‘தாணு பண்ணதைத்தான், விஷாலும் பண்ணுவார்னா சங்கம் எதுக்கு?’ கந்துவட்டி அத்தியாயம் - 8

கந்துவட்டி

`வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ - அத்தியாயம்-7

மிழ்சினிமாவின் சொதப்பலான தயாரிப்புத் திட்டமிடலுக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘திட்டமிடல்' மட்டும்தான் ஒரு திரைப்படத்திற்கான ஆக்ஸிஜன். ஏனெனில், சினிமா என்பது கற்பனை சார்ந்த படைப்பாக இருந்தாலும், அந்தக் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் தயாரிப்பாளரின் முதலீட்டையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டியது, ஒரு படைப்பாளியின் கடமை. ஏனெனில், தெளிவான திட்டமிடல் பணப் பிரச்னைகளை மட்டுமல்ல, ஒரு படத்தின் பட்ஜெட்டையேகூட குறைக்கும்!

'பாலிவுட்டில் இருக்கும் திட்டமிடல் தமிழ்சினிமாவில் சாத்தியமானால் பல பிரச்னைகளில் இருந்து வெளியேறி, வெற்றி பெறலாம்!' என்கிறார், பாலிவுட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர். பாலிவுட் படங்கள் எப்படித் தயாராகின்றன, பாலிவுட் படங்களின் நேர்த்திக்கு என்ன காரணம் எனப் பல்வேறு விஷயங்களை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பகிர்ந்துகொள்பவர். ஹாலிவுட் படங்களில் இருக்கும் தயாரிப்பு தரம், பாலிவுட் படங்களில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் திட்டமிடல்தான். 'ரெக்கீ' எனப்படுவது, பாலிவுட் சினிமாக்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான திட்டமிடல் முறை. அதென்ன ரெக்கீ?

கந்துவட்டி  தொடர் - பாலிவுட் சினிமா

“ஷூட்டிங்கிற்கு முந்தைய திட்டமிடல்களில் ஒன்று, ரெக்கீ. திரைப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து, ஷூட்டிங் நடக்கவிருக்கும் இடத்திற்கு முன்கூட்டியே சென்று, காட்சி அமைப்பு குறித்து விவாதிப்பார்கள். படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தின் லைட்டிங் எப்படி இருக்கவேண்டும்; கேமராவின் கோணங்கள் எப்படியெல்லாம் வைக்கலாம்; பின்னணியில் என்னென்ன இருக்கவேண்டும்... என அனைத்து விஷயங்களும் 'ரெக்கீ'யில் திட்டமிடப்படும். சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு டெக்னீஷியன்களும் தங்களது வேலையை எளிமைப்படுத்திக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். தேவைப்பட்டால், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் ஷூட்டிங்கிற்கு முன்பே லொக்கேஷனுக்கு அழைத்துச்சென்று 'லைட்டிங்', 'ஆங்கிள்' ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்வார்கள். இந்தத் திட்டமிடல், ஷூட்டிங் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு மட்டுமல்ல... மிக முக்கியமாக, தயாரிப்பாளரின் செலவைக் குறைப்பதற்குத்தான்!.

தவிர, படப்பிடிப்பு நடக்கும்போதும், அவர்களது திட்டமிடல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் 'கால்ஷீட்'டில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடம், தங்கும் இடம், காட்சிகளின் எண்ணிக்கை.. என எல்லாம் இருக்கும். தமிழ்சினிமாவில் அடிக்கடி நடக்கும் 'கால்ஷீட் பிரச்னை'களுக்கு அங்கு இடம் கிடையாது. ப்ரீ-பிளானிங், ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மட்டுமல்ல, ரிலீஸ் தேதியைக்கூட முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் அங்கே திரைப்படங்கள் தயாராகிறது. ஏனெனில், ஒரு திரைப்பட உருவாக்கத்தைப் பொருத்தவரை நேரம் என்பது மிக முக்கியமான ஒன்று. எந்தளவுக்கு நேரம் மிச்சம் ஆகிறதோ, அந்தளவுக்குப் பணம் மிச்சமாகும். பாலிவுட் படங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் இது முக்கியமானது!" என்கிறார், அந்த ஒளிப்பதிவாளர். 

இந்தத் திட்டமிடல் தமிழ்சினிமாவில் எப்படி இருக்கிறது என்பதை, சமீபத்திய ஒரு தமிழ்த் திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பொங்கல் ரிலீஸுக்கு ரெடியாக இருந்த படம் அது. அந்தப் படம் மட்டுமல்ல... பல படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருந்த திட்டமிடல் சிதைந்து, 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியானது. இதில், 'குலேபகாவலி' படம்தான், மேலே சொன்ன 'ரிலீஸ் ஆகவேண்டிய' படத்தை முடக்கி, முன்னேறியிருக்கிறது. 'அராஜகத்தின் உச்சகட்டம் இது' எனப் புலம்புகிறது, ரிலீஸ் ஆகாமல் போட்டியில் இருந்து வெளியேறிய அந்தப் படக்குழு.

