Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க ஏழு ஹீரோயின்கள் மறுத்தனர்..!” - ‘சவரக்கத்தி’ மேக்கிங் பின்னணி

“நானும் மிஷ்கின் சாரும் உடன்பிறந்தவர்கள். அவர் என்னைவிட பத்து வயது மூத்தவர். வெவ்வேறு இயக்குநர்கள்ட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்துட்டு 'அஞ்சாதே' படத்துல இருந்து மிஷ்கின் சார்ட்ட உதவி இயக்குநரா இருந்தேன். அவர்தான் என் குரு.” - ‘சவரக்கத்தி’ படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ஆதித்யனின் வார்த்தைகளில் குரு பக்தியும் சகோதரப் ப்ரியமும் ஒருங்கே வெளிப்படுகின்றன. ஹீரோ, இயக்குநர் ராம்; வில்லன், இயக்குநர் மிஷ்கின் என்ற இந்த காம்பினேஷனே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘சவரக்கத்தி’ பற்றி இயக்குநர் ஆதித்யன் கூறியதிலிருந்து...

“எந்த கதை எழுதினாலும் மிஷ்கின் சாருடன் டிஸ்கஷன் பண்ணுவேன். அப்படி இந்தப் படத்துக்கு முன்பு வேறொரு படத்துக்கான ஸ்க்ரிப்டை எழுதி அவர்ட்ட படிக்கக் கொடுத்தேன். அந்த சமயத்தில், ‘ஒரு பார்பரை வெச்சு படம் பண்ணினால் என்ன’னு எனக்கு தோணின ஐடியாவை சார்ட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கே’னு அவருக்கும் தோணியிருக்கு. பிறகு இரண்டு பேரும் டிஸ்கஷ் பண்ணி, ஒரு ரவுடி, ஒரு முடி திருத்துநர், அவருடைய காது கேட்காத மனைவினு மூணு பேரையும் சுற்றி அழகான ஒரு லைன் கிடைச்சுது. பிறகு நாங்க இரண்டுபேருமே டிஸ்கஷ் பண்ணி இந்த ஸ்கிரிப்டை எழுதி முடிச்சோம்.

சவரக்கத்தி

சலூன் கடைகள்தான் அரசியல், சினிமா, விலைவாசி..னு பலதுறைகளைச் சேர்ந்த செய்திகள் பரிமாறப்படும் முக்கியமான இடமா இருக்கு. கிட்டதட்ட மென்ஸ் கிளப் மாதிரி. ஒரு சலூன் கடைக்காரர் காலையில் கடையை திறந்ததுல இருந்து நைட் கடையை மூடுற வரை அதுதான் அவருடைய உலகம். அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். எல்லா தினசரி பேப்பர்களும் அங்கு இருக்கும். எல்லா செய்திகளும் பரிமாறப்படுறதால அவன் அறியாமலேயே ஒரு புது உலகத்தை அவன் கத்துக்கிட்டே இருக்கான். அதனாலதான் இந்தக் கதையின் நாயகனா பார்பரையும், கதைக்களமா சலூன் கடையையும் தேர்ந்தெடுத்தோம். அப்படிப்பட்ட இந்தக் கதையின் ஹீரோவான பிச்சை என்கிற சலூன் கடைக்காரர். வெளியில் ஒரு பிரச்னையை எதிர்கொள்கிறார். ஆனால் அவரால் அதை சமாளிக்க முடியலை. அதை அவர் எப்படி சமாளிச்சு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. 

ஆனால் கதையை சீரியஸாக அணுகாமல் காமெடி ஜானரில் சொல்லி இருக்கோம். இந்தக் கதையை எழுதி முடிச்சதும் இதில் யாரை நடிக்க வைக்கலாம்னு நிறைய யோசனை. அந்த சமயத்தில்தான் இயக்குநர் ராமின் 'தங்கமீன்கள்' படம் பார்த்தேன். ராம் எங்கள் ஆபீஸூக்கு அடிக்கடி வந்துபோகிறவர். இந்தக் கேரக்டருக்கு அவரை ஏன் கேட்கக்கூடாதுனு தோணுச்சு. ஆமாம் ‘பிச்சை’ கேரக்டருக்கு அவர்தான் சரியான சாய்ஸ்னு முடிவு பண்ணினோம். 

