போர்ச்சுகலிலிருந்து வந்திருக்கும் ஒரே படம்... சென்னைத் திரைப்பட விழாவில் இன்று! #CIFF2017 | Movies to watch out today in Ciff

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (19/12/2017)

கடைசி தொடர்பு:15:14 (19/12/2017)

போர்ச்சுகலிலிருந்து வந்திருக்கும் ஒரே படம்... சென்னைத் திரைப்பட விழாவில் இன்று! #CIFF2017

15-வது சென்னைத் திரைப்பட விழாவின் முதல் பாதி நிறைவடைந்துள்ளது. இதுவரை சில அட்டகாசமான திரைப்படங்களையும், சில நெகிழ்ச்சியான சினிமாக்களையும் பார்த்தோம். கடைசி மூன்று நாள்களிலும் உணர்வுகளுக்கு விருந்தளிக்க நிறைய படைப்புகள் காத்திருக்கின்றன. இன்று அவற்றில் ஸ்பெஷல் என்னென்னவென்று பார்ப்போம்...

Negar (2017)

Negar

நேகரின் தந்தை தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஆனால், தன் தந்தை சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தார், அவர் எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று நேகர் நினைக்கிறார். இதனால், போலீஸின் வாதத்தை ஏற்க மறுத்து, தானாக புலனாய்வு செய்ய ஆரம்பிக்கிறார் நேகர். இதன் மூலம் அவர் கண்டுபிடிக்கும் உண்மைதான் `Negar' படத்தின் மீதிக் கதை. இன்று 4:30 மணிக்கு Negar அண்ணா திரையரங்கில் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. ஈரான் படம் என்பதால், நல்ல திரைமொழி கொண்ட படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Nothing Factory (2017)

The Nothing Factory

உலகம் முழுக்க அடுத்த பத்தாண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கப்போகும் பிரச்னை வேலையிழப்பு. இந்த விஷயத்தை டீல் செய்திருக்கும் படங்கள் சர்வதேச அளவில் மிகச் சொற்பமே. இப்படிப்பட்ட ஒரு சமகால பிரச்னையைக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குத் திரைக்காவியமாக வடித்திருக்கும் படம் `The Nothing Factory'. போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்த ஆண்டு சென்னைத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே படம் `The Nothing Factory'. கிட்டத்தட்ட உலக அளவில் மதிக்கப்படும் முக்கியமான திரைப்பட விழாக்கள் அனைத்திலும் ஏதோ ஒரு பிரிவில் விருது வாங்கிய திரைப்படம் இது. கண்டிப்பாக மிஸ் பண்ணாதீங்க. கேசினோவில் இன்றிரவு 7:00 மணிக்கு இந்தப் படம் திரையிடப்படுகிறது.

A Man of Integrity (2017)

A Man of Integrity

இதுவும் ஒரு ஈரானியத் திரைப்படமே. கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் இயக்குநர் மொகமத் ரசூல்ஃப்க்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு திரைப்பட விழாவின் `டோன்ட் மிஸ்' லிஸ்ட்டில், `A Man of Integrity'-யை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஈரானிய சமூகத்தில் இருக்கும் ஊழலைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் செவிட்டில் அடித்தாற் போல் உரைக்கவைக்கும் திரைப்படம் A Man of Integrity. இன்றிரவு 7:00 மணிக்கு இந்தப் படம் தேவி திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.

Barrage (2017)

Barrage

பத்து ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தன் மகள் ஆல்பாவைப் பார்க்க வருகிறார் கேதரின். இருவருக்குமான பிணைப்பை வளர்த்துக்கொள்ள ஆல்பாவை கடத்தி, வட திசையில் இருக்கும் ஒரு ஏரிக்குக் கொண்டு செல்கிறார் கேதரின். இப்படி அம்மா - மகள் பாசத்தைச் சொல்லி நம்மை உருக வைக்கக் கூடிய படம்தான் `Barrage'. லக்சம்பர்க் என்ற மிகக் குட்டி ஐரோப்பிய நாட்டில் தயாரான படமான Barrage-யை இந்தத் திரைப்பட விழாவில் பார்ப்பதே ஓர் அறிய வாய்ப்புதான். அந்நாட்டின் கலாசாரத்தை தெரிந்துகொள்ள, இந்தப் படம் கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்கலாம். Barrage-யை இன்று பிற்பகல் 2:00 மணிக்கு, தேவி திரையரங்கில் பார்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்