வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/12/2017)

கடைசி தொடர்பு:17:40 (11/12/2017)

முன்சீஃப் கர்ணம் முறையை ஒழித்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 இறுதி அத்தியாயம்

எம்.ஜி.ஆர்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அரசியலிலும் மக்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்

நாளை போடப்போறேன் சட்டம் – பொதுவில் 
நன்மை புரிந்திடும் திட்டம் 
நாடு நலம் பெறும் திட்டம் 

என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

எம்.ஜி.ஆர்

உலகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் 

எம்.ஜி.ஆர் சினிமாவில் தனது ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள பாடுபட்டதைப்போலவே  முதல்வர் பொறுப்பேற்றதும் அதை தக்கவைக்க பல சவால்களைச் சந்தித்தார். அவரது ஆட்சிக்காலம் அவருக்கு மலர் பாதையாக அமையவில்லை. மாறாக பெரும் போராட்டக்களமாக அமைந்தது. மக்களின் முழு நம்பிக்கையை அவர் பெற்றிருந்ததால் அவர் அதிலும் வெற்றிபெற்றார். அவர் முதல்வரான காலகட்டத்தில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பல கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டன. LPG எனப்படும் Liberalization, Privatization, Globalization அதாவது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் தீவிரமாக இந்தியாவில் வேரூன்ற தொடங்கின. இந்நிலையில் அவர் பல மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசுடன் போராடினார். ஏழை மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற சோசலிச கொள்கை வலுவிழக்க தொடங்கிய காலகட்டம் அது.  பொதுவுடைமை கொள்கை சிதறடிக்கப்பட்ட காலம். மக்கள் அவரவர் சொந்த முயற்சியில் தேவையானவற்றை பெற வேண்டுமே தவிர அரசை எதற்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கொள்கை பிரசாரம் தொடங்கியது. இந்நிலையில் 1977இல் முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தன் படங்களில் ‘’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-- இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்’’ என்று பாடியது பொய்யாகிவிடக் கூடாது என்று சிந்தனையில் மிகவும் கவனமாகத் தான் சினிமாவில் நடித்துக்காட்டிய படி மக்கள் மீது அக்கறை கொண்டவராக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தினார்.  

எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அணைக்கட்டுகள் மேம்பாலங்கள் போன்றவற்றை உருவாக்காவிட்டாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னை இல்லாமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். பெண்களும் பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பசிக்கொடுமையால் சிறுவர்கள் சிறுமிகள் தவறான பாதையில் போகும் சூழ்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். சத்துணவு முறையான கல்வி வழங்கப்பட்டதால் அவர்கள் வளர்ந்ததும் வேலை வாய்ப்பு பெற்றனர். நடுத்தரக் குடும்பங்களில் இரு பிரிவுகள் தோன்றியது, திமுக ஆட்சியில் வேலையில்லா போராட்டம் கடுமையாக இருந்தது. எம்.ஜி.ஆர் காலத்தில் அந்நிலை குறையத் தொடங்கியது. பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார். இது இந்தியாவில் இதுவரை நடந்திராத சாதனையாகும். கல்லூரிகளில் வேலை வாய்ப்புக் கல்வி அறிமுகமானதால் இளைஞர்களிடையே நம்பிக்கை தோன்றியது. 

‘தொழிலாளி’யாக எம்.ஜி.ஆரின் நலத் திட்டங்கள்

ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்‌ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார். 

மீனவ நண்பனாக எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள்

எம்.ஜி.ஆர்

படகோட்டியாக வந்து ‘’தரை மேல் பிறக்க வைத்தான் –எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்; கரை மேல் இருக்க வைத்தான் –பெண்களை, கண்ணீரில் குளிக்க வைத்தான்’’ என்று சோக கீதம் இசைத்த எம்.ஜி.ஆர் தன்னை மீனவ நண்பனாக நிலை நிறுத்தும் முயற்சியில் அவர்களுக்கென சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் கடற்கரையில் குப்பங்களின் குடிசைகளில் வாழ்ந்து வந்த இவர்களின் நிலை விரைவில் மாறியது.

