Published:Updated:

ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage   

க.ராஜீவ் காந்தி
ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி!  - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage   
ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage   

மலேசிய மண்ணில் கெத்துக் காட்டிவிட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளம். அந்த 'கெத்து' என்னவென்று கடைசியில் பார்க்கலாம். ரஜினி, கமல் தொடங்கி, அறிமுக நடிகர் நடிகைகள் வரை... ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்துகொண்ட இந்தக் கலைநிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ...!

கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் மலேசியா கிளம்பினார்கள், தமிழ்சினிமா நட்சத்திரங்கள். விமானமே அதகளப்பட்டது. விஷால், ஆர்யா உட்பட இளம் நடிகர்களும் நடிகைகளும் விமானத்துக்குள்ளேயே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சிவகார்த்திகேயன், சதீஷ், ஜி.வி.பிரகாஷ்... என சிலர் மட்டும் இந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை அன்று, ஒருங்கிணைப்புப் பணியை எடுத்துக்கொண்ட நடிகர் விஷால் மற்றும் கார்த்தி, பரேடு நடத்தி குழப்பங்களைச் சரிசெய்தனர். கார்த்தியும் விஷாலும் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை... சரியாகச் சாப்பிடவோ, தூங்கவோகூட இல்லை. வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்த ஹோட்டலிலேயே 'ஜெர்சி' வெளியீடு மற்றும் கிரிக்கெட் அணிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

ராமநாதபுரம் அணியின் கேப்டன் விஜய் சேதுபதி, ‘நான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததுகூட கிடையாது. அதனால, மத்தவங்க ஜெயிக்கட்டும்னு விட்டுக்கொடுத்துடுவேன்’ என்றார். திருச்சி அணியில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், சதீஷ், சூரி என சிவாவுக்கு நெருக்கமான பலர் இடம்பெற்றிருந்தனர். மேடையில், 'அணியின் ஸ்ட்ராட்டர்ஜி என்ன?' என்று கேட்டதற்கு, 'எங்க ஆள்கிட்ட ஸ்டார்ட்டர்ஜிக்கு ஸ்பெல்லிங் கேளுங்க... பார்ப்போம்' என்று சூரியைக் கோர்த்துவிட்டார் சிவகார்த்திகேயன். சூரியோ,  ‘பேட்ஸ்மேன், பவுலர் தெரியும். யார் அந்த சாட்டர்ஜினு தெரியலையே...’ என்று வெகுளியாகப் பேசி, கிச்சுகிச்சு மூட்டினார்.  

விஷால் அணியில் இருந்த சூரி, சிவகார்த்திகேயன் அணிக்கு வந்தது ஏன்? என்று கேட்க, 'எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு' எனச் சொல்ல, 'ரெண்டுபேரும் கறுத்துதானே இருக்கீங்க... இதுல என்ன வேறுபாடு?' எனக் கலாய்த்தார்கள். சூரி கடைசியாக எல்லோரையும் பார்த்து, 'டுமாரோ ஐ மிஸ் யூ’ என்றார். 'ஐ மீட் யூ' என்பதுதான், இப்படி ஆயிடுச்சு! 

கார்த்தியிடம் ‘கல்யாணத்துக்கு முன்பு காதல் இருந்ததா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘ஸ்கூல் படிக்கும்போது ஒரு லவ் இருந்தது. ஆனா, அது நிறைவேறலை’ என்று பதிலளித்தார். 'ரஜினி கட்சியின் பொருளாளர் பதவிக்குக் கூப்பிட்டா போவீங்களா?' என்ற கேள்விக்கு ‘ஒரு தொண்டனா இருந்து வேலை செய்வேன். பொருளாளர் வேலை ரொம்பக் கஷ்டம்’ என்றார். விஷாலிடம், அணியின் உத்திகள் பற்றிக் கேட்டதற்கு, ‘ஆர்யாவுக்கு இந்த வருடம் கல்யாணம் பண்ணிவெச்சிடணும். ஏன்னா, அவனே இப்போ பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டான்’ என்றார். மிர்ச்சி சிவா மற்றும் மொட்டை ராஜேந்திரனிடம் 'எல்.பி.டபிள்யூ'விற்கு விளக்கம் கேட்கப்பட்டது. " ‘எல்' ஃபார் லேடீஸ், 'பி' ஃபார் பாய்ஸ், 'டபிள்யூ' ஃபார் வாக்கிங்’ என்று ஒரு புது விளக்கம் கொடுத்தார், மிர்ச்சி சிவா.

