“அது ‘காதலும் கடந்துப்போகும்’... இது ‘காதலும் கவுந்துபோகும்’..!” ‘டைட்டானிக்’ சுவாரஸ்யம் சொல்லும் சி.வி.குமார் | Producer C.V. Kumar on his new Rom-com film 'Titanic'

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (29/12/2017)

கடைசி தொடர்பு:17:50 (16/01/2018)

“அது ‘காதலும் கடந்துப்போகும்’... இது ‘காதலும் கவுந்துபோகும்’..!” ‘டைட்டானிக்’ சுவாரஸ்யம் சொல்லும் சி.வி.குமார்

டைட்டானிக்

2017ல் கிட்டத்தட்ட 200 தமிழ்ப் படங்கள்  வெளியாகியுள்ளன. தினமும் ஒரு படத்தின் செய்தி வெளியாகிவருகின்றது. அப்படி, அதில் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்குகளில் சில மட்டுமே நம்மைக் கவர்கின்றன. அப்படி சமீபத்தில் டிரெண்டிங்காக இருந்த, 'டைட்டானிக்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 2017-ல் ‘அதே கண்கள்’, ‘மாயவன்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சி.வி.குமார், மீண்டும் தயாரிப்பில் களம் இறங்குகிறார். தனது அடுத்த படத்திற்கு 'டைட்டானிக்' என சுவாரஸ்யமான டைட்டில் வைத்துள்ளார். 

கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்குகிறார். 'தெகிடி', 'சேதுபதி' படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். டைட்டில் கார்டில் 'டைட்டானிக்' என இருக்க, அதன் கீழே  'காதலும் கவுந்து போகும்' எனப் பளீர் கேப்ஷன் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்கள். நமது க்யூரியாசிட்டிக்குத் தீனிபோட, படத்தின் சுவாரஸ்யங்களைப் பகிர்கிறார், தயாரிப்பாளர் சி.வி.குமார்.  

" 'மாயவன்' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ஜானகிராமனுக்கு முதல் படம். அவர் இப்படத்தின் கதையைக் கூறும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இது ஆடியன்ஸுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். இன்றைய ஸ்மார்ட் போன் காலகட்டத்தில் காதல் என்ற உணர்வு எப்படிப் பார்க்கப்படுகிறது, ரிலேஷன்ஷிப், பிரேக்-அப்... என எல்லாவிதமான விஷயங்களையும் செம ஜாலியாகச் சொல்லவிருக்கிறோம். 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' என்ற கேப்ஷன் இந்தக் கதைக்கான பெயரே தவிர, இப்படத்திற்கும் எனது முந்தைய படமான 'காதலும் கடந்து போகும்' படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தக் கதைக்கு அந்தத் தலைப்பு எப்படிச் சரியாக இருந்ததோ, அதேபோல 'டைட்டானிக்' படத்திற்கும் 'காதலும் கவுந்து போகும்' என்ற கேப்ஷன் மிகக் கச்சிதமாக இருக்கும். 

ஒரு ரொமான்டிக் படத்திற்குப் பாடல்கள் மிகவும் முக்கியம். 'தெகிடி' படத்திற்குப் பிறகு நிவாஸ்.கே.பிரசன்னா இப்படத்தில் எங்கள் நிறுவனத்தின் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். 'விண்மீன் விதையில்...' பாடல் எப்படி ரசிகர்களைக் கவரும்வகையில் இருந்ததோ, அதைவிட இருமடங்கு 'டைட்டானிக்' படத்தின் பாடல்கள் இருக்கும். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. முன்னரே கூறியதுபோல காதலின் ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் ஒரு பாடல் விதம், படத்தில் இருக்கிறது. 'ஆண்பாவம்' படத்தில் வரும் 'காதல் கசக்குதய்யா...' பாடல் போல ஒரு பாடல் இதில் உள்ளது. கண்டிப்பாக இந்த ஆல்பம் ஹிட் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டு அன்று வெளியிடப்படவுள்ளது." என்ற சி.வி.குமாரிடம், '' 'மாயவன்' படத்திற்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் எண்ணம் இல்லையா?' என்றேன்.

"அடுத்து எந்தமாதிரியான படம் இயக்குவது எனப் பெரிய குழப்பம் இருக்கிறது. அதில் ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து இயக்க வேண்டியதுதான். விரைவில் அதற்கான அறிவிப்பும் வரும். தற்போதைக்கு 'டைட்டானிக்' திரைப்படம் மீதுதான் என் முழு கவனமும் இருக்கிறது" என்கிறார், சி.வி.குமார்.


டிரெண்டிங் @ விகடன்