“விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ மேக்கப்பில் இருக்கு ஒரு ஆஸ்கர் ரகசியம்!’’ - பாலாஜி தரணிதரன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாகவும், ஒவ்வொரு படங்களிலும் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்க விரும்பும் தனித்துவம் வாய்ந்த கலைஞனாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடித்த படங்கள் வெளியாகும்போதெல்லாம் நிச்சயமாக ஏதோ ஒரு சுவாரஸ்யமும் புதுமையும் படத்தில் இருக்கும் என ரசிகர்கள் நம்பி திரையரங்குகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் 'சீதக்காதி'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதில் வயதான முதியவர் கெட்டப்பில் இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ள இயக்குநர் பாலாஜி தரணிதரனை தொடர்பு கொண்டோம்.

பாலாஜி தரணிதரன்

" 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தோட ஆடிஷனுக்கு விஜய் சேதுபதி வந்தார். அதுக்கு முன்னாடி  'வர்ணம்' குறும்படத்தில் அவர் நடிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால, என்னோட முதல் படத்துக்கு அவர் சரியா இருப்பார்னு தோணுச்சு. அந்தப் படத்தோட ஷூட்டிங்லேயே நாங்க ரொம்ப நெருக்கமாகிட்டோம். அந்தப் படம் முடியுற சமயத்துலயே 'சீதக்காதி' படத்தோட கதையைச் சொல்லிட்டேன். இந்தக் கதையில நானே பண்றேன்னு சொன்னார். அதுக்கு அப்புறம், நானும் 'ஒரு பக்க கதை' படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவரும் அடுத்தடுத்து படம் பண்ண ஆரம்பிச்சிட்டார். அப்புறம் ரெண்டு பேருக்கும் நேரம் நெருங்கி வந்தபோது, படத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சு இப்போ கடைசி ஷெட்யூல் போய்க்கிட்டு இருக்கு.

இந்தப் படம் ஒரு மேடை நாடக சூழல்லதான் ஆரம்பிக்கும். இந்தப் படத்துல வயதான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அப்பப்போ சின்னச் சின்ன சஸ்பென்ஸும் ட்விஸ்ட்டும் படத்துல இருக்கும். இந்த கேரக்டரோட மேக் அப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போனோம். அங்க ஆஸ்கர் வின்னர் கெவின் ஹேனி தான் இந்த கெட்டப்பிற்கு ஒரு அமைப்பு கொடுத்தார். அங்க போய் விக், ஸ்கின் மோல்டு எல்லாத்துக்கும் அளவு கொடுத்துட்டு வந்தோம். அதை எங்களோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து விஜய் சேதுபதிக்கு மேக் அப் போட்டது அலெக்ஸ் நோபல்னு ஒரு ஹாலிவுட் நபர்தான். இந்தக் கதைக்கு அவங்களோட உழைப்பு ரொம்ப பெரியது. இந்த மேக் அப்பை போடுறதுக்கு நாலு மணி நேரம் ஆகும். அதே போல, அந்த மேக் அப்பை எடுக்குறதுக்கு ஒரு மணி நேரமாகும். அதனால், ஸ்பாட்டுக்கு அவர்தான் முதல்ல வரணும், கடைசியா போகணுமுங்கிற மாதிரியான சூழல் இருந்துச்சு.

சீதக்காதி

விஜய் சேதுபதி இந்தப் படத்துக்காக எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார். ஒரு டைரக்டருக்கு இருக்குற பய உணர்ச்சி அவருக்கும் இருக்கும். ஒரு இயக்குநருக்கு இந்தப் படம் நல்லா வரணும்னு நினைக்குற பொறுப்பையும் பணி சுமையையும் அவர் ஷேர் பண்ணிக்குவார். எந்தளவு கதையோடு ஒன்றி இந்த கேரக்டரை பண்ண முடியுமோ அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே ஆழமா கதைக்குள்ள போயிடுவார். அது விஜய் சேதுபதிக்கு உண்டான ஒரு ஸ்பெஷல்னே சொல்லலாம். அதுமட்டும் இல்லாம இன்னைக்கு ஒரு படத்தை நடிச்சு முடிக்கிறார்னா, மறுநாளே அடுத்த படத்துல நடிக்க ஆரம்பிச்சுடுவார். இப்படி ஒரு ஆர்டிஸ்டோட 25வது படத்தை டைரக்ட் பண்றதுல ரொம்ப சந்தோசப்படுறேன்" என்றபடி விடைபெற்றார் பாலாஜி தரணிதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!