Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ஏழை என்பதால், ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் கொடுக்கிறேன்" - தமிழ் இருக்கைக்கு நிதியளித்த வைரமுத்து

Chennai: 

சமீபத்தில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் வைரமுத்து எழுதிய நூல்கள்  நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அந்தப் பணத்துடன் நாற்பதாயிரம் ரூபாயைச் சேர்த்து மொத்தம் 5 லட்சம் ரூபாயை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உருவாகும் தமிழ் இருக்கைக்கு நிதியாகக் கொடுத்திருக்கிறார் வைரமுத்து.

வைரமுத்து

அந்நிகழ்ச்சியில் வைரமுத்து பேசும்போது, ''ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இங்கே உரையாற்றியபோது, அடிக்கோடிட்டு சொல்லத்தக்க ஒரு வாசகத்தை விட்டுவிட்டுப் போயிருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மொழிகள் மொத்தம் ஏழு, இப்போதுதான் தமிழ்மொழி அதில் சேர்கிறது என்று சொன்னார். ஆறுமுகம் அவர்களே... நீங்கள் இன்னொரு பெருமையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குச் சொல்லியாக வேண்டும். அங்கே இருக்கின்ற மொழிகள் எல்லாம் `வாழும் மொழிகள்' என்று சொல்லிவிட முடியாது சீனமொழி மட்டும்தான் இன்றளவிலும் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கியப் புரட்சிமிக்க மொழி. அதற்கு இணையாக இருக்கின்ற அடுத்தமொழி, தமிழ்மட்டும்தான். செய்யுள் வழக்கும் உலகியல் வழக்கும் இன்னும் புரட்சியாக இருக்கின்ற மொழியாக 8 கோடி தமிழர்களால் பேசப்படும் மொழியாக, உலகில் சில நாடுகளில் அலுவல் மொழியாக, உலகத்தில் பேசப்படும் 20 பெரிய மொழிகளில் 17 வது இடத்தில் இருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி என்கின்ற உண்மையைத் தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக, இந்த இருக்கை உதவ வேண்டும் என்று எண்ணுகிறேன். இங்கே தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் காரணமான கலைஞரை நன்றியோடு நினைவுகூர்கிறேன். அனுமதி பெற்றுத்தந்த மன்மோகன் சிங் அரசுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம். 

ஒரு மொழி செம்மொழியாக வேண்டும் என்பதற்கு அறிவுலகம் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று வகுத்து இருக்கிறது. அதற்கும்மேலே அதிகமான தகுதிகொண்ட மொழி, தமிழ். நெடுங்கணக்கில் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் படைத்து இருக்க வேண்டும் ஒரு மொழி; அது பழைமையானதாகவும்  பாரம்பர்யம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். சில மொழிகளை ஈன்று கொடுத்த தாய்த் தகுதி அந்த மொழிக்கு இருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்கும் பங்களிப்பு செய்த மொழியாக இருக்க வேண்டும்... இப்படி எல்லாம் தகுதி இருந்தால்தான், அது செம்மொழி என்று அறிவுலகம் கருதுகிறது. தமிழ் மொழியை நாம் தாமதமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து இருக்கிறோமே என்பதுதான் என்னுடைய ஆதங்கம். தமிழை முன்னெடுத்துச் செல்வதற்கும் விரிவாக்கிக்கொள்வதற்கும் நான் இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வயது 382 ஆண்டுகள். மூத்து, முதிர்ந்து இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் அது. ஹார்வர்டில் வெளியிடப்படுகின்ற ஆய்வுகள்  உலகின் கவனத்தை மறுநொடியே கவ்வுகின்றன. எல்லாப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளையும் எல்லோரும் கவனிப்பதும் இல்லை, அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை, ஏற்றுக்கொண்டதும் இல்லை. தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழக ஆய்வுகள் அந்த ஆய்வாளருக்கும் நெறியாளருக்கும் மட்டும் தெரியுமே தவிர, மூன்றாவது நபருக்குத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லாமல் அச்சடிக்கவும் முடியாமல் பல ஆய்வுகள் கிடப்பில் இருப்பதைக் கண்டு அறிவு ஜீவிகள் நகைத்துக்கொண்டே ஆமோதிக்கின்றனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வறிக்கை வந்தால், உலகமே கவனிக்கிறது. உலகில் பல தலைவர்களையும் நிறைய நோபல்பரிசு பெற்ற அதிக அறிஞர்களை வழங்கியது ஹார்வர்டு பல்கலைக்கழகம். அப்படிப்பட்ட இடத்தில் எங்கள் தமிழ் சென்று அமரப்போகிறதே என்று பலபேர் கருதலாம்; மகிழ்ச்சி அடையலாம். ஒருவகையில் அது உண்மைதான். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்... நான் கேட்கிறேன், 382 ஆண்டுகள் வயதுடைய ஹார்வர்டில் இடம்பெறப்போவது தமிழுக்குப் பெருமையா, 3,000 ஆண்டுகள் முன்னே தோன்றிய பழைமையான எங்கள் தமிழ்மொழி அமரப்போவதால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குப் பெருமையா என்று யோசிக்க வேண்டும். ஒரு ஏழைத்தமிழன் இப்படிச் சொன்னதாக அங்கே சொல்லுங்கள். ஏழை என்பதால்தான் ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் தர முடிந்தது. இன்னொரு செய்தி, இந்தியப் பண்பாடு என்று எடுத்துக்கொண்டால் அதில் சரிபாதி பண்பாடு தமிழன் கொடுத்தது. இந்தியாவில் வடக்கே ஒரு பண்பாடு, தெற்கே ஒரு பண்பாடு. இங்கே உள்ள அரசியல், சமூகக் காரணங்களால் இந்தத் தமிழன் பண்பாட்டை உலகம் முழுக்க எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை நாம் இழந்து இருக்கிறோம். தமிழை நுகர்ந்து பார்க்காமலேயே பலபேர் வடக்கே மட்டும் வந்துவிட்டு, பல ஐரோப்பியர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையைப் பார்வையிட வருபவர்களிடம் சொல்லுங்கள், இந்தியா சென்றால் வடக்கே மட்டும் பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள், தெற்கே நகருங்கள். சிந்துவெளி நாகரிகத்தைப்  பரப்பியதன்  'மூலம்' இங்குதான் இருக்கிறது. தென்னகத்தில் ஒரு பண்பாட்டை உருவாக்கிய திராவிடப் பண்பாடு இன்னும் அங்கே கனலோடு கனன்றுகொண்டு இருக்கிறது என்கிற உண்மையை ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஐந்து கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அறிவிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இந்தியாவுக்கு மேக்ஸ்முல்லர் வந்தார். வடமொழி இலக்கியத்தை எல்லாம் கொண்டுபோய் ஐரோப்பாவில் சேர்த்தார். தமிழ்மொழியை உலகெங்கும் கொண்டுபோய்ச் சேர்க்க அப்படி ஒருவர் இல்லை. அந்த வேலையை ஹார்வர்டு இருக்கை தமிழின் அதிகாரபூர்வ உண்மைகளை அறிவிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இருக்கையை முதலில் முன்னெடுத்துச் சென்றவர்கள் இரண்டுபேர். ஒருவர் மருத்துவர் ஜானகிராமன். இன்னொருவர் திருஞானசம்பந்தம். இருவரையும் நன்றியோடு வணங்குகிறேன்'' என்று பேசினார். தவிர, நிதியளிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த வி.ஐ.பி-க்கள் பெரியசாமி, மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், சல்மா, கெளதமன் மற்றும் பலரையும் தனித்தனியே விளித்துப் பேசினார்வைரமுத்து.

