"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்கள்... இங்கிலாந்தை அசத்தும் 'தரங்' இசைக்குழு" | an article about tarang musical band in london run by tamil based people

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (13/02/2018)

கடைசி தொடர்பு:16:47 (13/02/2018)

"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்கள்... இங்கிலாந்தை அசத்தும் 'தரங்' இசைக்குழு"

'தரங்' என்னும் பெயர் கொண்டுள்ள இசைக்குழு லண்டனில் இயங்கி வருகிறது. இந்த இசைக்குழு மேற்கத்திய இசைக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், கடம், கஞ்சீரா போன்ற இந்திய இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி கச்சேரிகள் நடத்தி வருகிறார்கள். இந்த இசைக்குழுவிற்கு அந்த நாடே நிதி ஒதுக்கி இதன் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. அந்தப் பகுதியில் வாழும் கைத்தேர்ந்த இந்திய பாரம்பர்ய இசைக்கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, இந்தக் குழுவை உருவாக்கி ஆங்கிலத்தில் பாடல்களை எழுதி அதனை இந்திய பாரம்பர்ய இசைக்குத் தகுந்தாற்போல் பாடி புதுமை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக 'மெரினா', 'அவள்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் செயல்பட்டு வருகிறார். 'தரங்' குழுவைப் பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தோம். 

தரங் இசைக்குழு

"இந்தக் குழுவில் இருக்கும் 70 சதவிகித நபர்கள் இலங்கை தமிழர்கள். மீதமுள்ள 30 சதவிகித நபர்கள் பூர்வீகத்தை இந்தியாவாகக் கொண்டவர்கள். ஒவ்வொரு இசைக்கருவியிலும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை வைத்து ஆரம்பிக்கிப்பட்டதே இந்த 'தரங்'. இதனை லண்டன் அரசு நிதி ஒதுக்கி 'மிலாப்ஃபெஸ்ட்' (Milapfest) என்ற நிறுவனத்தின் மூலம் இது போன்ற கச்சேரிகளை ஒருங்கிணைத்து வருகிறது. லண்டன் பல நாடுகளில் ஆட்சி செய்ததனால், பல நாடுகளில் உள்ள இசையின் சிறப்பம்சங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளது. அதனால், லண்டன் காலனிக்குள் இருந்த நாடுகளின் இசைகளையும் வெவ்வேறு பெயர்களில் அந்த இசைக்கலைஞர்கள் கான்சர்ட்களை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு உள்ள பல நேஷனல் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் 'தரங்' என்பது இந்திய பாரம்பர்ய இசையை மையப்படுத்திச் செயல்படுவது. இந்தக் குழுவின் தனித்தன்மையே மேற்கத்திய இசை அல்லாமல் இந்திய பாரம்பர்ய இசையை வைத்து அதற்கு ஆங்கிலத்தில் பாடல் எழுதி, பாடி இதுவரை கேட்காத மாதிரி புதுமையான ஆல்பங்களை உருவாக்குவதுதான். நான் லண்டனில் படித்தபோது இந்த மாதிரியான மியூசிக் பண்ணியிருக்கேன். அதனால், என்னை அழைத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு இசைக்கருவிகளை வாசிப்பது போன்று இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதிலும் ஒருவர் மிருதங்கத்தையும் எலக்ட்ரானிக் ட்ரம்மையும் ஒரே நேரத்தில் வாசித்து அசத்துவார். 

கிரிஷ்

இந்தக் குழுவில் இருக்கும் நபர்கள் அனைவரும் சேர்ந்து 14 ட்ராக்குகளை இசையமைத்து வெளியிட்டுள்ளோம். இந்த ஆல்பத்தை 'விடியும் முன்' படத்தில் அசோசியேட்டாகப் பணிபுரிந்த ஆப்ரகாம் என்பவர் இயக்கினார். அதில் ஹரிஸ் உத்தமனும் கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ளனர். அந்த நாட்டில் இசைக்குக் கதை எல்லாம் இருக்காது. அதைப் பார்க்கும்போது ஒரு ஃபீல் கிடைக்க வேண்டுமென்பதே அவர்களது குறிக்கோள். நான் அந்தக் குழுவில் இருக்கும் இசைக்கலைஞர்களின் ஐடியாக்களைச் சொல்லும்போது, அதை உள்வாங்கி அவர்களின் இசை எல்லாம் சேர்த்து ஒரு புதுமையைக் கொடுப்பதுதான் என் வேலை. லண்டன், மான்செஸ்டர், லிவர்பூல் ஆகிய இடங்களில் இவர்களின் கான்சர்ட்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்கள் வரும் மாதங்களில் சென்னை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் கான்சர்ட்களை நடத்த இருக்கிறார்கள். உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்களுக்கு இவர்களின் இசையைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நம் ஊரில் இசைக்கு என்று தனி துறையே இல்லை. சினிமாவுடன் சேர்ந்துதான் இசையும் வருகிறது. சினிமா பாடல்களைத்தான் கான்சர்ட்களிலும் பாட வேண்டியிருக்கிறது. சுயாதீன இசை கொஞ்ச காலமாகத்தான் நம் ஊரில் வளர்ந்து வருகிறது. அதனை நன்றாக ஊக்குவித்தால் இது போன்ற இசையில் பல புதுமையான விஷயங்களை  நம் மக்களும் செய்வார்கள்" என்றபடி முடித்தார் க்ரிஷ்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்