“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல... இதான் பிரச்னை!” - ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா #VikatanExclusive

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், மோகன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர், காமெடிப் படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர், தற்போது தமிழ் சினிமாவுக்குச் சிறந்த இயக்குநர்களை அறிமுகப்படுத்திவரும் தயாரிப்பாளர்... என மனோபாலாவுக்குப் பலமுகங்கள். ஒரு வருடத்திற்கு 90 படங்கள் என நடிப்பில் பிஸியாக ஓடிக்கொண்டிருப்பவரை, ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, ரஜினி - கமல் அரசியல் எனப் பல கேள்விகளை அவர்முன் வைத்தோம்... 

மனோபாலா

நீங்கள் பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த கதையைச் சொல்லுங்க..?

’’பாரதிராஜாகிட்ட உதவியாளராகச் சேருவது அவ்வளவு ஈஸியான காரியம் இல்ல. கமல்ஹாசன் என்னோட நண்பரா இருந்தனால, அவர்தான் என்னை பாரதிராஜாகிட்ட அழைச்சிட்டுப் போனார். அப்போ 'சிவப்பு ரோஜாக்கள்' படம் முடியிற ஸ்டேஜ்ல இருந்துச்சு. அதுக்கு அடுத்த படமான 'புதிய வார்ப்புகள்' படத்திலிருந்து தொடர்ச்சியா 16 படங்கள் அவரோட வொர்க் பண்ணினேன். எனக்குக் கிடைச்ச மாதிரி அவ்வளவு ஈஸியா யாருக்கும் உதவி இயக்குநர் வாய்ப்புக் கிடைக்காது. அவர்கிட்ட வொர்க் பண்ணினது கடவுள் எனக்குக் கொடுத்த கிருபை. எனக்கு சினிமாவில் எல்லாமும் கத்துக்கொடுத்து, என்னை இயக்குநரா மாத்துனது அவர்தான். அவர் எனக்கு அப்பா மாதிரி. அடிக்கடி சொல்ற ‘பயப்படாத’ங்கிற வார்த்தைதான் எனக்கு அதிக தைரியம் கொடுத்துச்சு. நான் 40 படங்கள் இயக்கியிருக்கேன், அதுக்கு அவர்தான் முதல் காரணம். அவர் இல்லைன்னா மனோபாலா இல்ல.’’

இயக்குநர் ஆகுறதுக்கு முன்பே நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க... நடிப்புல ஆர்வம் அதிகமா..?

’’அப்படியெல்லாம் இல்லைங்க. என்னோட ஃபோகஸ் எப்போதுமே இயக்கம், இயக்கம், இயக்கம்மேல மட்டும்தான் இருந்துச்சு. இயக்கத்துக்காக நிறைய படிப்புகள் படிச்சேன். நிறைய நல்ல படங்கள் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். இன்னும் என் ஆசை நிறைவேறவில்லை. ஒரு இயக்குநரா என் ஆசை நிறைவேறாமல் போனாலும், ஒரு தயாரிப்பாளரா நிறைய நல்ல படங்களை சினிமாவுக்குக் கொடுக்கணும்னு இப்போ படங்கள் தயாரிச்சுட்டு இருக்கேன்.’’

மனோபாலா

இயக்குநராக இருந்த நீங்கள் நடிக்க வந்ததும் ஏன் காமெடிப் படங்களில் மட்டும் நடிக்கணும்னு முடிவு பண்ணீங்க..?

“நான் நடிக்கணும்னு முடிவு பண்ணவே இல்லைங்க. நண்பர்களுடன் பார்ட்டி, விழாக்களுக்குப் போகும்போது நான் இருக்குற இடம் கலகலப்பா இருக்கும். அதைப் பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘இதை நீங்க படத்துல பண்ணலாமே. ஏன் உங்க காமெடியை எல்லாம் வேஸ்ட் பண்றீங்க’னு கேட்டார். ‘அது எப்படி சார். படத்துல நீங்க எழுதுற வசனத்தைத்தானே நான் பேசமுடியும். நான் நினைச்சதை எல்லாம் பேச முடியுமா’னு கேட்டேன். ‘நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்’னு சொல்லி, ‘நட்புக்காக’ படத்துல ஒரு நல்ல ரோல் கொடுத்து என்னை நடிகனா மாத்திவிட்டார். சத்யராஜும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். ‘உங்களுக்கு நல்ல ஸ்லாங், பாடி லாங்வேஜ் இருக்கு. தைரியமா நடிங்க’னு சொல்லுவார். அவரோட படங்களிலும் சின்னச் சின்ன ரோல் பண்ணேன்.’’

நிறைய படங்கள் நடிச்சிருக்கீங்க... எந்தப் படத்தை உங்களுக்கான அடையாளம்னு சொல்லுவீங்க..?

