ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் லாரன்ஸ் | Actor Raghava Lawrence helped jallikattu protest yogeshwaran family.

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (07/02/2018)

கடைசி தொடர்பு:08:06 (08/02/2018)

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் லாரன்ஸ்

'எல்லாரும் ஒண்ணா சேர்ந்து நடத்துன போராட்டத்தோட வெற்றியின் காரணமாதான் இன்னைக்கு ஊர் முழுக்க ஜல்லிக்கட்டு கொண்டாடுறாங்க. ஆனா, இந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்ட என் பையன் இப்போ, உயிரோட இல்லை. அவன் எனக்கு ஒரு வலதுகை மாதிரி. ஓடி ஓடி உழைப்பான். அவனை நினைச்சு நானும், என் வீட்டில் இருக்குறவங்களும் பட்டுக்கிட்டு இருக்கிற கவலை அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்'' - கண்ணீர் மல்க தன் மகன் யோகேஸ்வரனை இழந்த சோகத்துடன் பேச ஆரம்பிக்கிறார், அவருடைய அம்மா புஷ்பா. 

யோகேஸ்வரன்

கடந்த வருடம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் யோகேஸ்வரனும் ஒருவர். சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் அந்தப் பகுதியில் போராட்டம் நடந்தபோது மாணவர்களுடன் சேர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டார். அப்போது, உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்து ரயில்மீது ஏறியபோது, அதிக மின்சாரம் பாய்ந்ததில் யோகேஸ்வரன்  இறந்துபோனார். 

யோகேஸ்வரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலத்துக்குச் சென்ற நடிகர் லாரன்ஸ், 'உங்களுடைய மூத்த பையனா, நான் இருந்து உங்களைப் பார்த்துக்கிறேன்' என அவரின் குடும்பத்தாரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார். வாக்குறுதி கொடுத்தது மட்டுமின்றி, அதை நிறைவேற்றும்விதமாக, யோகேஸ்வரன் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார். யோகேஸ்வரனின் நினைவு நாளான இன்று, இந்த வீட்டுக்கான கிரகப்பிரவேசத்தையும் நடத்துக்கிறார், ராகவா லாரன்ஸ். இது பற்றித் தெரிந்துகொள்ள யோகேஸ்வரன் அம்மா புஷ்பாவிடம் பேசினேன். 

 

''எனக்கு ரெண்டு பசங்க. ஒரு பையன்; ஒரு பொண்ணு. யோகேஸ்வரன்தான் வீட்டுக்கு மூத்த பையன். யோகேஸ்வரனோட அப்பா பேக்கரி கடையில வேலை பார்க்கிறார். அவர் ஒருவரின் வருமானம் வீட்டுச் செலவுக்குப் பத்தலை. அதனால, பத்தாவது முடித்தவுடன் யோகேஸ்வரன் கண்ணாடிக் கடையில வேலைக்குப் போயிட்டான். அவனுக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அவன் கொடுத்த பணத்தை வெச்சுதான் பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வெச்சிக்கிட்டு இருந்தேன். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். சொந்தமா நிலம்கூட கிடையாது. 

யோகேஸ்வரன்

போன வருடம் ஊர் முழுக்க ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தப்போ, எங்க ஏரியாவில் இருந்த பசங்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துக்கிட்டாங்க. அவங்ககூட சேர்ந்து யோகேஸ்வரனும் போராட்டத்துக்குப் போனான். நானும் நல்ல விஷயத்துக்குத்தானே பையன் போறான்னு எதுவும் சொல்லலை. போராட்டம் நடந்துக்கிட்டு இருந்த மூணாவது நாள் ரயில் மறியலில் சிலபேர் ஈடுபட்டு இருக்காங்க. யோகேஸ்வரனும் சேர்ந்து ரயில்ல ஏறி போராட்டம் நடத்தி இருக்கான். அப்போ, மின்சாரம் அவன்மீது பாய்ஞ்சிருச்சு. ஆபத்தான நிலையில அவனை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அவனுக்கு இப்படி நடந்த விஷயம் எனக்கு சாயங்கலாம் நாலு மணிக்குதான் தெரியவந்துச்சி. உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் பையனைப் பார்த்தோம். இரண்டு நாள் நல்லா சிரிச்சுப் பேசிக்கிட்டு, சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். ஆனா, மூணாவது நாள் மூச்சுத் திணறல் அதிகமாகி இறந்துட்டான். எனக்கு என் உயிரே என்னை விட்டுப் போனமாதிரி இருந்துச்சு. எப்படியாவது நல்லபடியா வீட்டுக்கு வந்துடுவான்னு நினைச்சேன். ஆனா, அந்த சாமி என் பையன் உசிரை எடுத்துருச்சி. என் பையன் இறந்தப்போ, அவனுக்கு பதினேழு வயசுதான்!. 

யோகேஸ்வரன்

பையன் இறந்த செய்தி கேட்ட அன்னைக்கே, லாரன்ஸ் தம்பி ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வந்தார். 'உங்க பையன் இடத்துல நான் இருந்து உங்களைப் பார்த்துக்குவேம்மா, கவலைப்படாதீங்க'னு சொன்னார். ஏதோ ஆறுதலுக்கு சொல்றார்னு நினைச்சேன். ஆனா, வெறும் வார்த்தையா மட்டுமில்லாம எங்களை நல்லபடியா பார்த்துக்கிட்டு வர்றார். எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. என் பையன் யோகேஸ்வரன், 'அம்மா, நான் நல்லா சம்பாதிச்சு உனக்கு சொந்தவீடு கட்டித்தருவேன்'னு அடிக்கடி சொல்வான். இதைக் கேள்விப்பட்ட லாரான்ஸ், நான் ஆசைப்பட்ட இடத்திலேயே இடம் வாங்கி, வீடு கட்டிக்கொடுத்திருக்கார். இதுமட்டுமில்லாம, ' என் பொண்ணு படிப்பு செலவையும் நானே எடுத்துக்குறேன்' னு சொல்லியிருக்கார். இந்த மனசு யாருக்குமே வராது. 

லாரன்ஸ்

 

என் பையன் இறந்தபிறகு இதுவரைக்கும் சொந்தக்காரங்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி யாருமே  என்ன ஆச்சுனு கேட்டதில்லை. எங்களுக்கு ஆதரவா யாருமே எந்த உதவியும் செய்யவுமில்லை. ஆனா, லாரன்ஸ் தம்பிதான் எங்களுக்கு உதவியா இருக்கார். 

இன்னைக்கு டி.வி-யில ஜல்லிக்கட்டு நடக்கிற செய்தியைப் பார்க்கும்போது எனக்கு அழுகையா வரும். ஜல்லிக்கட்டுக்காகத்தானே என் பையன் உயிரையே விட்டான். இன்னைக்கு ஊர் பூரா ஜல்லிக்கட்டு கொண்டாடுறாங்க. ஆனா, யோகேஸ்வரன் குடும்பம் என்ன ஆச்சுனு யாருமே எட்டிப் பார்க்கலை; விசாரிக்கக்கூட வரலை. ஹாஸ்பிட்டல்ல யோகேஸ்வரனைப் பார்க்க யாருமே வரலை. லாரன்ஸ் தம்பி இல்லைன்னா என் குடும்பத்தின் வாழ்க்கை கேள்விக்குறியா போயிருக்கும். இவர் இருக்கிறதனாலதான் நாங்க உயிரோட இருக்கோம். ஆனாலும், யோகேஸ்வரன் இல்லாத கவலை எங்களை விட்டு எப்பவும் போகாது'' கண்ணீர் மல்கச் சொல்கிறார், புஷ்பா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close