வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (14/12/2017)

கடைசி தொடர்பு:17:33 (14/12/2017)

‘’ ‘சிரிச்சா போச்சு’ல யாரும் சிரிக்கலைன்னா வருத்தப்படுவார் ரோபோ சங்கர்..!’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-3

ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கலக்கப்போவது யாரு முதல் சீசனில் முதல் போட்டியாளரே ரோபோ சங்கர்தான். முதல் சீசனில் நான் உதவியாளராக இருந்தபோதே ரோபோ சங்கரை எனக்குத் தெரியும். ஆனால் அதிகமாகப் பேசியது கிடையாது. முதல் சீசன் முடிஞ்சதுக்கு அப்புறம் சீசன் 2,3,4 முடிஞ்சு, அது இது எது ஸ்டார்ட் பண்ணி போயிட்டு இருந்த சமயம் எனக்கு மேரேஜ் நடந்துச்சு. என் மேரேஜுக்கு ரோபோ சங்கர் வந்திருந்தார். என் மேரேஜ்ல ஒரு மணி நேர ப்ரோகிராம் ஒண்ணு பண்ணினார். அப்போதுதான் ரொம்ப நாள் கழிச்சு சங்கரைப் பார்க்கிறேன். அதுக்கப்பறம் எங்களோட நட்பு வளர ஆரம்பிச்சது. என் மேரேஜுக்கு வந்தவர் அந்தத் தேதியை ஞாபகம் வெச்சு என்னோட முதல் திருமண நாளுக்கு போன் பண்ணி வாழ்த்தினார். 

ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, ‘நான் மறுபடியும் விஜய் டிவியில ப்ரோகிராம் பண்ண ஆசைப்படுறேன்’னு சொன்னார். ரோபோ சங்கரோட ரீ என்ட்ரி அது இது எது நிகழ்ச்சி மூலமா நடக்குது. பல நிகழ்ச்சிகளிலும், பல மேடைகளிலும் இதை அவரே சொல்லியிருக்கார். அவர் அது இது எது நிகழ்ச்சிக்குள்ள வரும்போது செம ஃபார்ம்ல இருந்த வடிவேல் பாலாஜி, சோலோவா வந்தே எல்லாரையும் சிரிக்கவைப்பார். அவரோட ரோபோ சங்கரும் சேர்ந்து ப்ரோகிராம் பண்ண ஸ்டார்ட் பண்ணுனாங்க. 

ரோபோ சங்கர்

50வது எபிசோடுக்கு வெங்கட் பிரபு கெஸ்ட்டா வந்தார். அந்த எபிசோடுலதான் ரோபோ சங்கரும் வந்தார். 50வது எபிசோடிலிருந்து 130வது எபிசோடு வரை சங்கர் பண்ணினார். எல்லா எபிசோடுக்கும் வருவார். அவர் ஒரு ஒன் லைன் சொல்லுவார், அதை நாங்க டெவலெப் பண்ணுவோம். சில சமயம் அவரே ஃபுல் ஸ்கிரிப்ட் கொண்டுவருவார். அதை அப்படியே பண்ணச் சொல்வோம். அந்த ‘தகிட தகிட’ டான்ஸ் கான்செப்ட் எல்லாம் அவரே பண்ணுனதுதான். வடிவேல் பாலாஜிக்கு அப்புறம் ரோபோவும் சோலோவா பண்ண ஆரம்பிச்சார். 

