"கமல் காட்டிய 'மருதநாயகம்' டிரெய்லர்... வாவ்!" - இயக்குநர் மகிழ்திருமேனி

"கெளதம் வாசுதேவ் மேனனிடம் இணை இயக்குநராய் இருந்ததாலேயே என் படங்களில் அவருடைய பிரதிபலிப்புகள் சிலவற்றைப் பார்க்க முடியும்" என்று பேச்சைத் தொடங்குகிறார், இயக்குநர் மகிழ்திருமேனி. 'தடையறத் தாக்க' படத்திற்குப் பிறகு மீண்டும் அருண் விஜய்யை வைத்து, 'தடம்' படத்தை இயக்கியிருக்கிறார், மகிழ்திருமேனி, ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த அவரிடம் பேசினேன். 

''அருண்விஜய்யை வைத்து 'தடையறத் தாக்க' பண்ணும்போதே, அருண்விஜய் என் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். எனக்கும் அந்த ஆர்வம் இருந்தது. 'ஏதாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுங்க, படம் பண்ணலாம்' என சொல்லிக்கொண்டே இருந்தார். 'தடம்' அதை நிறைவேற்றியிருக்கிறது. இன்னும் சில நாள்களில் ஷூட்டிங் முடிந்துவிடும். 

மகிழ் திருமேனி

'தடம்' படம் என்னுடைய முந்தைய படங்கள் மாதிரி ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இல்லை. அதை முதலில் பதிவுசெய்ய விரும்புகிறேன். இந்தப் படத்தின் ஜானர், இன்வெஸ்ட்டிகேஷன் த்ரில்லர். ஒரு குற்றம், அது தொடர்பான விசாரணைகள்தாம், படத்தின் மையக்கரு. ஒரு விசாரணை நம்ம ஊரில் எப்படி நடக்குது, விசாரணையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சிகள் என்னென்ன... எல்லாவற்றையும் யதார்த்தமாக, அதேசமயம் உண்மையாக திரையில் சொல்லவிருக்கிறேன். அருண்விஜய் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்ற ரகசியத்தைக் கொஞ்சநாள் தக்க வைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதனால், அருண்விஜய் கேரக்டர் பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாது. 

'தடம்' படத்தின் கதையை நான் எழுதி முடிப்பதற்கு எனக்கு ஏறக்குறைய ஒன்றை வருடம் தேவையாக இருந்தது. இந்த இடைவெளியில் தொடர்ந்து அருண்விஜய் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார். ஸ்க்ரிப்ட் எழுதி முடித்த தருவாயில் பார்க்கும்போது,  அருண்விஜய்க்கும் 'தடம்' படத்தின் ஸ்க்ரிப்ட் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என நம்பினேன். இந்தப் படத்தில் பெப்சி விஜயனுக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கிறேன். என்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு நல்ல 'மேக் ஓவர்' கொடுக்க வேண்டுமென்றுதான் கொடுப்பேன். அது, பெப்சி விஜயனுக்கு ரொம்பவே இருக்கும்.  

என்னுடைய ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் குறைந்தது ஒரு வருடம் இடைவெளியாவது எப்போதும் இருக்கும். அதற்கு 99 சதவிகிதக் காரணம், ஸ்கிரிப்ட் மட்டும்தான். திரைக்கதைக்குத் தேவையான விஷயங்களைத் தேடுவது, அதற்கான பிற முயற்சிகள் எடுக்க எனக்கு நேரம் தேவை. அதனால்தான், 'மீகாமன்' படத்துக்கும் 'தடம்' படத்துக்கும் இடையில் சில வாய்ப்புகளை என்னால் உடனே எடுத்துக் கொள்ளமுடியாத சூழ்நிலை இருந்தது. இனி என் படங்கள் அடுத்து அடுத்து வரும். ஏனெனில், கைவசம் சில திரைக்கதைகள் 'வடிவமாக'வே இருக்கிறது.

மகிழ் திருமேனி

"கமர்ஷியல் விஷயத்தில் ஒரு புதுமை... இது உங்கள் ஃபார்முலா. முழுக்க, கமர்ஷியல் படம் பண்ணும் ஐடியா இல்லையா?" 

''கமர்ஷியல் படங்கள் எப்படி இருக்கும் என்று ஆடியன்ஸ் சிலரிடம் கேட்டால், நாலு பைட், குத்து பாட்டு, காமெடி சீன் கொண்ட பக்கா என்டர்டெயின்மென்ட் படம் என்று சொல்வார்கள். என் படங்களிலும் அதெல்லாம் இருக்கிறது. 'தடையறத் தாக்க' படத்தில் 'பூந்தமல்லிதான்...' பாடல் இருந்தது. 'மீகாமன்' படத்தில் ஒரு கிளப் பாடல் இருக்கும். அந்த வரையறைப்படி பார்த்தால், என் படங்களும் முழு கமர்ஷியல் படம்தான். என்னைப் பொறுத்தவரை கமர்ஷியல் என்பது மக்களுக்கு எது பிடிக்குதோ, எந்தப் படத்தை வந்து மக்கள் ஆராதிக்கிறார்களோ... அதுதான். அதேநேரத்தில் ஒரு படைப்பாளியாய் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கடமை இருப்பதாக நான் உணர்கிறேன். நல்ல சினிமா என்ற முயற்சியை அவர்கள் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாத்துறைக்கு வரக்கூடிய என்னைப் போன்றவர்கள், சமரசங்கள் இல்லாமல் படம் பண்ணகூடிய சாத்தியங்கள் இங்கே குறைவு. ஏதாவது ஒரு இடத்தில் தயாரிப்பாளர், ஹீரோவோடு சமரசம் செய்யவேண்டி இருக்கிறது. எனக்கு கதாநாயகர்கள்கூட அந்தமாதிரி அனுபவம் ஏற்பட்டதில்லை. அருண்விஜய்யாக இருந்தாலும், ஆர்யாவாக இருந்தாலும்."