‘ஒளி விளக்கு’’ அளித்த எம்.ஜி.ஆர்

இருளை அகற்றி எம்.ஜி.ஆர் நம் வாழ்வில் ஒளி விளக்கேற்றுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களை அவர் ஏமாற்றாமல் வீட்டுக்கொரு விளக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். குடிசைகளுக்கு இலவச மின்சாரமும் அளித்து அந்த விளக்கை ஒளிரச் செய்தார். இதனால் ஏழை குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே  இரவில் படித்தனர். வீட்டில் மின்சார விளக்கு இல்லாத போது  ஊர் மந்தையில் உள்ள  பொது விளக்கில் சிறுவர்கள் படிப்பதுண்டு. ஆனால் அங்கேயும் தாழ்த்தப்பட்டோர் சென்று படிக்க இயலாது. கிராமங்களில் அதிகாரம் படைத்தோராக உயர் சாதியினர் இருந்ததால் ஏழை தலித் குழந்தைகள் படிக்க விளக்கின்றி சிரமப்பட்டனர். எனவே, இவர்கள் வீட்டில் காடா விளக்கில் படித்து வந்தனர்.

‘நாடோடி’ எம்.ஜி.ஆரின் சாதிக்கொடுமைக்கு எதிரான திட்டம்

நாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்டவரின் மகன் என்பதால் அவரை எடுத்து வளர்த்தவரின் சொத்து ஏராளமாக அவருக்கு இருந்தும் அவருக்குச் சாதிக்கொடுமை பற்றி பிரசாரக் கூட்டங்களில் பேசி வரும் ஒரு தமிழாசிரியரே பெண் கொடுக்க மறுத்துவிடுவார். தாயின் மடியில் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு இதே கதைதான். பணக்காரரான அவரைப் பார்த்து எம்.ஆர்.ராதா என்ன சாதியோ என்ன குலமோ என்று ஏளனமாகப் பேசுவார். எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் கிராமங்களில் முன்சீஃப் கர்னம் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்பதால் அவர்களில் பலர் தாழ்த்தப்பட்டோரிடம் பாரபட்சமாக நடக்கின்றனர் என்பதை அறிந்து அந்தப் பதவிகளை ஒழித்தார். அரசுத் தேர்வு மூலமாக கிராம நல அதிகாரி [வி.ஏ.ஓ] பொறுப்புக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார். இப்போது தாழ்த்தப்பட்டவர்களும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பொறுபேற்றனர். 

விவசாயி எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள்

எம்.ஜி.ஆர் தான் நடித்த விவசாயி, ஒரு தாய் மக்கள் படங்களில் நவீன விவசாய முறைகள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி உணர்த்தியிருப்பார். அவர் முதல்வரானதும் 325 கோடிக்கான விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்காக 3.31 இலட்சம் பம்பு செட்களுக்கு மின் இணைப்பு வழங்கினார். பேரிடர் காலங்களில் விவசாயிகள்  நஷ்டமடையக் கூடாது என்பதற்காகப் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தார்,

எம்.ஜி.ஆர்

ஊருக்கு உழைப்பவனின் விதவை கரிசனம் 

ஊருக்கு உழைப்பவன் படத்தில் குமாரி பத்மினி இளம்விதவையாக நடிப்பார். எம்.ஜி.ஆர் மீது ஆசைப்படுவார். எம்.ஜி.ஆர் இணங்காததும் ஒரு போலிச் சாமியாரிடம் தன்னை இழந்துவிடுவார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அந்தச் சாமியாரை அடித்து உதைத்து திருத்தி குமாரி பத்மினிக்குத் திருமணம் செய்துவைப்பார். இது சினிமா கதை. நிஜத்திலும் எம்.ஜி.ஆர் விதவை பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். விதவைகளை மறுமணம் செய்வோருக்கு ரூ 5,300 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.