ரோபோ சங்கர் ரொம்ப சின்சியரா இருப்பார். நல்ல பார்ம்ல இருந்த நேரத்திலும் ரிகர்சலுக்கு வருவார், சரியான நேரத்தில் வருவார். ஷூட்டுக்கு முன்னாடி அவர் என்ன பண்ணப்போறார்னு என்கிட்ட வந்து பேசுவார். அப்படித்தான் வேலைப் பார்க்கணும். சில எபிசோடுகள் போக போக சங்கர் பிஸியாகிட்டார். நான் கேட்டவுடனே ஷோ பண்றதுக்கு ஒரு டேட் கொடுப்பார். அவர் கொடுத்த டேட்டுக்கு ஷூட் வைக்கிறதுக்காக சேனல்கிட்ட பேசும் போதுதான் தெரியும், அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைனு. சில சமயம் அவர் கொடுக்குற டேட் அரசு விடுமுறையாகவும் இருக்கும். உடனே அவருக்கு போன் பண்ணி, ’தலைவா... டேட் இப்படிக்கொடுத்த என்ன பண்றது’ன்னு கேட்பேன். இது எப்போவாச்சும் இல்ல எப்போதுமே நடக்கும். அதே மாதிரி ஒரு நாள்கூட வீட்டுல சும்மா இருக்க மாட்டார் சங்கர். ஏதாவது ஈவென்டுக்கு போயிட்டே இருப்பார். சம்பளம் கம்மியா இருந்தாலும் அந்த ஈவென்டுக்கு போயிடுவார். மத்தவங்க மாதிரி பேரம் பேசிட்டு இருக்க மாட்டார். 

ரோபோ சங்கர்,சிவகார்த்திகேயன்,தாம்ஸன்

சிரிச்சா போச்சுல பெர்ஃபார்ம் பண்றவங்களோட டாஸ்க்கே வந்துருக்கிற கெஸ்ட்டை சிரிக்க வைக்கிறதுதான். கெஸ்ட்டை சிரிக்க வைக்க முடியலைன்னா பல பேர் ஃபீல் பண்ணவே மாட்டாங்க. ஆனா, ரோபோ சங்கர் ஃபீல் பண்ணுவார். ஒரு தடவை இப்படித்தான் மூணு எபிசோடு ஒரே நாள்ல ஷூட் பண்னோம். முதல் எபிசோடு யாருமே சிரிக்கலை, ரெண்டாவது எபிசோடுலையும் யாரும் சிரிக்கலை. ரொம்ப வருத்தமா உக்கார்ந்து இருந்தார். ’என்ன சங்கர் இவ்ளோ சோகமா இருக்கீங்க’னு கேட்டா, ‘என்ன தலைவா... யாருமே சிரிக்க மாட்றாங்க. முதல் ரெண்டு எபிசோடிலும் யாரும் சிரிக்கலை. மூணாவதுலையும் சிரிக்கலைன்னா ஹாட்ரிக் ஆகிடுமே தலைவா’னு சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு சிரிக்கவா இல்ல இவரோட சின்சியாரிட்டியைப் பார்த்து பாராட்டவான்னு தெரியலை. அந்தளவுக்கு தன்னோட வேலையை டெடிக்கேட்டடா பண்ணுவார். 

பயங்கரமான ஹார்ட் வொர்க்கர். 20ஆம் தேதி அது இது எது ஷூட் இருக்கும். 19ஆம் தேதி மதுரைக்கு ஒரு ஈவென்டுக்கு போயிருப்பார். 20ஆம் தேதி காலையிலதான் சென்னை வருவார். காலையில நான் போன் பண்ணி, ‘சங்கர் எங்க இருக்கீங்க’னு கேட்பேன். ‘தலைவா இப்பத்தான் வந்தேன். ஜிம்முக்கு போயிட்டு ஸ்டூடியோவுக்கு வந்திருவேன்’னு சொல்லுவார். ஷூட் முடிச்சிட்டு வேற ஊர் ஈவென்டுக்கு போவார். இப்படி ஓடிட்டே இருப்பார். அதைப் பார்த்து,’மாசத்துல 30 நாள்னா நீங்க 60 நாள் உழைக்கிறீங்க சங்கர்’னு சொல்வேன். 