'குலேபகாவலி' - கந்துவட்டி தொடர்

“கடந்த இரண்டு வருடத்துல சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் 'மினிமம் கியாரண்டி' அடிப்படையில் பிஸ்னஸ் பண்ணது இல்லை. ஆனா, எங்க படத்துக்கு அந்த வாய்ப்பு தானா அமைஞ்சது. பொங்கல் ஃபீலுக்கு ஏற்ற படம்; நல்ல கதை; மிகக் குறைந்த முன்பணம்... இந்த மூணு விஷயங்களை அடிப்படையா வெச்சு, எங்க படத்தை வாங்குனாங்க விநியோகஸ்தர்கள். ஆனா, 'குலேபகாவலி' படத்தைக் கடைசி நேரத்துல ஃபீரியா தியேட்டர்களுக்குக் கொடுத்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. விடுமுறை தினங்கள் அதிகமா இருந்ததுனால, அந்தத் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு இது. தவிர, 'இது அந்தப் படத்துக்குப் பண்ற துரோகம்'னு அவங்களுக்குப் பச்சையாவே தெரியும். என்ன பிரயோஜனம்? தமிழ்சினிமாவுல இந்தத் துரோகங்கள் சகஜம். அடிக்கடி நடக்கும். நேருக்கு நேர் துரோகம் பண்ணாம, கூட இருந்தே குழி பறிப்பாங்க... இதுக்கான சரியான வழிகளை யார் யாரோ சொல்லிப் பார்த்துட்டாங்க. ஆனா, அதை நடைமுறைக்குக் கொண்டுவரத்தான் யாருக்கும் மனசு வரமாட்டேங்குது. வராது!" என விரக்தியாகச் சொல்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர். தவிர, 'குலேபகாவலி' முந்திக்கொண்டு ரிலீஸ் ஆன கதையையும் அவரே விவரிக்கிறார்.

"அந்தப் படத்தை ஒரு தனியார் டிவி சேனலுக்கு ஏற்கெனவே வித்துட்டாங்க. 'இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா சரியா இருக்கும்'னு விநியோகஸ்தர்கள் சொல்லியும் கேட்காத தயாரிப்பாளர், '' 'குலேபகாவலி' படத்தை தியேட்டர்ல போடுங்க. முன்பணம் எதுவும் வேணாம். நஷ்டம் ஆச்சுனா, அதையும் நானே தர்றேன்''னு சொல்லியிருக்கார். நிலைமை இப்படி இருக்கும்போது, எங்க படம் எப்படி ரிலீஸ் ஆகும்? இதனால என்ன ஆச்சு... எங்க படத்துக்கு நாங்க பண்ண விளம்பரச் செலவுகள் வீண்; வாங்குன கடனுக்கு வட்டி அதிகம் கட்டணும்; திரும்ப இந்தப் படத்தை ரிலீஸுக்குக் கொண்டுவர செலவு பண்ணனும்; பொங்கல் சமயத்துல இருந்த இந்தப் படத்துக்கான கிரேஸ் அப்போ இருக்குமானு யோசிக்கணும்... இப்படிப் பல சிக்கல்கள் எங்களுக்கு! இதைப்பற்றி எல்லாம் 'குலேபகாவலி' படத்தோட தயாரிப்பாளருக்கு எந்தக் கவலையும் இல்லை. 'நம்ம படம் ரிலீஸ் ஆகணும்; போட்டியில இருக்கிற படங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை'ங்கிற மனநிலை அவரோடது. 

விஷால் - தாணு - கந்துவட்டி தொடர்

'விழாக்கால விடுமுறைகளில் சின்னப் படங்களுக்கு முன்னுரிமை கொடுங்க; பெரிய படங்கள் எப்போ ரிலீஸ் ஆனாலும் ஓடும்'னு இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஒருமுறை சொன்னார். தவிர, முன்னாடியெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சம் 200 பிரிண்ட் போடுவாங்க. இப்போ டிஜிட்டல் வந்ததுக்குப் பிறகு கன்னா பின்னானு தியேட்டர்களைப் பிடிக்கிறாங்க. அந்த நடைமுறையை மாத்தி, 'பெரிய படங்களுக்கும் சரி, சின்னப் படங்களுக்கும் சரி... குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தியேட்டர்களே ஒதுக்கப்படும்'னு ஒரு ரூல் கொண்டுவரலாம். ஆனா, அதை யார் கொண்டுவர்றது? பதவியில இருக்கிறவங்க அதையெல்லாம் பண்ணவேமாட்டாங்க. இதுக்கு முன்னாடி கலைப்புலி. எஸ்.தாணு என்ன பண்ணாரோ, அதைத்தான் இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் பண்ணிக்கிட்டு இருக்கார். அதனாலதான், தாணுவோட 'ஸ்கெட்ச்' படமும், விஷால் டீம்ல இருக்கிற ஞானவேல்ராஜா தயாரிச்ச 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் எந்தப் பிரச்னையும் இல்லாம ரிலீஸ் ஆகுது. சின்னப் படங்கள் எப்படியும் போகட்டும்னு நினைக்கிற அமைப்பும், சங்கமும் எதுக்குனுதான் கேட்கத் தோணுது. 'தோரயமான ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்கணும்; ஒரு படத்துக்கு குறிப்பிட்ட திரையரங்குகளை ஒதுக்கணும்'னு விதிமுறைகளைக் கொண்டுவரும்போது, தயாரிப்பு செலவைக் குறைப்பாங்க, நடிகர், நடிகைகளோட சம்பளத்தைக் குறைப்பாங்க... இதெல்லாம் பண்ணாதான், தமிழ்சினிமா உருப்படும்!" என்கிறார், அவர்.

தமிழ்சினிமா உருப்படுமா? அடுத்த பகுதியில் பார்ப்போம்! 

`வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ - அத்தியாயம்-7

Do you like the story?

Please Appreciate the Author by clapping!