“ ‘மா’ குறும்படம் நயன்தாரா மேடத்துக்குப் பிடிச்சிருந்தது... அதனால என் கதைல நடிக்கிறாங்க!” ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன்

சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குறும்படம் 'லஷ்மி'. இயக்குநர் சர்ஜூன் எடுத்து இருந்த இந்தக் குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையைப் பேசியிருந்த இந்தப் படத்தை பற்றிப் பலரும் விவாதித்தனர். எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகம்தான். இதற்கிடையில் சர்ஜூன்  தனது அடுத்த குறும்படமான 'மா' படத்தைச் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக' நிறுவனம் தயாரித்திருந்தது. 

லஷ்மி

'மா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தனது முதல் படமான 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை சத்தமில்லாமல் இயக்கி முடித்திருக்கிறார், சர்ஜூன். சத்யராஜ், வரலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. KJR ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படம், த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது. இந்நிலையில் சர்ஜூனின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு இன்று ட்விட்டரில் வெளியாகிருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்கப்போவதும் KJR ஸ்டியோஸ்தான். படம் பற்றிய தகவலுக்காக சர்ஜூனிடம் பேசினேன். 

“KJR ஸ்டியோஸ் ராஜேஷ்சார் என்கிட்ட ஏதாவது கதையிருந்தால் சொல்லச் சொன்னார். நான் என் படத்தின் ஒன்லைனைச் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனே, 'நயன்தாரா மேம்கிட்ட இந்தக் கதையைச் சொல்லலாம்'னு சொன்னார். அவங்களுக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. 'பண்ணலாம் சர்ஜூன்'னு சொன்னாங்க. ரொம்ப ஹாப்பியா இருக்கு. 

சர்ஜூன்

நயன்தாரா உங்களுடைய குறும்படங்களைப் பார்த்திருக்காங்களா? 

“பார்த்திருக்காங்க. அவங்களுக்கு 'மா' ரொம்பப் பிடிச்சிருந்துச்சுனு சொன்னாங்க. ரொம்ப எமோஷனலா இருந்துச்சு, நல்லா பண்ணியிருக்கீங்கனு சொன்னாங்க. முக்கியமா, மேக்கிங் நல்லாயிருந்துச்சுனு வாழ்த்தினாங்க.'' 

படத்தின் ஷூட்டிங் எப்போது?

“இப்போதான் படத்தின் ஒப்பந்தத்தில் சைன் பண்ணியிருக்கோம். இனிமேல்தான் ஷூட்டிங் ப்ளான் பண்ணணும். படத்துல நடிக்கப்போற மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்ஸ் எல்லாம் இன்னும் முடிவாகலை. இந்தவாரக் கடைசியில் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் வரும்.” 

படம் எந்த மாதிரியான ஜானர்?

“இது, ஹாரர் படம். அதேசமயம், எமோஷனலான விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்தின் கதை எழுதுறப்போ, இந்தக் கதைக்கு பெரிய நடிகர், நடிகை யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். என் லக்... நயன்தாரா மேடத்துக்குக் கதை பிடிச்சிருந்தது.” 

உங்களுடைய எல்லாப் படமும் பெண்களை மையப்படுத்தின கதையாவே இருக்கே?

“அப்படி இல்லை. எனக்கு என்ன தோணுதோ, அதை மையமா வெச்சுக் கதை எழுதுவேன். அது பெண்களை மையப்படுத்தின கதையாக வந்திருக்கு. இப்போ, நான் யோசித்த கதைகூட யதார்த்தமா அமைஞ்சதுதான். என்கிட்ட வேறு மாதிரியான கதையும் தாராளமா எதிர்ப்பார்க்கலாம்.” 

உங்களுடைய முதல் படம் எந்த மாதிரியான ஜானர்?

“என்னுடைய முந்தைய  ஷார்ட் ஃபிலிம் ஜானருக்கும், 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் ஜானரும் மொத்தமாக வேற. இரண்டுக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. இது ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். ஒரேநாளில் நடக்கிற கதை. சத்யராஜ் சார் ரிடையர்ட் போலீஸ் ஆபீஸரா நடிச்சிருக்கார். படம் நல்லா வந்திருக்கு!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!