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னை காமெடி காட்சிகளில் நடிக்க வைக்கிறாங்க. அந்த சீன் நல்லா இருக்கு. அவ்வளவுதான். என்னோட ஆசையைப் பூர்த்தி செய்ற இயக்குநர்னா, அது சுந்தர்.சி சார்தான். அவரோட படங்களிள்தான் என்னை முழுமையாக யூஸ் பண்ணுவார். 'கலகலப்பு - 2' படத்திலும் ஒரு பெரிய ரோல் கொடுத்துருக்கார். அவரோட படங்களில் எல்லாம் காமெடிக்கு ஒரு குரூப் வெச்சிருப்பார். அந்த குரூப்ல நானும் இருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.’’ 

மனோபாலா

இயக்குநர், நடிகர் மனோபாலா எப்படித் தயாரிப்பாளர் மனோபாலா ஆனார்..?

“முன்னாடி இருந்தே படங்கள் தயாரிக்கணும்னு ஆசை இருந்தது. இப்போது வர்ற இயக்குநர்கள் எல்லாரும் ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட் கொண்டு வர்றாங்க. அவங்க படங்களில் நடிக்கும்போதெல்லாம் அந்த ஆசை அதிகமாச்சு. நல்ல கதையம்சம் உள்ள படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணும்போதுதான், இயக்குநர் நலன் குமரசாமி ஹெச்.வினோத்தை அறிமுகம் செய்துவைத்தார். அவர் 'சதுரங்கவேட்டை' படத்தோட கதையைச் சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இந்தப் படத்தைதான் என்னோட முதல் படமாக தயாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் 'பாம்புசட்டை' படத்தைத் தயாரித்தேன். அடுத்து என்னோட தயாரிப்பில் 'சதுரங்க வேட்டை - 2' ரெடியாகிட்டு இருக்கு.’’

தயாரிப்பாளரா ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது எவ்வளவு சிரமமா இருக்கு..?

“சொல்லி மாளாது. அவ்வளவு சிரமங்களைச் சந்திக்கிறோம். பணம் போட்டுப் படம் எடுக்குறது சுலபமா இருக்கு. ஆனால், அந்தப் படத்தை தியேட்டருக்குக் கொண்டுவர்றது கஷ்டமா இருக்கு. ஒரு படத்தில் ஏதாவது பிரச்னை இருந்தா, அதை ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரம் முன்பு சொல்ல மாட்டார்கள். நாளைக்கு ரிலீஸ்னா இன்னைக்கு வந்து சொல்வாங்க. அதேபோல் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸானா, சின்னத் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்றாங்க. எங்களை ஒதுங்கிக்கச் சொல்றாங்க. இப்படிப் பல சிரமங்கள் இருக்கு.’’

மனோபாலா

“ ‘சதுரங்கவேட்டை - 2’ படத்தோட ரிலீஸ் ஏன் தள்ளிப் போயிட்டே இருக்கு..?

“எல்லாப் படங்களுக்கும் இருக்கிற பிரச்னைதான், இந்தப் படத்துக்கும் இருக்கு. அரவிந்த்சாமியோட சம்பளத்துல கொஞ்சம் பாக்கி இருக்கு. அதை நான் கொடுத்துட்டா, அவர் வந்து டப்பிங் பேசிடுவார். இதுதான் பிரச்னை. மத்தபடி வேற எதுவும் இல்லை. ஆனால், அரவிந்த்சாமிதான் டப்பிங் பேசாம பிரச்னை பண்ணிட்டு இருக்கார்னு தவறான தகவல்களை வெளியே சொல்லிட்டு இருக்காங்க. அவர்மேல எந்தத் தப்பும் இல்லை. நான் காசு கொடுத்தா, அவர் வந்து டப்பிங் பேச ரெடியா இருக்கார்.’’

ஒரு படத்தை எப்படியெல்லாம் விற்கலாம் என்கிற விழிப்புஉணர்வு எல்லாத் தயாரிப்பாளர்களிடமும் இருக்கிறதா..?

உங்களுடைய படங்களின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது..?

'சதுரங்க வேட்டை- 2' எப்படி அமைந்தது..?

இயக்குநர் நிர்மல்குமாரை எப்படித் தேர்வு செய்தீர்கள்..?

வடிவேலுவின் தற்போதைய நிலை பற்றி..?

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் பற்றி..?

உங்களோட ஃபிட்னஸின் ரகசியம் என்ன..? எனப் பல கேள்விகளுக்கு மனோபாலா அளித்த பதிலைத் தெரிந்துகொள்ள, வீடியோவைக் க்ளிக் பண்ணுங்க! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!