''இனி அவர், எந்தப் பெண்ணிடமும் தப்பா நடக்கக்கூடாது!" - ரயில் சம்பவ கோபம் பகிரும் சனுஷா

'காசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சனுஷா. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சனுஷா தற்போது ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ரேணிகுண்டா', 'பீமா', 'அலெக்ஸ் பாண்டியன்' எனப் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'கொடிவீரன்' படத்தில் சசிகுமாரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். 

சனுஷா

நடிகை சனுஷா ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தபோது, ஆண்டோ போஸ் என்பவர், சனுஷாவிடம் தவறான முறையில் நடக்க முயற்சிசெய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சனுஷா, இதுதொடர்பாக உடனே கேரள காவல்துறையிடம் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சனுஷாவிடம் பேசினேன். 

''இப்போ நான் எந்தப் படத்திலும் நடிக்கலை. என் படிப்புல மட்டும்தான் கவனம் செலுத்திக்கிட்டு இருக்கேன். நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனா, நடந்தது தமிழ்நாட்டில் இல்லை; கேரளாவில். என் வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரத்துக்கு ரயிலில் வந்துக்கிட்டு இருந்தேன். இரவு 8 மணிக்கு கேரளாவில் இருந்து ரயில் கிளம்பிச்சு. ஏ.சி கோச்சில் எனக்கான பெர்த்தில் நான் தூங்கிக்கிட்டு இருந்தேன். அப்போது இரவு ஒரு மணிபோல எனக்குப் பக்கத்து பெர்த்தில் இருந்த நபர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார்.  என்னைக் கட்டாயப்படுத்தவும் செய்தார். உடனே, நான் கூச்சலிட்டுக் கத்தினேன். 

இரவு நேரமாக இருந்ததால் ரயிலில் இருந்த எல்லோரும் தூங்கிட்டாங்க. லைட்டும் ஆஃப் பண்ணி இருந்தாங்க. என் சத்தத்தைக் கேட்டு ரஞ்சித், உன்னி என்ற இரண்டு பயணிகள் மட்டும் ஓடிவந்தனர். ரஞ்சித் எனக்குப் பாதுகாப்பா என் பக்கத்தில் இருந்தார். உன்னி, ரயிலில் இருந்த டி.டி.ஆரைக் அழைத்துவந்தார். உடனே அவர், போலீஸுக்கு போன் பண்ணினார். போலீஸ் வந்தவுடன், அந்த நபரை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். அந்த நபரின் பெயர், வயது, ஊர் எதுவுமே எனக்குத் தெரியாது. இப்போ, அந்த நபரை ரிமாண்ட்டில் வெச்சிருக்காங்கனு கேள்விப்பட்டேன். என்கூட கடைசி வரைக்கும் இருந்து எனக்கு உதவி செய்தது ரஞ்சித் மற்றும் உன்னிதான். 

சனுஷா

தனியாதான் நான் டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். எப்போவும் நான் தைரியமா இருப்பேன். அதனாலதான் எங்க அம்மா, அப்பா என்னைத் தனியா அனுப்பிவெச்சாங்க. இந்தச் சம்பவத்தால் நான் பயந்து ஒதுங்கவில்லை. ஆனா, இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்துச்சு. பெண்களிடம் கண்ணியமா நடந்துகொள்வது ஆண்களின் கடமை. அதை அவங்க மீறக்கூடாது. என்னைமாதிரி எந்தப் பெண்ணிடமும் இனி அந்த நபர் தப்பா நடந்துக்கக்கூடாது, அதுக்காகத்தான் நான் தைரியமா போலீஸிடம் புகார் கொடுத்தேன். அந்த நபருக்கு தண்டனையும் வாங்கிக்கொடுப்பேன். இந்த வழக்கை நான் அப்படியே விட்டுடாம, கடைசிவரைக்கும் எதிர்கொள்ளப்போறேன். 

எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துருச்சுனு கேள்விப்பட்டதுமே சினிமா துறையிலே இருக்குற பலரும் எனக்குப் போன் பண்ணி விசாரிச்சாங்க. ஆனா, பலபேரோட தொலைபேசி அழைப்பை என்னால எடுக்கமுடியலை. இயக்குநர் சசிகுமார் அண்ணன் என்கிட்ட பேசினார். தைரியமா இருக்கச் சொன்னார். நடந்த சம்பவத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டார்.  என் அம்மா, அப்பாவும் இதுக்காக என்னைப் பாராட்டினாங்க. எனக்கு சப்போர்ட்டா இருப்போம்னு சொன்னாங்க'' என்கிறார், சனுஷா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!