``கூட்டத்தில் ஒருத்தன்' டு `ரொம்ப பிடிச்ச ஹீரோ' கதை சொல்ட்டா சார்..?’ #HBDVijaySethupathi

தமிழ் சினிமா பல்வேறு விதமான கலைஞர்களை சந்தித்திருக்கிறது. ஆனால், தனக்குப் பிடித்தமான நெருக்கமான மிகச் சிலரை மட்டுமே உச்சத்திற்கு அழைத்துச் சென்று அழகு பார்க்கும். அந்த மிகச் சிலர் பட்டியலின் அப்டேட் வெர்ஷன்தான் விஜய் சேதுபதி. அக்கௌன்டன்ட்டாக தன் கரியரைத் தொடங்கிய இவரை, கலை ஆர்வமும் சினிமாவின் மீதான தீராக் காதலும் கோடம்பாக்கத்துக்கு  அழைத்து வந்தன.

விஜய் சேதுபதி

'புதுப்பேட்டை', 'லீ' போன்ற சில பல படங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் முகம் மட்டும் தெரியுமளவு கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருந்த இவர் மனதில் நம்பிக்கையும் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்ற கனவும்தான் இருந்தது. எவ்வளவு போராடியும் தன்னை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் போக, மனம் தளர்ந்து பழைய வேலைக்கே போயிடலாம் என்று எண்ணியவருக்கு வந்த ஓர் அழைப்பு இவர் வாழ்க்கையின் டர்னிங் பாயின்ட் என்றே சொல்லலாம். அந்த அழைப்பை ஏற்று 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக நடித்த பிறகு, இவர் பக்கம் காத்து வீச ஆரம்பிக்க அடுத்தது எல்லாம் ஏறுமுகம் தான். 'சுந்தரபாண்டியன்' படத்தில் நட்புடன் வன்மமும் கலந்த வில்லனாக யதார்த்தமாக வந்து போனார். தம் குறும்பட நண்பர்களோடு களத்தில் இறங்கி மெர்சல் காட்டினார் 'பீட்சா'வும் கையுமாக. இதனைத் தொடர்ந்து, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் இவரது யதார்த்த நடிப்பும், 'விட்டேனா...', 'ப்ப்ப்ப்பா' போன்ற வசனங்களும் இவரை மேலும் ஒரு படி மக்கள் மனதில் நிற்க வைத்தன.   

விஜய் சேதுபதி

'சூது கவ்வும்' படத்தில் வெள்ளை முடி, அழுக்கு உடை என பயங்கரமான சேஞ்ச் ஓவர் கொடுத்த இவரை பாராட்டாத ஆளில்லை. இவர் கிட்னாப்பிங் வகுப்பு எடுக்கும் காட்சியும், அதை செயல்படுத்தும் விதமும் இவரை ஒரு ட்ரெண்ட் செட்டராக்கியது என்றே சொல்லலாம். சந்தோஷ் நாராயணனின் பி.ஜி.எம்மிற்கு இவர் நடந்து வரும் அழகிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 'குமுதா ஹாப்பி அண்ணாச்சி' என்று இவர் பேசிய வசனம் ஒவ்வொன்றிற்கும் பட்டி தொட்டிகள் தோறும் விஜய் சேதுபதியின் விழுதுகளாக இளைஞர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். படத்தில் இவரது மாடுலேஷன், உடை, கள்ளங்கபடமில்லாத பேச்சு என சுமார் மூஞ்சி குமாருக்குக் கிடைத்த லைக்ஸ் அபாரமானது. உண்மையில் ஆடியன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? 

விஜய் சேதுபதி

இதனைத் தொடர்ந்து, 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' என கிராமத்து இளைஞனாக 'சி' சென்டர்களில் ஸ்கோர் செய்தார். 'பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை' படத்தில் எமலிங்கமாக வரும் விஜய் சேதுபதியின் நடிப்பு, வெகுஜனங்களால் பாராட்டைப் பெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடுதலும், இறுதியில் இவர் மனநலம் பாதித்து பொம்மையுடன் பேசி, சல்யூட் சொல்லும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளினார் மக்கள் செல்வன். மீண்டும் வயதான வேடத்தில் கரைபடிந்த பற்களுடன் இவர் நடித்த ’ஆரஞ்சு மிட்டாய்’ பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் எப்படி திடீரென்று தன்னை மாற்றிக்கொள்கிறார் என்ற கேள்வியுடன் மக்கள் விஜய் சேதுபதியை ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ’நானும் ரெளடிதான்’ என்று நயன்தாராவுடன் 'காதும்மா...ஆர் யு ஓகே பேபி?' என்று இவர் பேசும் மொழிக்கும் மம்மீயை 'மீ' என்றழைக்கும் விதமும் இவரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஆர்.ஜே பாலாஜியுடனும் ராகுல் தாத்தாவுடனும் இவர் செய்த காமெடிகள் அல்டிமேட் ரகம். ’நானும் ரெளடிதான்’ என்று காமெடியில் அசத்திய இவர் தன் அடுத்தப்படத்துலேயே சேதுபதியாக வந்து ஆக்‌ஷனில் கலக்கினார். போலீஸிற்கான கம்பீரம், மனைவி குழந்தைகள் முன்னால் தானும் ஒரு குழந்தையாக மாறி 'அவ்வா அவ்வா' என்று நடனமாடும் யதார்த்தம் போலீஸ் கதையை வித்தியாசமாகக் காட்டியது. 