விழாவில் முதலில் எம்ஜிஆர், சிவாஜி இருவருக்குமான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பற்றி பூச்சி முருகனும், சிவாஜி கணேசனைப் பற்றி நடிகர் ராஜேஷும் பேசினார்கள்.

முதல் போட்டி, விஷாலின் 'மதுரை' அணிக்கும், சிவகார்த்திகேயனின் 'திருச்சி' அணிக்கும் இடையே நடைபெற்றது. ஃபீல்டிங்கின்போது பந்தை எடுக்கச்சென்ற சதீஷ், சியர்ஸ் கேர்ள்ஸுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கேயே நின்றுவிட்டார். சிவா அழைத்ததும்தான் வந்தார். போட்டிக்கு முதல்நாள், தனக்கும் கிரிக்கெட்டிற்கும் சம்பந்தமே இல்லாததுபோல அப்பாவியாகப் பேசிய சிவகார்த்தியன், களத்தில் ஃப்ரொபெஷனல் கிரிக்கெட்டர் போல விளையாடி அசத்தினார். இந்தப் போட்டியில், விஷால் ஹாட்ரிக் சிக்ஸர் விலாசி, ரிட்டயர்டு  ஆனார். ஏனெனில், போட்டி விதிப்படி, ஒரு வீரர் 18 ரன்கள் எடுத்துவிட்டால் பெவிலியனுக்குத் திரும்பிவிடவேண்டும். இந்தப் போட்டியில், சிவகார்த்திகேயன் அணி வெற்றி பெற்றது.

'ரோபோ' ஷங்கர் தனது சகா கிரியுடன் சேர்ந்து 10 நிமிடங்களில் 100 குரல்களை 'மிமிக்ரி' செய்து அசத்தினார். தியாகராஜ பாகவதர் முதல் விஜய்சேதுபதி வரை... 'குரல்' கொடுத்தவர்கள், ஈ, யானைக்கும் குரல் கொடுத்து, கெத்துக் காட்டினார்கள். ரஜினி, கமல் இருவருக்குமான என்ட்ரியை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள், நடிகர் சங்கத்தினர். அரங்கத்திற்குள் மாலை 3.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்தனர் ரஜினியும் கமலும். அரங்கமே அதிர்ந்தது. 3.30 முதல் நள்ளிரவு 12 மணி வரை... சிறிதுகூட முகம் சுளிக்காமல், முழுமையான தங்கள் பங்களிப்பை விழாவுக்குக் கொடுத்தார்கள் ரஜினியும், கமலும்! 

மைதானத்துக்குள் 'பாரா கிளைடிங்' சாகசம் நடந்தது. மேடையில் சத்யராஜிடம். ‘உங்களை பாரா கிளைடிங்கில் அனுப்பினால், யாரை கூட்டிக்கிட்டுப் போவீங்க?’ என்று கேட்க, ‘பானுப்ரியா’ என்று பதிலளித்தார் சத்யராஜ். 'சத்யராஜ், பாக்யராஜ் இருவரில் யார் சீனியர்?' என்று கேட்டதற்கு, பாக்யராஜின் 'தூறல் நின்னுபோச்சு' படத்தில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டுச் சென்றதை நினைவுகூர்ந்தார் சத்யராஜ். தனது வசனங்கள் பிரபலமானதன் ரகசியத்தையும் சொன்னார். 

இயக்குநர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் செக்ஸ் பற்றிப் பேசலாம் என்று அழைக்க... பாக்யராஜ், பாண்டியராஜனை புராணம் பக்கம் கூட்டிச் சென்றார். விழாவிற்கு வந்திருந்த, சரவணா ஸ்டோர் அண்ணாச்சியிடம், 'சினிமாவில் நடிப்பீங்களா?' என்று கேட்க, 'நல்ல திரைக்கதை அமைந்தால், நடிப்பேன்' என பதிலளித்தார். (அப்புறம் என்ன இயக்குநர்களே?)

'ஜுங்கா' படத்தைப் பற்றி குறிப்பிட்ட விஜய்சேதுபதி, படத்தில் தான் ஒரு கஞ்சத்தனமான டான் என்பதைப் பதிவு செய்தார். சுயவிமர்சனம் செய்யச் சொன்னார்கள். ‘ஒரு நடிகனா விஜய்சேதுபதியை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, தொழிலை அவ்வளவு நேசிப்பான். உடம்பை மட்டும் கொஞ்சம் குறைச்சான்னா நல்லாருக்கும். ஃபிட்டா வெச்சிக்க முயற்சி பண்றான்' என தன்னைத் தானே விமர்சனம் செய்துகொண்டார், விஜய்சேதுபதி. பிறகு, 'புதிதாக சினிமாவிற்குள் வருவபர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ‘எதைப் பார்த்தும், யாரைப் பார்த்தும் பயப்படாதீங்க... நாம நேசிச்சா, சினிமா நம்மளைக் கைவிடாது. இது எல்லாருக்குமான இடம்தான்’ என்று தன்னம்பிக்கை தந்தார் விஜய்சேதுபதி. 

