" 'பாகுபலி'க்குப் பிறகு பாக்ஸிங்!" - ராஜமெளலி பட அப்டேட்ஸ்

'மகதீரா' படத்தின்மூலம் தான் ஒரு ஹிஸ்டாரிகல் ஸ்பெஷல் இயக்குநர் என்பதை நிரூபித்தார். அடுத்து, 'நான் ஈ' படத்தை உருவாக்கி, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் ஈ-யை உருவாக்கிப் பழிவாங்கவிட்டு, தென்னிந்திய சினிமா உலகையே திக்குமுக்காட வைத்தார். பிறகு, 'பாகுபலி', 'பாகுபலி-2' படங்களின் மூலம் அரசு, மன்னர், போர்... எனப் பிரமாண்டத்தின் உச்சத்தைத் தொட்டு, உலகசினிமாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். அவர்தான், 'ஒன்லி ஹிட்' இயக்குநர், ராஜமெளலி.

ராஜமெளலி, ராம்சரண்

'பாகுபலி' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு இணையாக இருக்கவேண்டும் என '2.0' படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கிக்கொண்டிருக்கிறார், இயக்குநர் ஷங்கர். அதனால்தான், ஜனவரியில் ரிலீஸ் செய்வதாகத் திட்டமிட்டிருந்த '2.0' படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ்ப் புத்தாண்டுக்குத் தள்ளிவைத்தார்கள். சரி... ராஜமெளலி உருவாக்கத்தில் வெளிவரவிருக்கும், தென்னிந்திய, வடஇந்திய பிரமாண்ட இயக்குநர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிற அடுத்த திரைப்படம் எது? என்கிற எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது.

'பாகுபலி-2' திரைப்படத்திற்குப் பிறகு, தனது அடுத்த படத்திற்காக ஆந்திர சினிமா உலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவைத்துக்கொண்டு, சினிமா ரசிகர்களின் பல்ஸை இப்போதே எகிற வைத்துக்கொண்டிருக்கிறார், ராஜமெளலி. 'பாகுபலி' படத்தில் பிரபாஸும், ராணாவும் போர்க்களத்தில் பயங்கரமாகக் கத்திச் சண்டை போட்டு ஆச்சர்யப்படுத்தியதுபோல, ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் மோதப்போகிறார்கள் என்று நீங்கள் யூகித்தால், அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தால், அவர்களுக்கெல்லாம் நாம் சொல்லும் ஒரே வார்த்தை ஸாரி.

வழக்கமாக ஒரு வரலாற்று படக்கதையைப் படமாக்கினால், அடுத்து ஒரு சமூகக்கதையை இயக்குவது ராஜமெளலி ஸ்டைல். சில காரணங்களால், 'பாகுபலி-2' எடுத்தாகவேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே,  இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் சமூகத்திற்கான கதையையே தனது அடுத்த படமாக இயக்க முடிவு செய்திருக்கிறார், ராஜமெளலி. இந்தப் படத்துக்கான கதையையும் ராஜமெளலியின் தந்தையும், 'மெர்சல்' படத்தின் கதாசிரியருமான  விஜயேந்திரசாத் எழுதுகிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் ஸ்டுடியோவில் 'பாகுபலி' படத்திற்காகப் போடப்பட்ட ஹிஸ்டாரிகல் செட்டப்பைப் பிரித்துவிட்டு, மாடர்ன் சிட்டி செட்டை அமைக்கச் சொல்லியிருக்கிறார், ராஜமெளலி. இப்படத்தின் நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் இவர்களுக்கான சம்பளம் எல்லாம் தவிர்த்து, இந்த செட் அமைக்கும் பணிகளுக்கு மட்டும், படத்தின் பட்ஜெட்டிலிருந்து 150 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ராம்சரண் - ராஜமெளலி - ஜூனியர் என்டிஆர்    

'எம்.குமரன்  s/o  மகாலட்சுமி', 'மான் கராத்தே' போன்ற படங்களில் பாக்ஸிங் சண்டையை படத்தில் இடம்பெறும் சின்னச் சின்ன போர்ஷன்களில் படமாக்கியிருந்தார்கள். இந்தப் படம் அப்படியெல்லாம் இல்லாமல், இந்தியாவில் இதுவரை செய்துகாட்டிராத பிரம்மாண்ட பாக்ஸிங் கதையைப் படமாக்கவிருக்கிறார், ராஜமெளலி. படத்தில் இடம்பெறும் இரண்டு முக்கியமான பாக்ஸர் கேரக்டர்களில்தான், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருக்கிறார்கள்.

தற்போது, 'ஜெயம்' படத்தை உருவாக்கியபோது எடிட்டர் மோகனுக்கு உதவியாளராக இருந்த சுகுமார் இயக்கிவரும் தெலுங்குப் படத்தில் வாய்பேசாத, காதுகேளாத கேரக்டரில் ராம்சரண் நடித்து வருகிறார். 'மரகதநாணயம்' ஆதி, ராம்சரணுக்கு அண்ணனாக  நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாக்ஸிங் வீரனுக்குத் தகுந்த உடற்கட்டோடு வரவேண்டும் என ராம்சரணுக்கு அன்புக்கட்டளை யிட்டிருக்கிறார், ராஜமெளலி. அதுபோல, ஜூனியர் என்டிஆருக்கும் பாக்ஸர் கேரக்டருக்கான டிப்ஸ்களை இப்போதே சொல்லிக்கொடுத்து அவரையும் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!