விஜய் சேதுபதி

'காதலும் கடந்து போகும்' படத்தில் எளிமையான தோற்றம், மடோனா செபாஸ்டியனுடன் இவரது யதார்த்தமான காட்சிகள் 'இவர் என்ன மாதிரியான நடிகர்? இவரை புரிஞ்சுக்கவே முடியலையே...' என்று யோசிக்க வைத்தது. மருத்துவ மாணவனான 'தர்மதுரை'யின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்று சீனு ராமசாமியின் படைப்பில் தேனி இளைஞனாக பட்டையைக் கிளப்பினார். 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடுத்தர இளைஞனாகவும், 'றெக்க' படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றார். 'கவண்' படத்தில் சமூக அக்கரையுடைய பத்திரிகையாளராக வரும் விஜய் சேதுபதி, தன்னுடைய ரோலை மிகச் சரியாகச் செய்திருந்தார். டி.ஆருடன் சேர்ந்து இவர் வரும் காட்சிகள் நல்ல காம்போவாக அமைந்திருந்தது. அரசியல்வாதியைப் பேட்டி எடுக்கும் போது இவர் பேசும் வசனங்களுக்கும், கலாய்க்கும் காட்சிகளுக்கும் தியேட்டர்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தன. 'விக்ரம் வேதா' படத்தில் வேதாவாக வரும் விஜய் சேதுபதியின் என்ட்ரியும் பேக் க்ரவுண்ட் ஸ்கோரும் இவரை வேற லெவலில் காண்பித்தன. 'டசக்கு டசக்கு' பாடலுக்கு இவரது நடனம் யதார்த்தத்தின் உச்சம். இதனைத் தொடர்ந்து, 'புரியாத புதிர்' படத்தில் இசைக் கலைஞன், இங்கிலீஷ் புத்தகம் படிப்பவர், கூலர்ஸ், நகரத்து இளைஞர் என விஜய் சேதுபதி கொஞ்சம் வித்தியாசமான ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார். கிராமத்து இளைஞனாக பெரிய மீசையுடன் கம்பீரமாகவும் மனைவிக்கு அன்பான கணவனாகவும் வரும் 'கருப்ப'னின் காட்சிகள் கிராமங்களில் கொடிகட்டி பறந்தது என்றே சொல்லலாம். 

விஜய் சேதுபதி

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'சூப்பர் டீலக்ஸ்', '96', 'ஜுங்கா', 'சீதக்காதி' என அதிக படங்கள் கையில் வைத்துக்கொண்டு பிஸியாகவே வலம் வரும் நடிகர்களில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. சினிமாத்துறையிலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தான் ஒரு ஹீரோ, தான் ஒரு வில்லன் என்ற எந்த ஒரு இமேஜும் தனக்காக வைத்துக்கொள்ள விரும்பாமல், கதையோடு ஒன்றி கதைக்குள் வாழ்ந்து அந்தக் கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றி திரையில் கொண்டுவரும் ஓர் அற்புத கலைஞன் விஜய் சேதுபதி. இவரது கடின உழைப்பும் சினிமாவின் மீதான காதலும்தான் கூட்டத்தில் ஒருத்தனாக இருந்த இவரை மக்கள் செல்வனாக மாற்றியிருக்கிறது. சமூக பார்வையுடனும் செயல்பட்டு வரும் விஜய் சேதுபதி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். தன் விடாமுயற்சியில் விஸ்வரூபம் அடைந்த வித்தகனுக்கு இன்று(16/01/2018) பிறந்த நாள்.

உங்களின் அடுத்தடுத்த படங்கள் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள். ஹாப்பி பர்த்டே விஜய் சேதுபதி..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!