அஞ்சலியிடம், 'பேய் பயம்' குறித்துக் கேட்க, 'எனக்கு இருட்டைப் பார்த்தாலே பயம்' எனச் சிரித்தார், அஞ்சலி. ஶ்ரீதிவ்யாவிடம், 'சூர்யா, சிவகார்த்திகேயன்... ரெண்டு பேரோட டீம்ல எந்த டீம் ஜெயிக்கணும்?' எனக் கேட்க, 'ரெண்டுபேருமே ஜெயிக்கணும்' என சமாளித்தார். அதிதிராவ், 'சென்னை' அணிக்கு சப்போர்ட் செய்தார். நடிகர் பொன்வண்ணன் அர்ஜூனையும், விஷாலையும் பார்த்து, 'குரு - சிஷ்யன் உறவு இப்பெல்லாம் விடுபட்டுக்கிட்டே இருக்கு. ஆனா, அர்ஜூன், விஷால், பாக்யராஜ், பாண்டியராஜன் மாதிரியான ஆட்கள் அதைக் காப்பாத்திக்கிட்டே இருக்காங்க' எனப் பாராட்டிப் பேசினார். 

நட்சத்திரக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சூர்யாவின் 'சென்னை' அணியும், சிவகார்த்திகேயனின் 'திருச்சி' அணியும் மோதின. சூர்யாவின் அணி, 5 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிவா அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 60 ரன்கள் அடிக்கவேண்டிய சூழல். 'நான் இருந்திருந்தா, அடிச்சிருப்பேன். ஆனா, எனக்குப் பகல்ல விளையாடினா பிடிக்காது. வெயில் அலர்ஜி. நைட்ல மேட்ச் வைக்கச் சொல்லுங்க' என்றார். ஆனால், அந்த ஓவரில் 27 ரன்கள் வந்தது. கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவை என்ற நிலை. சிவகார்த்திகேயன் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸராகப் பறக்கவிட்டார். ஆனால், அவர் 18 ரன்கள் எடுத்திருந்ததால், 'ரிட்டயர்டு' ஆகி வெளியேறவேண்டியிருந்தது. பிறகென்ன? சூர்யாவின் 'சென்னை' அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.  

அன்று மாலை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் 'கால்பந்து வீரரா'கக் களமிறங்கினார், காமெடியன் யோகிபாபு. அவர், செம ஸ்டைலாக 'சர்வீஸ்' போட அரங்கம் அதிர்ந்தது ஏனெனில், யோகிபாபு கால்பந்துப் போட்டியில் ஸ்டேட் லெவல் பிளேயராம்!. தவிர, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் மிலிட்டரியில் வேலைக்குச் சேர்ந்து ஆறுமாதங்கள் பணிபுரிந்திருக்கிறார், யோகி. இப்போட்டியில், ஆர்யாவின் அடுத்தடுத்த இரண்டு கோல்களால் ஆர்யா அணி வென்றது.

