“பாதி வெற்றி நம்பிக்கையில்... மீதி வெற்றி நண்பர்கள் கையில்!” ‘ஹிப்ஹாப்’ ஆதி சக்சஸ் கதை

இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஹீரோவாக இயக்குநராக அறிமுகமான திரைப்படம ‘மீசைய முறுக்கு’. கொஞ்சம் சொந்தக் கதை, மீதி கற்பனை கதை என்று கலந்துகட்டி எடுத்த இந்தப் படம், கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படங்களுள் ஒன்று. மேலும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்னும் இணையத்தை ஆக்கிரமித்து அதிரடித்துக்கொண்டிருக்கின்றன. இணையத்தின் பல்வேறு தளங்களில் 'மீசைய முறுக்கு' பட ஆல்பம் வெளியான 150 நாள்களில் 150 மில்லியனுக்கும் மேலான ஸ்டீரிமிங்களை அடைந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும்வகையில் இந்த ஆல்பத்தில் பணியாற்றிய இசைக் கலைஞர்களை அழைத்து கெளரவப்படுத்தியது இதன் ஆடியோவை வாங்கிய திங்க் மியூசிக் நிறுவனம். 

ஹிப் ஹாப் தமிழா

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யம் சினிமாஸ் மற்றும் திங்க் மியூசிக் நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி பேசுகையில், “இந்த விழா எங்கள் நிறுவனத்துக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. 'மீசையமுறுக்கு' ஆல்பம் 150 மில்லியன் பார்வைகளை கடந்து 2017ன் சிறந்த ஆல்பமாக வந்தது மட்டுமன்றி திரைப்படம் சாராத இசைப் பிரிவான பர்பிள் நோட் மூலம் ஆதியின் இந்த ஆல்பத்தை வெளியிட்டதில் பெருமைப்படுகிறோம்” என்றார். அடுத்து, மீசைய முறுக்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு பேசுகையில், "இந்த வெற்றிக்குச் சொந்தமானவர் ஆதி மட்டுமே. சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஆதி முன்னுதாரணம் என்றார். 

ஹிப் ஹாப் தமிழா

பட்டு வேட்டி சட்டையில் ரசிகர்களின் அப்ளாஸோடு மேடை ஏறிய ஆதி, “எல்லாருக்கும் இது சினிமா பாக்குற இடமாத்தான் இருக்கும். ஆனா, எனக்கு இது வாழ்க்கையில பல திருப்பங்களை தந்த இடம். என் முதல் ஆல்பம், நான் இசையமைச்ச முதல் பட ஆடியோ லாஞ்ச், நான் இயக்குநரான பட விழா...னு இந்த அரங்கு மறக்க முடியாது. என் பாதி வெற்றி நம்பிக்கையிலும் மீதி வெற்றி நண்பர்கள் கையிலும் இருக்கு. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையைப் படம் வெளியானபிறகுதான் திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கினாங்க. அதுல வந்த பணத்தை படத்துக்கு இசையமைச்ச எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பிரிச்சு கொடுத்திடலாம்னு ப்ளான் பண்ணிணோம். அதை ஸ்வரூப் ரெட்டி சாரும் எங்க தயாரிப்பாளரும் சேர்ந்து கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று தன் படத்தில் இசையமைத்த ஒவ்வொரு இசை கலைஞர்களையும் பாடகர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை கெளரவப்படுத்தினார். 

ஹிப் ஹாப் தமிழா

பிறகு ஒவ்வொரு இசைக் கலைஞர்களையும் பாடகர்களையும் அழைத்து அறிமுகப்படுத்திய ஆதி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், ஜெர்மனியில் இருக்கும் இசை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து, அங்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற பெயரில் ஸ்டுடியோ ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 'இப்போ ஒரு ஜாலியான லைவ் பெர்ஃபாமென்ஸ் பண்ணலாம்' என்று தன் டீமுடன் இணைந்து 'மீசைய முறுக்கு' படப் பாடல்களை இசைத்து பாடி அரங்கை விழாக்கோலமாக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!