Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித் பேசாத ‘வசனம்’, விஷ்ணுவர்தனின் இரண்டு ஆசை... பில்லா இஸ் பேக்! #10YearsOfBilla

2007, இதே நாளில் வெளியானது அஜித் நடித்த `பில்லா' திரைப்படம். `இந்தத் திரைப்படம் உருவாக மூலகாரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி' இந்த வாக்கியத்துடன்தான் இந்தப் படம் ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பை எகிற வைத்து வெளியான இந்தத் திரைப்படம் அஜித் ரசிகர்களோடு சேர்த்து விஜய் ரசிகர்களையும் திருப்திப்படுத்தியதுதான் படத்தின் முதல் வெற்றி. ஏனென்றால், `பில்லா படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டது டா மங்கி' என ஞாபகப்படுத்தியதே ஒரு விஜய் ரசிகன்தான் என்பதைக் கூறிக்கொண்டு... 

பில்லா

1980-ல் ரஜினியின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தை ரீ-மேக் செய்யப்போவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன், ரஜினியிடம் கூறினார். ஹீரோவாக அஜித் நடிக்கிறார் என்பதைத் தெரிந்தவுடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டார் ரஜினி. ரஜினி நடித்த `பில்லா' படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மலேசியாவில் நடக்கக்கூடியவை. கதையில் சிறு மாற்றம் வேண்டும் என்று நினைத்த விஷ்ணுவர்தன், அஜித்தை இன்டர்நேஷனல் டானாக சித்திரித்து, படத்தை மலேசியாவில் பயணிக்கச் செய்திருப்பார். மலேசியாவை மட்டுமல்லாது படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் இன்ச் பை இன்ச் அழகாய் காட்டியிருப்பது நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு. மலேசியாவில், மலாய் மொழிக்குப் பிறகு தமிழ் இரண்டாம் மொழியாகக் கருதப்படுவதால் பார்ப்பவர்களுக்கும் சுலபமாகிவிட்டது. கலர் படங்கள் வெளிவர ஆரம்பித்த நாள் முதல், ஒட்டுமொத்த சினிமாவும் கலர்ஃபுல்லாக வெளி வரத்தொடங்கியது. ஆனால், இந்தப் படமோ வேறு லைட்டிங்கிலும், க்ரேஸ்கேல், சீப்பியா டோனிலும் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக வரும் அஜித்தின் சில காட்சிகளை மட்டுமே கலர் விஷூவலில் காண முடியும். டானாக வரும் அஜித் கதாபாத்திரம் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலுமே கறுப்பு, வெள்ளை, க்ரே போன்ற கலர்களை மட்டுமே காண முடியும். அதுவே படத்தைத் தூக்கிக் கொடுக்க வித்திட்டது. 

அஜித் தனது ஸ்டைலிஷான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அதற்கு மேலும் அழகூட்டும் விதத்தில் அமைந்தது அனுவர்தனின் காஸ்ட்யூம்கள். இதுதான் இவருக்கு முதல் படமும் கூட. அஜித்துக்கு மட்டுமின்றி மற்ற கதாபாத்திரங்களின் காஸ்ட்யூம்களில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். அஜித்துக்கான வசனங்கள் படத்தில் மிக மிகக் குறைவு. அதையும் மீறி இடம்பெற்ற ராஜ் கண்ணனின் வசனங்கள் ஒவ்வொன்றுமே தெறி ரகம். வெறும் பாடி லாங்குவேஜில் மட்டுமே அஜித் பேசிய வசனங்கள்தாம் ஏராளம். அதற்கு அஜித்தின் இன்ட்ரோ சீனையே உதாரணமாகக் கூறலாம். `பில்லா... கடைசியா ஏதாவது சொல்லணும்னு ஆசைப்பட்டா சொல்லு?' என துப்பாக்கி முனையில் கேட்பார்கள். அதற்கு `ஒண்ணுமே இல்லை' என்ற பாணியில் காலியான கூல் ட்ரிங்ஸ் கேனை ஆட்டி, அதை மேலே தூக்கிப்போட்டு, எதிரிகளைச் சுட்டுத்தள்ளுவார். படத்தை இதைவிட அருமையாக எப்படி ஆரம்பிக்க முடியும்? பார்வையாளர்களின் முதுகெலும்பை நேராக்கும் விதத்தில் அமைந்தது படத்தின் இந்த இன்ட்ரோ காட்சி. 

பில்லா அஜித்

படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று இயக்குநர் விஷ்ணுவர்தன் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தார். ஒன்று, அஜித்தின் மற்ற படங்களைக் காட்டிலும் இதில் அவரை அழகாகவும், ஸ்டைலாகவும் காட்ட வேண்டும். இரண்டு, அஜித்தின் கெரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்க வேண்டும். இரு விஷயங்களும் நிறைவேறியதா? என்று கேட்டால் அஜித்தின் ஒவ்வொரு ரசிகர்களும் ஆம் என்று கர்வமாக தலையாட்டலாம். அதே சமயம் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவம், அஜித்-யுவன் காம்போ. 2001, `தீனா' படத்துக்குப் பின் இது மீண்டும் நிகழ்ந்தது. அஜித்தின் ஸ்டைலான நடை, யுவனின் பின்னணி இசை, விஷூவல் என எல்லாமே ஒன்றிணைந்து பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்கவைத்தது. படத்தில் இன்னும் கூர்மையாகக் கவனித்தால் யுவனின் கைகள் விளையாடியிருப்பது, நம் காதுகளில் கேட்கும். `நான் மீண்டும் நானாக வேண்டும்' பாடலில் லிரிக்ஸுக்கு  பின்னணியில் ஒலிக்கும் இசையை மட்டும் கூர்ந்து கேட்டால் யுவன் கீபோர்டில் விளையாடியிருப்பது நன்றாகத் தெரியும். படம் முழுக்கவே அப்படித்தான். பல மொபைல்களில் ரிங்டோன்களாகவும், காலர்ட்யூன்களாகவும் ஆக்கிரமித்தார் யுவன். 

`பில்லா' படத்தின் கதைக் கருவுக்குச் சொந்தக்காரர் சலீம்-ஜாவத் என்ற இருவர். இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களுள் இவர்களும் அடங்குவர். இருவரும் சேர்ந்து 1971 முதல் 1987 வரை படங்களில் பணியாற்றியுள்ளார்கள். அதில் 1978-ல் அமிதாப் பச்சனின் நடிப்பில் அதிரிபுதிரி ஹிட்டான `டான்' படமும் ஒன்று. இந்தக் கதையை மையமாக வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் படமாக்கப்பட்டது. பழைய கதை, ஏற்கெனவே பார்த்த படம். இருப்பினும், இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திய விதம்தான் தாறுமாறு தக்காளி சோறு. வாழ்த்துகள் பில்லா, டேவிட் பில்லா! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்