“கெளதம் மேனன் சாருக்கு ஒரு சவால்!’’ - ஜனனி ஐயரின் தில்

“என்னைப் பார்த்தால் பாதி பேர் நான் ஒரு மலையாளி வீட்டுப் பொண்ணுனு நினைச்சுக்கிறாங்க. பாஸு, நான் பக்கா தமிழ்ப் பொண்ணுதான்...’’ என்று பேச ஆரம்பிக்கிறார் பலூன் படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருக்கும் நடிகை ஜனனி ஐயர். 

ஜனனி ஐய்யர்

“தெகிடி படத்துக்குப் பிறகு,  ஒரு சில வருடங்கள் மட்டும் நான் தமிழில் சின்ன கேப் விட்டுருந்தேன். ஏன்னா, மலையாளத்தில் தொடர்ந்து சில படங்கள் பண்ண வேண்டிருந்தது. அங்கேயும் எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது. ஆனால், எப்போதும் எனக்குத் தமிழ்ப் படங்கள்தான் ஸ்பெஷல். 'அவன் இவன்' படத்தில் நாயகியாக அறிமுகமாவதற்கு முன்பாகவே தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சின்ன ரோல் பண்ணியிருப்பேன். இருந்தாலும் என்னை சினிமா உலகிற்கு பெரிய அளவில் காட்டிய பாலா சாரை மறக்க மாட்டேன்.

அவருடைய டைரக்ஷனில் நடிக்கணும்னு எல்லா நடிகைகளுக்கும் ஆசையிருக்கும், அது எனக்கு ஆரம்பித்திலேயே அமைந்துவிட்டது. அதே மாதிரி கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கு. 'கெளதம் மேனன் சார்... உங்க படத்துல என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணி, என்னை நல்லா நடிக்க வெச்சு லைக்ஸ் வாங்கிக் கொடுங்க...  இது நான் உங்களுக்குக் கொடுக்கிற செல்ல சவால்' - இதை பார்த்துட்டு கெளதம் சார் என்னை அவர் படத்தில் நடிக்க வெச்சா சந்தோஷம்தான்.

அவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோயின்ஸ் எல்லாரும் அதிர்டசாலிகள். ஏன்னா, ஹீரோயின்ஸ் எல்லாரையும் ஸ்கீரினில் காட்டும் போது ரொம்ப அழகாக காட்டுவார். பலூன் ஒரு பேய் படமாக இருந்தாலும் அது கமர்ஷியல் படமாகவும் இருக்கும். இதுவரைக்கும் பேய் படம் நான் பண்ணியதில்லை. இந்தப் படத்தில் காதல், காமெடி, த்ரில்லர் என எல்லாமே இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன். 

படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் நான் வந்தாலும், படத்துக்குத் தேவையான முக்கியமான கேரக்டரில் வருவேன். ஒரு பீரியட் லுக்கில் இந்தப் படத்தில் தோன்றுவேன். பாவடை, சட்டை போட்டு என்னை நான் அதிகமாகப் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் என்னை அப்படி பார்த்த போது எனக்கே ரொம்ப பிடித்திருந்தது. செண்பகவள்ளி என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறேன். பெரிய இடத்துப் பெண்ணாக வருவேன். 

ஜெய் பலூன் விற்கும் பையனாக வருகிறார். எங்களுக்குள் இருக்கும் காதல் சீன்ஸ் படம் பார்ப்பவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வருகின்ற சீன்ஸ் படத்தில் இல்லையென்றால் பலூன் படமே இல்லை என்று சொல்லலாம். நம்ம எவ்வளவு நேரம் படத்தில் வருகின்றோம் என்பது முக்கியமில்லை. எப்படி வருகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்காகதான் டைரக்டர் இந்த ஸ்டோரி சொன்னவுடன் ஓகே சொன்னேன்.  'பலூன்' படத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு இன்னும் ஸ்ட்ராங்கான கேரக்டர் வரும் என்று எதிர்பார்க்கிறேன். 

ஜனனி ஐய்யர்

ஜெய் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய 'ராஜா ராணி', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து ரசித்திருக்கிறேன். ஸ்பாட்டுக்கு வந்தவுடன் கதையில் என்ன இருக்கோ அதை அழகாக உள்வாங்கி கொண்டு நடிப்பார். அவருக்கு இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்கனு டைரக்டர் சொல்லி தரவேண்டியதே இல்லை. இந்தப் படத்திலும் ஜெய் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி பையனாக நடித்திருக்கிறார். 

அஞ்சலிகூட எனக்கு இரண்டு நாள் மட்டும்தான் ஷூட் இருந்தது. அப்போதே நாங்கள் நல்ல ஜெல் ஆயிட்டோம். இப்போது புரோமோஷன் வேலைக்காகப் போகும் போது நல்லா பேசுற அளவுக்கு ஒன்றாகிவிட்டோம். 

இந்த வருஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். வருஷ தொடக்கத்தில் 'அதே கண்கள்' படம் ரிலீஸ் ஆச்சு. இப்போது வருடம் முடியும் போது 'பலூன்', 'விதி மதி உல்டா' என இரண்டு படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகப்போகுது. இப்ப ஹாப்பியா இருக்கேன். 'விதி மதி உல்டா' படத்தில் என்னை சுற்றிதான் கதை நகரும். படத்தில் காமெடி நிறைய இருக்கும். அறிமுக இயக்குநர் ஒருவர் டைரக்‌ஷன் செய்திருக்கிறார். படம் நல்லாயிருக்கும். என்னுடைய இரண்டு படங்களையும் தியேட்டரில் போய் பாருங்க’’னு சொல்லி முடித்தார் ஜனனி ஐயர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!