ஒருமுறை ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே என்று வேண்டினார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்றார். எம்.ஜி.ஆரின் இந்த பதில் ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியலை அவர் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதையும் விதவை பெண்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று அவர் கருதியதையும் புலப்படுத்துகிறது. இந்த வாரத்தில் ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறு மணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார்.

சைக்கிளில் டபுள்ஸ் போகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன்பிறகு சைக்கிளில் கணவனும் மனைவியுமாக சினிமாவுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் போக ஆரம்பித்தனர். இது சிறிய உத்தரவு என்றாலும் பெரியளவில் மக்கள் மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை மறுக்க இயலாது.

எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பற்றும் பணியும்

ஐந்து வயது முதல் தமிழ்நாட்டில் வாழ்ந்த எம்.ஜி.ஆருக்குத் தாய்மொழி வேறாயினும் தமிழே தன் மொழியாகி விட்டது. திமுக கட்சியில் அவர் இணைந்திருந்ததும் அவருக்குத் தமிழின் மீது அதிக பற்று உண்டாகக் காரணமாயிற்று. அவரது முதல் சொந்தப் படமான நாடோடி மன்னன் ‘’செந்தமிழே வணக்கம் --  திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும். இப்பாடல் இன்று மதிமுக கட்சியினரின் இறை வணக்கப் பாடலாக உள்ளது. 

எம்.ஜி.ஆர்

கலைஞர் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தில் ‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்பார். அவருக்கு இயற்கையாகவே தமிழ் மொழியின் மீது பற்றும் ஆர்வமும்  இருந்ததால் அவர் தானும் பல தமிழ் நூல்களை வாசித்து தன் தமிழறிவை வளர்த்துக்கொண்டார். படித்த தமிழறிஞர்களிடமும் பலவற்றை கேட்டறிந்தார், அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கி.ஆ.பெ. விசுவநாதம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பன்மொழிப்புலவர் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழறிஞர்களை கௌரவித்து மணிமண்டபங்கள் எழுப்பினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் இறந்து ஒரு மாதத்துக்குள் அவருக்குச் சிலை வைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு சிலை பணிகள் துரிதமாக நடந்தன. தெ பொ மீ அவர்களின் தமையனார் சதாவதானி தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலரின் பதி பக்தி மேடை நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். அது திரைப்படமாக இருந்த சமயத்திலும் எம்.ஜி.ஆர் அதில் நடிப்பதாக இருந்தது. ஆக அவர்கள் குடும்பத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நீண்ட நாள் தொடர்பு சிலை தொடர்பான பணிகளை விரைவுபடுத்தியது. எம்.ஜி.ஆர் தன் பதவிக் காலத்தில் தமிழ்த்தொண்டு செய்த பெருமக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 2% ஒதுக்கீடு வழங்கினார். 

1981இல் தன் தொகுதியான மதுரை மேற்கில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அதன் தொடக்க விழாவில் சிறிய பெரிய என அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்புரையாற்றி அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்தார். அப்போது பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்று மகிழும் வகையில் அவர்கள் கண்டும் கேட்டும் ரசிக்க முத்தமிழ் அரங்கங்களையும் மாபெரும் பொருட்காட்சி ஒன்றையும் நடத்தினார். பல்கலைக்கழகத்தில் கருத்தரங்குகளில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி விவாதங்கள் நடத்தினர். 
மதுரை மேற்கில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜனவரி ஒன்று முதல் பத்து நாள்கள் வரை தமிழகத்து மக்கள் இலட்சக் கணக்கானோர் தமிழில் தலை சிறந்த பேச்சாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் நடத்திய கவியரங்கம், பட்டி மன்றம், நாட்டிய நாடகம், இன்னிசை கச்சேரி போன்றவற்றை கண்டும் கேட்டும் ரசித்தனர்.

