“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி | Politics is my first preference than my marriage, says Varalaxmi

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (16/12/2017)

கடைசி தொடர்பு:17:02 (16/12/2017)

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், யோகிபாபு  நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'சத்யா'. கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருவதால், படத்தின் இயக்குநர் பிரதீப் மற்றும் குழுவினர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, "இந்த வருடம் எனக்கு வெற்றியாக அமைந்த இரண்டாவது படம், சத்யா. 'விக்ரம் வேதா' பிறகு 'சத்யா' என இரு திரைப்படங்களிலும் எனது கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு ரசிகர்களுக்கு நன்றி. சமீப நாள்களில் எதிர்மறை விமர்சனங்களே இல்லாத ஒரு படமாய் 'சத்யா அமைந்தது” எனத் தெரிவித்தார்.

சத்யா

பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் வரலட்சுமி :

உங்களின் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிபெற்று வருவதை எப்படி உணர்கிறீர்கள்?

“இந்த வருடம் நல்ல வருடமாக எனக்கு அமைந்தது. தமிழில்  'சத்யா' மற்றும் 'விக்ரம் வேதா' வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி மம்மூட்டி அவர்களுடன் நடித்துள்ள ' மாஸ்டர் பீஸ்' மலையாளத்தில் வெளியாகவுள்ளது. ‘விக்ரம் வேதா’ படத்தில் எனது சந்திரா கதாபாத்திரமும், 'சத்யா' படத்தில் வரும்  ஏ.சி.பி கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது."

வரலட்சுமி அரசியலில் இறங்குவது உண்மையா?

“நான் அரசியலில் இறங்கவில்லை. துணை முதல்வரை சந்தித்தது எனது 'சேவ் சக்தி' மனு தொடர்பாகவும்,  அதன் பேரில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை விசாரிக்கவும்தான். அதை தவிர வேற எந்த ஒரு நோக்கமும் இல்லை. இந்த நேரத்தில் நான் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என எந்தக் கட்சியிலும் இல்லை. எனது அப்பா கட்சியிலும் நான் இல்லை. நான் அப்படி கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக அனைவருக்கும் அறிவிப்பேன்’’

வரலட்சுமி

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு சேவ் சக்தி அமைப்பு ஒரு கருத்தும் கூறவில்லையே?

“கருத்துக் கூறுவதால் என்ன நடக்கப்போகிறது. அனைவருக்கும் இங்கே கருத்து இருக்கிறது. எனக்கு எதையும் சொல்வது பிடிக்காது. நான் செய்து முடித்து விட்டு சொல்கிறேன்.’’     

உங்களுக்கு இந்த வருடம் வந்த எந்தப் படத்திலும் நீங்க ஹீரோயின் இல்லையே? 

“பொதுவாக 4 பாடல்கள் பாடி, கதாநாயகனுடன் காதல் செய்தால்தான் ஹீரோயின் என்று இல்லை. எந்த கதாபாத்திரமாக  இருந்தாலும் நடிக்க வேண்டும், அதுதான் ஒரு நடிகருக்கு தேவை. என்னைப் பொறுத்தவரை என் கதாபாத்திரங்கள் எல்லாம் கதாநாயகிதான். மேலும், ஒரு வயதிற்கு மேல் கதாநாயகியாக நடிக்க முடியாது. ஆனால் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் அப்படி இல்லை. 'சத்யா'  படத்திலும் எனது போலீஸ் கதாபாத்திரம் இல்லையென்றால் கதை நகராது. அந்தவகையில் கதாநாயகி என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன்.’’   

வரலட்சுமிக்கு எப்போ கல்யாணம்?

“நான் இப்போதைக்கு  சந்தோஷமாக  இருக்கிறேன். கல்யாணம் பற்றி எதற்குப் பேச வேண்டும். கல்யாணம் நடக்கும்போது அனைவருக்கும்  கண்டிப்பாகக் கூறுவேன். மேலும், நீங்கள் கூறுவதுபோல் அரசியலில் இறங்க வேண்டும் அதற்குபின்தான் திருமணம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close