காலா

இதற்கு நடுவில், ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி அனைத்து மாவட்ட ரசிகர்களையும் ஷெட்யூல் வைத்து சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது 'இங்கு சிஸ்டம் சரியில்லை. எதற்கும் தயாராக இருங்கள்; போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறி ரசிகர்களை வழி அனுப்பி வைத்தார். இவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும், இவர் நிச்சயம் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தாலும், அரசியல் பத்தின கேள்விகளை மீடியா கேட்டால், 'நோ கமெண்ட்ஸ்' என்று சிம்பிளாகக் கூறி அவருக்கே உரிய ஸ்டைலில் பறக்கிறார். இவர் அரசியலுக்கு வருகிறார் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவர் நடிப்பில் தயார் நிலையில் உள்ள இரண்டு படங்களும் அடுத்த வருடம் வெளியாகி பவர்ஃபுல் கம்பேக் தர இருக்கிறார். இந்த வருடம் அவரின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும், இவ்வருடம் வைரலாகவே வலம் வந்தார் என்பதில் ஐயமில்லை. 

கமல்ஹாசன் :

சினிமாத்துறையில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்து இன்று 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் இவரின் படங்கள் 2006ம் ஆண்டிற்கு பின் இருந்தே, ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்குமான இடைவெளி அதிகமாகத் தொடங்கியது. இந்நிலையில், 2015ல் மட்டும் 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்கா வனம்' என அடுத்தடுத்து மூன்று படங்களை கொடுத்து மெர்சல் காட்டினார். உடனே, அடுத்து இவரின் படங்கள் விரைவில் வெளியாகும் என காத்திருந்தனர். 2016ம் ஆண்டில் இவரின் ஒரு படமும் வெளியாகவில்லை.

விஸ்வரூபம் 2

2017ல் 'விஸ்வரூபம் 2' படத்தில் நம்மை அதிரவைக்கப் போகிறார் என்று எண்ணியவர்களுக்கு, எதிர்பாராத வகையில் அரசியலில் விஸ்வரூபம் எடுத்து ட்விஸ்ட் கொடுத்தது இவரின் ட்வீட்கள் அனைத்துமே. இந்த அரசாங்கத்தை விமர்சித்து வந்த கமல்ஹாசன், பல்வேறு விதமான எதிர்விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், மக்கள் 'இவர் அரசியலுக்கு வரப்போகிறார்' என்று கணிக்க ஆரம்பித்துவிட்டனர். நள்ளிரவில் ட்வீட் போடும் போதும், பல மேடைகளில் பேசும்போதும் அரசியல் சார்ந்த பேச்சுக்களை அழுத்தமாக பதிவு செய்து வந்தார். இதனால், விஸ்வரூபத்தை எதிர்பார்த்த இவரது ரசிகர்கள், 'ஆண்டவரே! எப்போ அரசியலுக்கு வர்றீங்க?' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மீம்கள் தெறித்தன. பினராயி விஜயன், கெஜ்ரிவல், மம்தா பானர்ஜி என மற்ற மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தி வந்தவர், திடீரென ஒருநாள் கட்சி துவங்குவது உறுதி என்று கூறி ப்ரேக்கிங் நியூஸை வாரி வழங்கினார். இதற்கிடையில், தமிழகமே ஒரு நிகழ்ச்சியை இந்தளவுக்கு பார்த்து ரசித்தது என்றால், அதற்கு முக்கிய காரணமே, இவர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த நிகழ்ச்சியிலும், இவர் வரும் எபிசோட் தான் அன்றைய ட்ரெண்டிங். அதிலும் மறைமுகமாக தன் அரசியல் பிரவேசத்தை மக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தார். உடல்நலம் காரணமாகவும் அரசியல் பிரவேசத்தாலும் இந்த ஆண்டும் இவரது படங்கள் திரைக்கு வரவில்லை.

சபாஷ் நாயுடு

ஆனால், அடுத்த வருடம் ஜனவரியில்  'விஸ்வரூபம் 2' வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளன. அதன் பிறகு, 'சபாஷ் நாயுடு' படத்தின் வேலைகள் தொடர்வதாகவும், 'இந்தியன் 2' பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தையில் இருந்து நடிக்கத்தொடங்கியவர் அவ்வளவு எளிதில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டார் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது. இந்த வருடமும் இவரின் படங்கள் வெளிவராமல் இருந்தாலும், தொகுப்பாளராக இவரின் பணியும், அரசியல் பேசும் இவரின் ட்வீட்டும் தமிழக மக்களிடையில் இவரை ட்ரெண்டிங் மெட்டீரியலாகவே வைத்திருந்தன. 

இருவரும் தனித்தனியே தங்களது அரசியல் பிரவேசத்தை வெளிக்காட்டி வந்தாலும், இருவருக்குள் சில விஷயங்கள் முரண்பட்டு இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், இவர்களுக்குள் அன்றிலிருந்து இன்றுவரை ஆத்மார்த்தமான நட்பு இன்னும் மலர்ந்துகொண்டே தான் இருக்கிறது. சமீபமாக, ஆந்திரா அரசின் நந்தி விருதை இருவரும் பெற்று சாதனை புரிந்த நிலையில், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆக, இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், இவர்களின் படம் எப்போது வெளியாகும் என 2018யை நோக்கி தமிழகமே வெயிட்டிங்... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க