எம்.ஜி.ஆர் வேறு எந்த ஆட்சியிலும் வேறு எந்த முதல்வரும் தமிழுக்குச் செய்யாத ஒன்றை தம் ஆட்சியில் செய்தார். அதுதான் தஞ்சையில் தமிழுக்கென்று ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழாராய்ச்சிக்கென்று அவர் தொடங்கிய தமிழ்ப் பலகலைக்கழகம் ஆகும். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த முதல்வர்கள் அவரது நோக்கத்தை பாழ்படுத்திவிட்டனர். இப்பல்கலை உலகத்தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டிய ஓர் அமைப்பாகும். 

மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தினார். அவர் ஆட்சிக்காலத்தில் இன்னும் பல வகையில் அவர் தமிழுக்கும் தமிழ்ப் பெரியோருக்கும் உதவினார்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருந்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் குழந்தை ரசிகர்களுக்காக தனிக் காட்சிகளும் பாடல்களும் காமெடியன் செய்யும் சில வேடிக்கை சண்டைகளும் வைத்திருப்பார். தனது தத்துவப்பாடல்களை அவற்றின் பல்லவியை இரண்டு வயது நிரம்பிய குழந்தை பாடும்படியாக எளிமையாக எழுத வேண்டும் என்பார். என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லையே என்று வசன கர்த்தா அரூர் தாசிடம் கவலைப்பட்ட எம்.ஜி.ஆர் சிறு குழந்தைகள் தன் வீட்டில் வந்து விளையாடுவதை பெரிதும் விரும்பினார். குழந்தைகள் நல்ல பண்புடனும் பழக்க வழக்கத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் முதல்வரானதும் குழந்தைகளுக்காக நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.

ஆட்சியிலும் சோறு போட்ட எம்.ஜி.ஆர் 

ஏழு வயதில் சாப்பாட்டுக்கு வழியின்றி நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் அந்த நிலைமை தமிழகக் குழந்தைகளுக்கு வரக் கூடாது என்று விரும்பினார். காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை தன் வழிகாட்டியாகவும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் காமராஜர் கொண்டுவந்த பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார். காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு,கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது. 

எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர்  தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார். 

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று. 

கல்வித் திட்டம் 

சர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்வதேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர். எம்.ஜி.ஆரின் குழந்தை நலத்திட்டம் அவரது ஆட்சியில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்

நிறைவு

எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சொல்லிய விஷயங்களும் அவர் ஆட்சியில் அவர் அறிமுகம் செய்த திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்ததனால் இன்றளவும் அவரை மக்கள் மறக்கவில்லை. அவரது ஒரிஜினல் முகமும் ஒப்பனை முகமும் அதிக வித்தியாசமின்றி ஒரே மாதிரி இருக்கும்படி அவர் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். இது காலப்போக்கில் அவருக்கு மாபெரும் புகழையும் வெற்றியையும் தரும் அம்சமாக மாறிவிட்டது. இந்த ஒற்றுமை தொடக்கத்தில் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற உதவியது;  இந்தப் புகழே அவர் முதல்வரானதும் சினிமாவில் சொன்னபடி மாற்றங்களைக் கொண்டுவரவும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஊக்கமளித்தது. 

எம்.ஜி.ஆர் தன் திரையுலகப் பயணம் முடிந்ததும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவர் செய்து வரும் உதவிகளால் மகிழ்ந்திருந்த மக்கள் அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தனர். இது புலிவால் பிடித்த கதையாகிவிட்டது. அவராக உதவிகள் செய்த காலம் மாறி அவர் கண்டிப்பாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர் வகித்த முதல்வர் பதவியால் ஏற்பட்டது. அவர் மக்கள் மீது கொண்டிருந்த மாறாத அன்பினால் இந்தக் கட்டாயத்துக்குப் பணிந்தார். இந்த அன்பு ஆணிவேராக இருந்ததால் அவருடைய உழைப்பும் அறிவும் திட்டமிடலும் அவரை வெற்றித் திருமகனாக உயர்த்தியது.


டிரெண்டிங் @ விகடன்