வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (29/01/2018)

கடைசி தொடர்பு:21:10 (29/01/2018)

" 'அமலாபால் கொடுத்த முகவரியில் வாங்கியது ஒரு கார் அல்ல..!" - நடந்தது என்ன? #AmalaPaul

அமலா பால், கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் சொகுசு கார் பதிவு செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக கேரள குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில், அமலாபால் நேற்று விசாரணைக்கு ஆஜர் ஆனார். கொச்சி எஸ்.பி சந்தோஷ்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலை விசாரித்தனர் விசாரணைக்குப் பின் வீடு திரும்பினார். 

அமலா பால்

ஆகஸ்டு மாதம் சென்னையில் அமலா பால் வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் 'எஸ்' கிளாஸ் காரை பாண்டிச்சேரியில் குறைந்த வரிச் செலவில் ரெஜிஸ்டர் செய்துள்ளார். இதற்குப் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த திலசபேட்டை பகுதியில் அமைந்துள்ள புனித தெரசா தெரு 6-ம் இலக்கம் கொண்ட வீட்டை, தான் வசித்து வரும் வீடு என்று கூறி ஆவணங்களைக் கொடுத்துப் பதிவு செய்திருக்கிறார், அமலா பால். இதையறிந்த கேரள மாநில போலீஸார், அமலா பால் போலியான ஆவணங்கள் கொண்டு வரி ஏய்ப்பு செய்ததாகவும், கேரள மாநிலத்திற்கு அவரால் 20 லட்சம் வரை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கைப் பதிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து கேரள உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் மனுத்தாக்கல் செய்தார் அமலா பால். அந்த மனுவின் பேரில் அமலாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. பத்து நாள்களுக்குள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, தனது தரப்பு வாக்கு மூலங்களை தரும்படியும் நீதிமன்ற நிபந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைகளுக்கு இணங்க, நேற்று கொச்சிக் குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜர் ஆனார் அமலா பால். அங்கு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் அவருடனிருந்த அதிகாரிகள் அமலா பாலிடம் வாக்குமூலம் பெற்றார்கள். 

அமலா பால் முன்னர் கூறியதுபோல், படப்பிடிப்புகாகப் பாண்டிச்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், தான் வசித்து வரும் அந்த முகவரியில்தான் காரைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். இது சம்பந்தமான எந்த ஒரு ஆவணத்தையும் அவர் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமலா பால் வசிக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் முகவரியில் இதேபோலப் பல சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமலா பால் அங்கு வசித்ததாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை எனவும், அமலா பால் பொய்யான தகவலைத் தெரிவிக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்களை நீதிமன்றத்திற்கு இந்தக் குழு அனுப்பும். அதன்படி அமலா பால் மீதான மேல் நடவடிக்கைகள் நீதிமன்றம் எடுக்கும் என்றும் தெரிகிறது.

மற்ற மாநிலங்களில் சொகுசு கார் பதிய வேண்டுமென்றால் ஜி.எஸ்.டி வரி மற்றும் செலவீனங்கள் 28% முதல் 43% வரை இருக்கும். பாண்டிச்சேரியில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான வரி செலுத்தினால் போதும். மேலும் ஒரு வாகனத்தை ரெஜிஸ்டர் செய்ய பாண்டிச்சேரிவாசி என்பதற்கான ஒரு முகவரி இருந்தால் போதுமென்ற நிலையும், சொகுசு கார் வாங்கும் வெளிமாநிலத்தவர்களை புதுவையை நோக்கிப் படையெடுக்கச்செய்கிறது. கேரளாவில் இதுபோல் பல சொகுசு கார்கள் போலி ஆவணங்கள் மூலம் புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீதும் தக்க நடவடிக்கை எடுப்பதற்குக் கேரளக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமலா பால் போன்று பிரபல நடிகர்கள் ஃபஹத் பாசில் மற்றும் சுரேஷ் கோபி மீதும் சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


டிரெண்டிங் @ விகடன்