“என் மேல் யாரெல்லாம் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை ‘அந்த’ வதந்தி காட்டியது..!’’ - பி.வாசு

கடந்த 15-ம் தேதி அன்று, இயக்குநர் பி.வாசு குறித்து கோடம்பாக்கத்தில் ஒரு பகீர் தகவல் பரவியது. வெளியான செய்திபற்றிய உண்மைத்தன்மை உணராமல், விசாரிக்காமல் அவரவர் தங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் தவறான செய்தியைப் பரப்பிவிட்டனர். இதுகுறித்தும், அடுத்த அறிவிப்புகள்குறித்தும் இயக்குநர் பி.வாசுவிடம் பேசினேன். 

பி.வாசு

“ஒரு பக்கம் தமிழ்த் திரைப்படம், இன்னொரு பக்கம் கன்னட சினிமாவிலும் பரபரப்பாகப் பணியாற்றிவருகிறேன். கன்னடத்தில், மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தையும், கணேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தையும் ஒரே சமயத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில், மிகப் பிரமாண்டமான ஒரு படத்தை இயக்குவதற்குத் திட்டமிட்டுவருகிறேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த அருமையான தருணத்தில், எம்.ஜி.ஆரையே கதாநாயனாக நடிக்கவைக்கும் முயற்சியாக, ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன். அந்தப் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும். இது, அனிமேஷன் படமல்ல... 'ரீ கிரியேட்டிவ்'! அதாவது, போட்டோ ரியலிஸம். 

எம்.ஜி.ஆர், இன்றைய முன்னணி நடிகர்களோடு எம்.ஜி.ஆராகவே நடிக்கிறார். இது, ரியாலிட்டி சினிமா. இப்போது நடித்துவரும் முன்னணி நடிகைகள், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கப்போகின்றனர். இன்று இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் அத்தனையையும் இப்படத்தில் பயன்படுத்தப்போகிறேன். உலக அளவில் பெரிய பெரிய டெக்னீஷியன்களாக உள்ளவர்ளுடன் எம்.ஜி.ஆர் படம்குறித்துப் பேசிவருகிறேன். எம்.ஜி.ஆரின் ஒரிஜினல் முகத்தை உருவாக்குவதற்கு, அமெரிக்காவிலிருந்து ஒரு பிரபலமான டெக்னீஷியனை வரவழைத்து, கடந்த ஒரு வருடமாக உழைத்து உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இப்போது தமிழ் சினிமாவில் நடித்துவரும் முக்கிய நடிகர்கள் பெரும்பாலானோர், எம்.ஜி.ஆருடன் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்துவரும் முன்னணி நடிகைகள், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக எங்கள் புதுப்படத்தில் நடிப்பார்கள்.

பி.வாசு

என் அப்பா பீதாம்பரம், எம்.ஜி.ஆருக்கு மேக்கப் போட்டவர். அப்போதெல்லாம் அவரது முகத்தை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அதிசயித்து ரசிப்பேன். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்திருக்கிறார்,  என்னை உரிமையோடு அழைத்து, அணைத்து அருகில் அமரவைத்து, என்னோடு பலதடவை உணவு சாப்பிட்டிருக்கிறார். பலமுறை அவரை அருகில் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் புது அனுபவமாக இருக்கும். இப்போது, எம்.ஜி.அர் குறித்து 'ரீ கிரியேட்டிவ்' சினிமா எடுக்கப்போகும் தயாரிப்பாளரிடம், 'இந்தப் படத்துக்கு என்னை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்று ஆச்சர்யமாகக் கேட்டேன். 'நீங்கள்தான் உங்க சின்ன வயசிலிருந்தே எம்.ஜி.ஆரின் மேனரிஸம், பாடிலாங்வேஜ்  அனைத்தையும் கவனித்து வந்தவர். அதனால்தான் சார்' என்று சொன்னார்'' என்று மகிழ்ச்சியாகச் சொன்னவரிடம், ''உங்களைப் பற்றிய வதந்தி வந்தபோது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' என்றோம்.

''நான் அப்போதுதான் ஜிம்முக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது, வீட்டுக்கு ஒரு போன் வந்தது. 'வாசு சாரிடம் பேசவேண்டும்' என்று சொன்னார்கள். நான் போனை வாங்கி, ''என்ன விஷயம்'' என்று கேட்டேன். என் குரலைக் கேட்டதும் எதிர்முனையில் இருந்தவர் அதிர்ச்சியாகிவிட்டார். அதன்பின், 'சார்தான் பேசுறீங்களா, நீங்க நல்லா இருக்கீங்களா சார், உங்களைப்பத்தி ஒரு வதந்தி பரவிக்கிட்டு இருந்துச்சு... அதான் போன் செய்தேன்'' என்றார். ''கடவுள் புண்ணியத்துல நான் நல்லா இருக்கேன்'' என்று பதில் சொன்னேன். என்மேல் எவ்வளவு  நண்பர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை இந்த வதந்தியால் உணர்ந்தேன். என் நலம்குறித்து என் உதவி இயக்குநர்களுக்கு வந்த ஆயிரக்கணக்கான அழைப்புகளைக் கண்டு பேச வார்த்தை இல்லாமல் நெகிழ்ந்துபோய்விட்டேன்” என்று உருக்கமாகப் பேசிமுடித்தார், பி.வாசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!