ரோபோ சங்கர்

அது இது எது ஷோ பண்ணி அதுல ஃபேமஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ரோபோ சங்கர், தீபாவளி, சென்னைக்காதல்னு சில படங்களில் நடிச்சிருந்தார். அவரை யாரும் சரியா யூஸ் பண்ணலை. ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்ட படங்களிலும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாவே யூஸ் பண்ணிக்கிறாங்க. நான் டிவி ஷோக்களில் அவரை வச்சு சிவாஜி சார் மாதிரி, எம்.ஜி.ஆர் சார் மாதிரி மிமிக்ரி பண்ணச் சொல்லித்தான் காமெடி பண்ண முடியும். ஆனால், சினிமா இயக்குநர்கள் படங்களிலும் அவரை அதே விஷயத்தைப் பண்ணச்சொன்னா எப்படி? ஆடியன்ஸ் ரொம்ப தெளிவானவங்க. டிவியை வேற மாதிரி, சினிமாவை வேற மாதிரிதான் பார்ப்பாங்க. அதுனாலதான் என்கூட இருக்க பசங்ககிட்ட, ‘எதாவது ஒரு படத்துல சின்ன கேரக்டர் கிடைக்துன்னு நடிக்காதீங்க. அப்படிப்பண்ணுனா உன்னோட டிவி மார்க்கெட்டும் போயிடும். சரியான படத்துல நல்ல ரோலா பார்த்து பண்ணு’னு சொல்லுவேன். அதை சில பேர் கேட்டாங்க, சில பேர் கேட்கவேயில்ல. 

ரோபோ சங்கர் சில படங்கள் நடிச்சிட்டு அதுல எதுவும் சரியா அமையலைனு மறுபடியும் டிவிக்கே வந்தார். அது இது எது பண்ணி அது மூலமா ஃபேமஸ் ஆனதுக்கு அப்புறம் சின்ன சின்ன ரோல் பண்ணிட்டு பெரிய ரோலா ‘மாரி’ படத்துல நடிக்க கமிட் ஆனார். தனுஷ் சார் சிரிச்சா போச்சு எபிசோடுக்கு பெரிய ஃபேன். மாரி படத்தோட ஷூட்டிங்ல சிரிச்சா போச்சுதான் பார்த்துட்டு இருந்தார்னு ரோபோ சொன்னார். அப்படித்தான் அந்தப் படத்துல ரோபோ சங்கர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. மாரி படம் பண்ற வரைக்கும் சிரிச்சா போச்சு பண்ணிட்டு இருந்தார் சங்கர். அதுக்கப்பறம் செம பிஸி ஆகிட்டனால டிவியை விட்டுட்டு முழுசா சினிமாவுக்கு போயிட்டார். 

ரோபோ சங்கர்

மாரி படம் பார்த்துட்டு போன் பண்ணி வாழ்த்தினேன். அப்புறம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துல ரோபோ சங்கர் பண்ணுன க்ளைமேக்ஸ் போர்ஷன் ரொம்ப பிரமாத இருந்துச்சு. அப்போதும் போன் பண்ணி பேசுனேன். எனக்கு ரோபோ சங்கர் சீனியரா இருந்தாலும் என்கூட நல்லா பழகுவார். நான் அவரை சங்கர்னுதான் சொல்லுவேன், அவர் என்னை தலைவானு சொல்லுவார். நிறைய கமென்ட் அடிச்சிப்போம். சிவகார்த்திகேயன் அடிக்கடி,’சாதாரணமா இருந்த ஸ்டேஜ், ரோபோ சங்கர் வந்ததும் பெரிய ஸ்டேஜ் ஆகிடுச்சு’னு சொல்லி கலாய்ப்பார். அவரும் அதை ஜாலியா எடுத்துப்பார். இப்படி எந்த வயசு வித்தியாசமும் பார்க்காம ஜாலியா கலாய்ச்சிட்டு இருப்போம். 

ஒரு ஸ்டேஜ் டான்ஸரா இருந்து ஸ்டாண்டப் காமெடி, மிமிக்ரினு பண்ணி இன்னைக்கு ஒரு நடிகரா வளர்ந்திருக்கார்னா, அவர் பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கார். அவரை மாதிரி பாடி லாங்வேஜை பக்காவா பண்ணக்கூடிய ஆள் யாரும் இல்ல. ரோபோ சங்கர் எண்டர்டெயினர் ப்ளஸ் பெர்ஃபார்மர். நல்ல உழைப்பாளிக்கு ஒரு நல்ல இடம் இப்போ கிடைச்சிருக்கிறதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 


டிரெண்டிங் @ விகடன்