‘ப்யூர் ஹார்ட்ஸ்’ முதல் ‘ஐயம் எ கில்லர்’ வரை..! - சென்னை திரைப்பட விழா ஸ்பெஷல் #CIFF2017 | Chennai international film festival today movies

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (17/12/2017)

கடைசி தொடர்பு:22:21 (17/12/2017)

‘ப்யூர் ஹார்ட்ஸ்’ முதல் ‘ஐயம் எ கில்லர்’ வரை..! - சென்னை திரைப்பட விழா ஸ்பெஷல் #CIFF2017

15-வது சென்னை திரைப்பட விழாவின் மூன்றாவது நாளான இன்று, திரையிடப்படவுள்ள சிறந்தப் படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்...

1) Pure Hearts

Pure Hearts

இத்தாலி மொழியில் இந்தாண்டு மே மாதம் வெளியான திரைப்படம் ‘ப்யூர் ஹார்ட்ஸ்’. ஆக்னஸ் ஒரு பதின் பருவப் பெண். அவரின் அம்மா, தீவிரமாக கிறிஸ்த்துவ மதத்தைப் பின்பற்றுபவர். அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திருமணம் ஆகும்வரை யாருடனும் இணை சேர மாட்டேன் என்று உறுதியளிக்கிறார் ஆக்னஸ். ஆனால், ஸ்டெஃபானோவைப் பார்த்தபோது, இந்த உறுதிமொழியை மீறுகிறார். இதன் பிறகு, அவர் எடுக்கும் ஒரு முக்கிய முடிவுதான் படத்தின் ஹைலைட். சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள இந்தப் படம், இன்று பகல் 2:00 மணிக்கு தேவி தியேட்டரில் திரையிடப்படுகிறது.

2) Paula

Paula

20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவரான ஜெர்மனியைச் சேர்ந்த பெளலா பெக்கரின் வாழ்க்கையை புனைவுடன் சுவாரஸ்யமாக திரையில் காட்டும் படம் ‘Paula’. 2016-ல் எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் உலகத் திரைப்பட விழாக்களில் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு வருகிறது என்பதே, இந்தப் படைப்பின் குவாலிட்டியை வெளிப்படுத்துகிறது. ஓவியங்களில் பல்வேறு கூறுகளை அறிமுகப்படுத்தியவரும், அவர் காலத்தில் முன்னோடியுமாக திகழ்ந்த ஒரு ஆற்றல் மிக்கப் பெண்ணைப் பற்றியுமான படம் இது. பயோ-பிக் போன்ற படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இது உங்களுக்கானது. தேவி தியேட்டரில் பிற்பகல் 4.30 மணிக்கு இந்தப் படம் திரையிடப்படும்.

3) No Date, No Signature

No Date, No Signature

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்காகவும் சிறந்த இயக்குநருக்காகவும் விருதுகளை அள்ளிய ஈரானியத் திரைப்படம் ‘No Date, No Signature’. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர், சில நாள்களுக்கு முன்னர் அவருக்கு அறிமுகமான சிறுவன், பரிசோதனை அறையில் பிணமாகக் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த சிறுவனை எப்படி, எதனால் தெரிந்திருந்தது. இதுதான், 'No date, No signature' படத்தின் அட்டகாசமான ஒன்-லைன்.

4) The Great Buddha

The Great Buddha

ஒரே கம்பெனியில் மிக சுமாரான வேலை செய்யும் இரு நண்பர்கள் பிக்கல் மற்றும் பெல்லி பாட்டம். இருவரும், இரவில் டி.வி பார்த்துக் கொண்டு, ஏதாவது நொறுக்குத் தீனியை கொரித்துக் கொண்டே பேசுவது அவர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டு டி.வி உடைந்துவிடுகிறது. இதன் பிறகு, அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் `The Great Buddha' படத்தின் ஹை-லைட். ஒரு வித்தியாசமான திரையனுபவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறீர்கள் என்றால், இதுவே உங்கள் பசிக்குத் தீனி...  அண்ணா திரையரங்கின் இன்று மதியம் 2:00 மணிக்கு The Great Buddha-வைப் பார்க்கலாம்.

5) I'm a Killer

I'm a Killer

1970-ம் ஆண்டுகளில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், ‘I'm a Killer’. துப்பறிவாளனாக வேலை செய்யும் ஒரு இளைஞன், போலீஸ் ஹெட் ஆன பின்னர், பெண்களை தொடர்ந்து கொலை செய்யும் `சீரியல் கில்லரான', 'The Silesian Vampire'-யை பொறி வைத்துப் பிடிக்கும் த்ரில்லர் படம்தான் I'm a Killer'. இன்று இரவு 7.15க்கு தேவி பாலா திரையரங்கில் இது ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்