டாக்டர் பெரியசாமி குறித்துப் பேசும்போது, 'நான், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா அவர்களை என் வீட்டுக்கு அழைத்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை எளிமையாகக் கொடுக்க நினைத்திருந்தேன். டாக்டர் பெரியசாமி அவர்கள்தான், உலகெங்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை நிகழ்ச்சி ஆக்கினார்' என்றார். அடுத்து, 'மிகச்சிறந்த சிந்தனையாளர் மனுஷ்யபுத்திரன் அவருடைய விவாதங்களைப் பார்த்து வருகிறேன். 'கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்றுவந்ததும் கொடியசைந்ததா...' என்கிற பாடலுக்கான மூலம் இறையனார் அகப்பொருளில் இருக்கிறது. அதாவது, ஒளி வந்ததும் இருள் பறந்ததா, இருள் பறந்ததும் ஒளிவந்ததா என்று அதில் இருக்கும். 'இரண்டும் இடைவெளி இல்லாமல் ஒரே நேரத்தில் நிகழ்கிறது' என்று அதற்கான உரையாசியர் சொல்கிறார். அதுபோல, எதிராளியின் கேள்விக்கும் மனுஷ்யபுத்திரனின் பதிலுக்கும் இடைவெளியே கிடையாது' என்று சொன்னார்.

அதன்பின் 'சுப.வீரபாண்டியன் ஒரு கறுப்புச்சட்டை அணிந்த தமிழ் நூலகம். எனக்கு ஏதாவது சந்தேகம் எழுந்தால், புத்தகத்தைத் தேடமாட்டேன். சுபவீ-யின் எண்களைத்தான் என் விரல்கள் சுற்றும். 'தமிழ்நாட்டுக்கு ஒரு கவர்னர் வந்தார், அவர் ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்குச் செல்கிறார், நகைக்கடைக்குச் செல்கிறார், பேசுகிறார். அவரிடம் அங்கே எல்லாம் பேசுவதற்கானதை எப்போது தயாரிக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டனர். 'நான் பொதுவாழ்க்கைக்கு வர 40 வருடத்துக்கு முன்பே தயாராகிவிட்டேன், இப்போதுதான் என்னைப் பயன்படுத்துகிறார்கள்' என்று சொன்னார். அதுபோல சுப.வீ 50 வருடத்துக்கு முன்பே தயாரித்துவிட்டார். இப்போதுதான் ஊடகங்கள் அவரைப் பயன்படுத்திக்கொள்கிறது' என்று சொன்னார். இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, சத்யராஜ் கலந்துகொள்வதாக இருந்தது. சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிட்டதால், பாரதிராஜா வர இயலவில்லை. டாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்றதால் சத்யராஜும் கலந்துகொள்ளவில்லை.               

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்