Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜயகாந்த் எப்படி நடிக்கணும்னு சொல்லிக்கொடுத்தார்..!’’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா

Chennai: 

“விஸ்காம் ஸ்டூடன்ட் நான். காலேஜ் படிக்கிறவரைக்கும் சினிமாவுல ஆர்வம் இல்லை. காலேஜுக்கு வந்தபிறகுதான் சினிமாவும், புத்தகங்களும் எனக்கு அறிமுகம். எடிட்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்; ஒளிப்பதிவாளர் ஆயிட்டேன். இயக்குநர் ஆகுறதுக்கும் என் 15 வருட அனுபவம் போதும்னு நினைச்சேன், இயக்குநர் ஆயிட்டேன். முதல் படமா ஹிந்தியில ரிலீஸான 'ஜானி கட்டார் (Johnny Gaddaar)' படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னுதான் முடிவு. ஆனா, முதல் படத்தையே ரீமேக்கா பண்ணா, 'இவன்கிட்ட சரக்கு இல்லை'னு நினைச்சிடுவாங்களோனு ஒரு பயம். அதான், 'மதுரவீரன்' கதையைக் கையில் எடுத்தேன்." பொங்கல் ரேஸில் களமிறங்க, 'மதுரவீரனோ'டு காத்துக்கொண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.ஜி.முத்தையா.

'மதுரவீரன்' இயக்குநர் பி.ஜி.முத்தையா

“சண்முகப்பாண்டியனுக்கு இந்தக் கதை எப்படி செட் ஆகியிருக்கு?”

“சண்முகப்பாண்டியன் பிறந்தது மதுரை; வளர்ந்தது சென்னை. அதனால, கதைக்கு ஈஸியா கனெக்ட் ஆகிட்டார். ஏன்னா, மதுரையில இருந்து சின்ன வயசுலேயே ஃபாரீனுக்குப் போயிட்டு, 15 வருடம் கழிச்சுத் திரும்ப வர்றதுதான் 'மதுரவீரன்' கதைக்களம். மதுரை முகம், கிராமத்து லுக்... இப்படிக் கச்சிதமா செட் ஆயிட்டார், விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்."

“டிரெய்லர் வசனங்களைக் கேட்கும்போது, ‘விஜயகாந்த் - சண்முகப்பாண்டியன்’ கூட்டணியை மனசுல வெச்சு கதை எழுதுனமாதிரி இருக்கே?"

“இல்லை. கதை எழுதும்போது ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி மூணுபேர்ல ஒருத்தர் நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மூணுபேருக்கும் கதை தெரியும், மூணுபேருமே இந்தப் படத்துல நடிக்க ஓகே சொல்லியிருந்தாங்க. ராஜ்கிரண் சார்கிட்ட கதை சொல்லும்போது, 'இந்தக் கதையில உங்க கேரக்டர் பத்து நிமிடம்தான் இருக்கும்'னு சொன்னேன். 'நீ, அஞ்சு நிமிடம்தான் இருக்கும்னு சொல்லியிருந்தாலும் ஓகே சொல்லியிருப்பேன். ஏன்னா, கதை அவ்ளோ நல்லா இருக்கு'னு சொன்னார். வேற சில காரணங்களால சத்யராஜூம், ராஜ்கிரணும் நடிக்கலை. சமுத்திரக்கனி எனக்கு நல்ல பழக்கம். அவர் பண்ணது, எனக்கு இன்னும் ஈஸியா இருந்தது. அவரை இதுவரை எப்படியெல்லாம் பார்த்தீங்களோ, அப்படியெல்லாம் இருக்கக் கூடாதுனு முடிவு பண்ணேன். 'இதை சமுத்திரக்கனி சொன்னா நல்லா இருக்கும்'னு தோணும்ல... அப்படி சில வசனங்களைப் படத்துல பேசியிருக்கார்."