சவரக்கத்தி

அப்படி ராமை வைத்து ஒரு மாதம் ஆடிஷன் பண்ணினோம். அவருடைய உடல்மொழியை மாற்றினோம். தங்க மீன்கள்ல அவர் நடிச்சிருந்தது அவருடைய இயல்பான உடல்மொழி. ஆனால் இதில் அவரின் உடல்மொழி முழுக்கவே காமெடியாக இருக்கிறமாதிரி மாத்தினோம். ராம், நாங்கள் சொல்வதை அப்படியே ஃபாலோ பண்ணினார். உண்மையைச் சொல்றதா இருந்தா, அந்தக் கேரக்டரையும் ராமையும் பிரிச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு செட்டாயிட்டார். 

பூர்ணாவுக்கான கேரக்டருக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டோம். அவருக்கு முன் இந்தக் கேரக்டருக்கு ஏழு ஹீரோயின்கள்ட்ட இந்தக் கதையை சொன்னோம். கதை எல்லாருக்குமே பிடிச்சிருந்துச்சு. ஆனால், படத்தில் ஹீரோயினுக்கு இரண்டு கை குழுந்தைகள் இருக்கும். அதனால் இந்தக் கேரக்டரில் நடிக்க யாருமே முன்வரலை. அந்த சமயத்தில்தான் பூர்ணாவிடம் கதையை சொன்னோம். சொன்னதுமே, ‘நான் நடிக்கிறேன்’னு ஒப்புக்கிட்டாங்க. 

‘மங்கா’ என்ற கேரக்டரில் மிஷ்கின் வில்லனா நடிக்கிறார். முதலில் இந்த கேரக்டருக்கு வேறு சிலரைத்தான் யோசிச்சோம். ஆனால், யாருமே அந்தளவுக்கு செட்டாகலை. பிறகு அவரையே நடிக்க வெச்சோம். மிஷ்கின், நல்ல நடிகர். ஒரு விஷயத்தை அழகாக எக்ஸ்ப்ளைன் பண்ணுவார். இதில் அவருடைய லுக்கை மாற்றியிருக்கோம். ரொம்பப் புதுசா இருக்கும். படத்தில் நானும் சின்ன கேரக்டரில் நடிச்சிருக்கேன். இதுக்கு முன்ன, 'துப்பறிவாளன்' படத்திலும், அதன்பிறகு 'பேரன்பு' படத்தில் மம்முட்டி சாரின் தம்பியாவும் நடிச்சிருக்கேன்.

சவரக்கத்தி

மிஷ்கின் சார் படங்கள் எல்லாத்திலும் இரவு நேரத்தில் ஷூட் பண்ணப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கும். ஆனால் இதில் முழுப் படத்தையும் பகலில்தான் ஷூட் பண்ணினோம். காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணிக்கு முடியும் கதை. அதாவது, ஒரு நாள் கூத்து” என்கிற ஆதித்யா, தன் அண்ணன் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக வேலை செய்த அனுபவத்தை சொல்கிறார். 

“எங்கள் வீட்டில் எப்போதும் இன்ஸ்பிரேஷனான மனிதர் அவர். நிறைய புத்தங்கள் படிப்பார். அவரிடம் நிறைய காமெடிகள் எதிர்ப்பார்க்கலாம். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அண்ணனாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சார் என்றுதான் கூப்பிடுவேன். மற்ற உதவி இயக்குநர்களைப்போல்தான் என்னையும் நடத்துவார். அவரிடம் பாராட்டும் திட்டுகளும் நிறைய வாங்கியிருக்கேன். கடுமையான வார்த்தைகளால்கூட திட்டியிருக்கிறார். மோதிர விரல் குட்டு, நல்லதுதானே.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்