டி.இமான், விஜய் ஆண்டனி, கிரிஷ், யுகேந்திரன், ரம்யா நம்பீசன்... எனப் பல பிரபலங்கள் பாடினார்கள். காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, ஆண்ட்ரியா, சாயிஷா, அதிதி, ராய் லட்சுமி மற்றும் பல நடிகைகள் கலர்ஃபுல் நடனம் ஆடினார்கள். சூரியும் இமான் அண்ணாச்சியும் சேர்ந்து டாக்டர்-பேஷன்ட் காமெடி செய்து கலக்கினார்கள். ஷோபனா பரதநாட்டியத்தால் அனைவரையும் கட்டிப்போட்டார். தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஹரிஹரனும் பாடி மகிழ்வித்தார்கள். ஹரிஹரன் கடைசிப் பாடலாக 'தமிழா... தமிழா...'வை எடுத்துவிட, மலேசிய தமிழர்கள் உணர்ச்சிப்பொங்க மொபைல் டார்ச் அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நட்சத்திர விழாவில் ஆச்சர்யம் ஏற்படுத்தியது, சிவகார்த்திகேயன் - ஜி.வி.பிரகாஷின் நட்பு. இருவரும் இணைபிரியாத நண்பர்களாக வலம்வந்தார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரிடமும் நடிகர் விவேக் பேட்டி எடுத்தார். கமல், ‘நான் யானையா இருந்தாக்கூட 'மதம்' பிடித்து இருக்கமாட்டேன்’ என்று சொல்ல, ரஜினி கைதட்டி ரசித்தார். முதல் மலேசியப் பயணத்தையும், 'நினைத்தாலே இனிக்கும்' அனுபவங்களையும் கமல் சொல்லும்போது, ரஜினி தாடியைக் கோதியவாறு சிரித்தார். 'நீங்கள் பேசிய வசனங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த வசனம் எது?' என்று கமலிடம் கேட்ட கேள்விக்கு, ‘'நான் எழுதி, சிவாஜி அவர்கள் பேசிய ‘வெத நான் போட்டது...' என்ற வசனம்தான்" என அழுத்திச் சொன்னார், கமல். தவிர, அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கு, ‘'வெள்ளம் வந்து எங்க ரெண்டு பேரையுமே இழுத்துட்டுப் போயிடுச்சு’' என்று ரஜினிக்கும் சேர்த்துப் பதிலளித்தார், கமல். ஆன்மிகம் முதல் அரசியல் வரை... கமலின் பேச்சை அவ்வளவு ரசித்த ரஜினி, கமல் பேசி முடித்ததும் 'வெல்டன்' என்று கட்டிப்பிடித்துப் பாராட்டினார்.

அடுத்து ரஜினி. நடிகை லதாவின் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். 'காதல்' பற்றிய கேள்விக்கு, கல்லூரிகால காதலைப் பகிர்ந்துகொண்டார். விவேக்கின் கேள்விகளுக்கு, 'நான் கமல் இல்லை; ரொம்ப மாட்டிவிட்டுடாதீங்க' என்று சொன்னபடியே பதிலளிக்கத் தொடங்கினார், ரஜினி. கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார். யோகிபாபு ரஜினியுடன் போட்டோ எடுக்க, அவரைக் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார், ரஜினி. 

விழாவில் கலந்துகொள்ளவந்த சீனியர் கலைஞர்களுக்கும், அடம்பிடித்தவர்களுக்கும் மட்டுமே 'பிசினெஸ் கிளாஸ்' ஃபிளைட் டிக்கெட். விஷால், கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் 'எகானமி கிளாஸ்' டிக்கெட்டில்தான் பயணம் செய்தார்கள். சில சீனியர் நடிகைகள் தங்களது சொந்தச் செலவில் உதவியாளர்களையும், நண்பர்களையும் அழைத்து வந்தனர். விழாவை நின்றபடியே ரசித்த சூர்யா, 'கலக்கிடீங்க' என விஷாலையும், கார்த்தியையும் பாராட்டினார். 

320 நட்சத்திரங்களை ஒரே மேடையில், ஒரே நாளில் திரட்டி... இந்த நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக, இந்த நிகழ்ச்சி 'லிம்கா சாதனை'யில் இடம்பிடித்திருக்கிறது. அதற்கான சான்றிதழை விழா முடியும் தருவாயில் பெற்றுக்கொண்டார்கள், விழாக்குழுவினர். விழா முடிந்தபிறகு, உறுப்பினர்களோடு நடைபெற்ற மீட்டிங்கில், நாசர் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினார். விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த நடிகர் நந்தா மற்றும் ரமணாவைப் பாராட்டினார்கள். 

நடிகர் சங்கத்திற்கான கட்டட வேலை பாதி முடிந்துவிட்டது. விழாவின் மூலம் கிடைத்துள்ள நிதி அதை முழுமையாக்கப் பயன்படும். ஆனால், சங்க கட்டடத்தின் உள்கட்டமைப்பு மற்றும் ஃபர்னிச்சர் செலவுகளுக்கு இன்னும் சில கோடிகள் தேவைப்படும். எனவே, அடுத்த கலை நிகழ்ச்சியை நடத்தலாம் என்கிறார்கள். எப்படியோ... சீனியர், ஜூனியர் நட்சத்திரங்களை ஒருங்கிணைத்ததிலும், சீனியர்களுக்கான மரியாதையைச் சிறப்பாகச் செய்தது என ஒட்டுமொத்தமாக 'கெத்து' காட்டி அசத்தியிருக்கிறது, தமிழ்சினிமா!

க.ராஜீவ் காந்தி