'மதுரவீரன்' பி.ஜி.முத்தையா

“ஹீரோயின் மீனாட்சியோட ஒரிஜினல் பெயரே இதானா, டைட்டிலுக்குப் பொருத்தமா இருக்கும்னு நீங்க வெச்சுட்டீங்களா?”

“அவங்க ஒரிஜினல் பெயரே அதுதான். படத்துல ஹீரோயினுக்கான ஸ்பேஸ் ரொம்பக் கம்மி. அதனால, புதுமுக ஹீரோயின் போதும்னு நினைச்சுட்டோம். ஆறடி உயரத்துல இருக்கிற அவங்கதான், சண்முகப்பாண்டியனுக்குப் பொருத்தமா இருந்தாங்க. சில காட்சிகளே வந்தாலும், பக்கத்து வீட்டுப் பொண்ணுமாதிரி அழகா தெரிவாங்க மீனாட்சி. தவிர, ஐந்து ஊர் சேர்ந்து நடத்துற ஜல்லிக்கட்டுதான் படத்தோட மையக்கதையா இருக்கிறதுனால, வேல.ராமமூர்த்தி, மைம் கோபி, பாலசரவணன்னு படத்துல வர்ற எல்லா கேரக்டருக்குமே தனித்துவம் இருக்கும்."

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜயகாந்த் வந்தாரா?”

“பெரும்பாலான காட்சிகளை மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற கல்லுப்பட்டி கிராமத்துல ஷூட் பண்ணோம். படத்தோட பூஜையில கலந்துக்கிட்டவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரேஒருநாள் வந்தார். தேனப்பன் சார், 'ஊரையே கட்டி ஆண்டவன் மவன் நீ... எங்கேயோ கெடந்துட்டு வர்ற'னு ஒரு வசனத்தை சண்முகப்பாண்டியகிட்ட பேசுவார். ஆனா, விஜயகாந்த் சாரை வெச்சுக்கிட்டுப் பேச, அவர் கொஞ்சம் கூச்சப்பட்டார். கேப்டனோ, 'அப்படி இல்லை தேனப்பன்..'னு சொல்லி, அந்த வசனத்தை கேப்டனே பேசி நடிச்சுக் காட்டினார். இந்த வசனம் மட்டுமில்ல, 'அப்பனுக்குப் பிறகு புள்ளைங்கிறது அரசியலுக்கு வேணும்னா சரிபட்டு வரும்... அம்புட்டுக்கும் சரிபட்டு வராது'னு வேல.ராமமூர்த்தி ஒரு வசனம் பேசுவார். படத்துல இப்படிப் பல வசனங்களை கேப்டனுக்கும், சண்முகப்பாண்டியனுக்கும் பொருத்திப் பார்த்துக்கலாம்!."

'Mauraveeran' Movie Director P.G.Muthaiah

“ ‘என்ன நடக்குது நாட்டுல...’ பாட்டு செம ஹிட். இசையில வேறென்ன ஸ்பெஷல்?"

“இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதிகிட்ட யாரோ ஒரு இயக்குநர், 'உனக்கு ஃபோக் சாங் வராது'னு சொல்லிட்டாராம். அதுக்காகவே, இந்தப் படத்துக்கு மெனக்கெட்டு மியூசிக் பண்ணியிருக்கார். படத்துல ஏழு பாட்டு இருக்கு. எல்லாமே ஒரு நிமிடம், ரெண்டு நிமிடம்னு கிராஸ் பண்ணி கதைக்கு உதவியிருக்கு. 'என்ன நடக்குது நாட்டுல...' பாட்டைப் படத்துல பார்க்கும்போது நல்லா இருக்கும். ஜனநாயக வாலிபர் சங்கத்தோட தெருப்பாட்டு மாதிரி படத்துல வரும். கண்டிப்பா, கமல் சாரோட 'நாட்டுக்கொரு சேதி சொல்ல...' பாட்டு அளவுக்கு ஹிட் ஆகும்னு நம்புறேன்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்