Published:Updated:

ரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..! சாண்டியின் விசேஷ ஷேரிங்ஸ்

பிர்தோஸ் . அ
ரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..! சாண்டியின் விசேஷ ஷேரிங்ஸ்
ரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..! சாண்டியின் விசேஷ ஷேரிங்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஃபேமஸான நடிகை ஓவியாவை, தமிழ்நாட்டின் டார்லிங் காகவே பார்க்கின்றனர் ரசிகர்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவை தேடி, பல படவாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் 'காஞ்சனா- 3' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஓவியா, புத்தாண்டு தினத்தில் சிம்பு இசையமைத்த 'மரண மட்ட' என்ற பாடலைப் பாடி வைரல் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறார். பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார். 'மரண மட்ட' பாடல் குறித்து, சாண்டியிடம் பேசினேன்.  

“என் வாழ்க்கையில் முக்கியமான நபர், சிம்பு. சினிமாவில் இன்று நான் டான்ஸ் மாஸ்டராக  இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். 'சிலம்பாட்டம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். ஆனால், அந்தப் படத்தில் என்னால் பணிபுரிய முடியவில்லை. அந்தப் படத்தில் 'நலம்தானா' பாடலுக்கு நான்தான் நடனம் அமைப்பதாக இருந்தது. சிம்புவும் அதை விரும்பினார். ஆனால், அந்த நேரத்தில் என்னால் டான்ஸ் மாஸ்டர் கார்டு வாங்கமுடியவில்லை.  

பிறகு, எனக்கு டான்ஸ் மாஸ்டர் கார்டை சிம்புதான் எடுத்துக்கொடுத்தார். அவருடைய 'வாலு' படத்தில் எனக்கு வாய்ப்பும் கொடுத்தார். சிம்பு அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்; நல்ல மனிதர் அவர். எல்லோரும் முன்னேற வேண்டுமென்றுதான் நினைப்பார். எனக்கு ரஜினி சார் படத்தில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்க வேண்டுமென்று ஆசை. அந்த வாய்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. ‘காலா’ படத்தில் இரண்டு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்திருக்கிறேன். இரண்டு பாடல்களும் வேற லெவலில் இருக்கும். 'காலா' படத்தில் முதலில் ஒரு பாட்டுக்கு மட்டும்தான் நான் டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தம் ஆனேன். பிறகு இரண்டாவது பாடலுக்கும் டான்ஸ் அமைக்கும் வாய்ப்பை ரஞ்சித் அண்ணா கொடுத்தார். இதற்குமேல், 'காலா' படத்தைப் பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாது." என்றவரிடம், 'மரண மட்ட' பாடல் பற்றிக் கேட்டோம்.

“ஓவியா கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பெயர் மற்றும் நாயகன் பற்றி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், படத்துக்கு சிம்புதான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஓவியா பாடினால் நன்றாகயிருக்கும் என்று சிம்பு ஃபீல் பண்ணினார். அதனால், பப்பில் இடைபெறும் நியூ இயர் பாடலை ஓவியாவைப் பாட வைத்தார். நியூ இயரின்போது இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டோம். மரண மட்ட' என்று பெயரிட்டிருக்கும் இந்த சிங்கிள் ட்ராக்கிற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்தப் பாடலின் புரோமாவுக்காக சிம்பு, என்னை டான்ஸ் ஆடச் சொன்னார். அதனால், சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டுக்கொடுத்தேன். படத்தில் இடம்பெறவிருக்கும் இந்தப் பாடலுக்கு நான்தான் நடன இயக்குநர். பப்பில் இடம்பெறும் இந்தப் பாடலின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. விரைவில் தொடங்கும்.

ஓவியாவை எல்லோருக்கும் பிடிக்கும். அவருடைய சுட்டித்தனம்தான் அதற்குக் காரணம். பாட்டு பாடும்போதும் சுட்டித் தனமாகத்தான் இருந்தார்." என்ற சாண்டி, அடுத்து பணிபுரிந்துகொண்டிருக்கும் படங்களைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். "ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்' படத்துக்கும் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்கிறேன். தற்போது என்னைத் தேடி பெரிய படங்கள் வருகிறது. புதிய வருடத்தில் முன்பைவிட உற்சாகமாக ஓடக் காத்திருக்கிறேன். கூடிய சீக்கிரமே எங்க வீட்டு சார்பாகவும் ஒரு குட் நியூஸ் காத்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என முடித்தார், டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..