"நல்ல திரைக்கதை கொண்ட படங்களைக் கொடுத்த உங்களுக்கு, தமிழ்சினிமா சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற வருத்தம் இருக்கா?" 

"எனக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கு என்று நான் நினைக்கிறேன். ஏன்னா, இன்றைக்கு மகிழ்திருமேனி அப்படினு சொன்னால், எந்த மாதிரியான சினிமாவை நான் கொடுத்தேன் அப்படீங்குற தெளிவு சினிமா துறையிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி... தெளிவா இருக்கு. அது எனக்கான ஒரு அங்கீகரமாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். தவிர, ஒரு படைப்பாளியுடைய பணி என்பது இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பதுதான். எனக்கான இடம் தமிழ் சினிமாவில் உருவாகிக்கொண்டு இருப்பதாகத்தான் நினைக்கிறேன்." 

"பெரிய நடிகர்களுடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?"

மகிழ்திருமேனி

"பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணக்கூடாதுனு இல்லை. என் கதைகள், என்னுடைய படைப்புகளில் இருக்கக்கூடிய சுதந்திரம் குறையாமல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். பெரிய ஹீரோக்களுடன் பணிபுரியும் சூழல் வந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், என்னுடைய இயல்பு எப்படினா, இதுவரைக்கும் நான் யாரையும் தேடிப் போனதில்லை. பெரிய நடிகர்களின் அப்ரோச்சும் எனக்கு வந்ததில்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் முயற்சிகள் எடுத்திருக்காங்க. கூடிய சீக்கிரமே இந்தக் கேள்விக்கான அவசியம் இருக்காதுனு நம்புறேன்." 

"உங்கள் படத்தில் கெளதம் மேனனின் தாக்கம் இருக்க காரணம் என்ன?"

"கெளதமுடைய பாதிப்பு நான் அறிந்தோ, அறியாமலோ என் படங்களில் நிச்சயமாக இருக்கவே செய்யும். அதேமாதிரி செல்வராகவனின் பாதிப்பும் இருக்கும். ஏன்னா, செல்வாவிடம்தான் முதலில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். 'துள்ளுவதோ இளமை' படத்தில் செல்வாவுடன் உதவி இயக்குநராய் வேலை பார்த்தேன். 'காதல் கொண்டேன்' படத்தைத்தான் செல்வா முதலில் டைரக்‌ஷன் செய்யலாம் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. தனுஷ் அப்போதெல்லாம் 'நடிக்கவே மாட்டேன்'னுதான் அடம்பிடித்தார். ஸ்கூல் படித்துக் கொண்டு இருந்த தனுஷை கட்டாயப்படுத்தி நடிக்கவைத்தார், கஸ்தூரி ராஜா சார்." 

கெளதம் வாசுதேவ் மேனன்

"கெளதம்மேனன் நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அவர் முதல் முதல்ல நடிக்க ஆசைப்பட்டது என் படத்துலதான். 'ஒரு நல்ல கேரக்டர் எழுதி எடுத்துக்கிட்டுவா, நான் நடிக்கிறேன்'னு சொன்னார். அப்போது நான் இயக்குநராக அறிமுகம் ஆகவில்லை. அப்போது, 'வேட்டையாடு விளையாடு' படத்தில் இணை இயக்குநராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதே கெளதம் எனக்கு அந்த வாக்குறுதியைக் கொடுத்தார். அவர் எப்படிப்பட்ட நடிகராக பரிமாணம் அடையமுடியும் என்பதை அவர்கூடவே இருந்ததால், எனக்கு நல்லாவே தெரியும். அவருக்கு நான் கதை எழுதினால், அவரை மட்டுமே மையப்படுத்தி எழுதுவேன். கூடிய விரைவில் அதுவும் நடக்கும்."

"கமலுடன் வேலை பார்த்த அனுபவம்?"

" 'வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங்கில்தான் கமல் சாரை நேரடியாகப் பார்த்தேன். கமலைப் பார்த்து, அவருடைய சினிமா ஞானத்தைப் பார்த்து பிரமித்த நபர்களில் நானும் ஒருவன். என்னைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது அதீதமான, மிகையான உடல் மொழி என்பதை தாண்டி... ரொம்ப சாதாரணமான, இயல்பான ஒன்று. அந்த நடைமுறை இயல்பு கமல் சார் நடிப்பில் இருக்கும். 

கமல்

 

'வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் கமல் நல்லா தூங்கிட்டு இருப்பார். அப்போது அவருக்கு ஒரு போன் வரும், தூக்கத்திலேயே பேசுவார். அப்போது, அவருடைய குரல் கரகரப்பாக இருந்தது. இதை டப்பிங்கில் செய்யவேண்டிய விஷயம். அதைக்கூட கமல் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்தார்.  தவிர, இந்தப் படம் எனக்கு இனிமையான நினைவைக் கொடுக்கும். ஏன்னா, பல உதவி இயக்குநர்கள் இருந்தாலும், கமல் சார் என்னிடம் நெருக்கமாகப் பழகினார். அவரிடம் ஏதாவது ஒரு விஷயம் சொல்லவேண்டுமென்றால்கூட கெளதம் என்னிடம் சொல்லித்தான் சொல்லச் சொல்வார். ஒரு நாள் 'மருதநாயகம்' டிரெய்லரை எனக்குப் போட்டுக் காட்டினார். அந்தக் காட்சிகளை இப்போ நினைக்கும்போதும் ஆச்சர்யமா இருக்கு."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!