Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"காதல் தோல்வியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. ஆனா... இப்படிப் பண்ணலாம்!" - 'லவ்' குரு ராஜவேல் #BreakUpNallathu

காதலை பற்றி தெரிஞ்சுக்க கண்டிப்பாக இவரிடம் பேசினாலே போதும். காதல் படிப்பைக் கரைத்துக் குடித்தவர். காதலுடன் தினமும் உரையாடிக்கொண்டிருப்பவர். காற்றலையில் தினந்தோறும் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்கும் ரேடியோ சிட்டி ஆர்.ஜே. லவ் குருவிடம் 'லவ் ப்ரேக் அப்' பற்றி சில கேள்விகளை முன் வைத்தோம். 

ஆர்,ஜே.லவ் குரு

உங்கள் வாழ்க்கையில் பிரேக்அப்  நடந்திருக்கா? 

நிறைய நடந்திருக்கு. இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்தோம். எல்லோர் வாழ்க்கையிலும் சின்சியரான காதல் இருக்குமில்லையா... என் வாழ்க்கையிலும் இருந்துச்சு. ஒரு கட்டத்துக்குமேல அவங்க அம்மா, அப்பாவுக்கு எங்கள் காதலைப் புரிய வைக்க முடியலை. நாங்க ரெண்டு பேரும் எவ்வளவோ முயற்சி பண்னோம், முடியலை. அவங்க சம்மதம் வாங்க நான் என்ன பண்னாலும் அது தப்பாவே போகும். அவங்க அப்பாவுக்கு நான் ஒரு லெட்டர் அனுப்பினேன். அந்த லெட்டரை அவர் படிச்சுப் பார்த்துட்டு, ''பாரு, லெட்டரை கையால எழுதாம டைப் பண்ணி அனுப்பியிருக்கான். கையாலே எழுதுனா 'மாட்டிக்குவோம்'னுதான் டைப் பண்ணி அனுப்பியிருக்கான்'னு அதிலேயும் ஒரு தப்பு கண்டுபிடிப்பார். அவரைக் கவர் பண்ண அவருடைய நண்பரை நான் ஃப்ரெண்ட் ஆக்குவேன். ''பாரேன், அவன்கிட்ட இந்தக் காதல் பிரச்னையைச் சொல்லி அசிங்கப்படுத்துறான்'னு சொல்வார். ஒரு கட்டத்துக்குமேல அவளால் அவங்க அம்மா, அப்பாவை அழ வைக்க முடியாதுனு சொல்லிட்டா. அதனால, அவ என்கிட்ட வந்து, 'நான் போராடிப் பார்த்துட்டேன். அவங்க மனசை மாத்த முடியாது. நாம பிரிஞ்சிடலாம்'னு சொல்லிட்டா. ரெண்டு பேரும் சுமுகமா பிரிஞ்சிட்டோம். அதுக்கு அப்புறம் கடுப்புல அவளைத் திட்டிக்கிட்டு எல்லாம் இருந்தேன். அவளுடைய ஃப்ரெண்ட்கிட்டகூட 'அவ, நல்லாவே இருக்கா மாட்டா'னு சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் ஏன் அப்படி சொன்னோம்னு ஃபீல் பண்ணி, 'எங்கிருந்தாலும் வாழ்க'னு வாழ்த்தவும் செஞ்சிருக்கேன். 

பிரேக் அப்பிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகுறது?

எஸ்கேப் ஆகவே முடியாது. வேணும்னா, பிரேக் அப் வலியிலிருந்து எஸ்கேப் ஆகலாம். பிரேக்அப் ஆகும்போது கஷ்டமாதான் இருக்கும். கண்டிப்பா, பலரும் அவங்க வாழ்க்கையில் இந்த வலியை அனுபவிச்சுதான் வந்திருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு மனுஷன் பிரேக்அப் வலியிலிருந்து தப்பிக்குறது என்பது சாத்தியமே இல்லை. ஏன்னா, பிரேக்அப் என்பதை லவ் பண்ற ரெண்டு பேர் மட்டுமே முடிவு பண்றதில்லை. அவங்க பார்க்குற வேலை, அவர்களுக்குள் இருக்கும் தூரம், நண்பர்கள், சோஷியல் மீடியானு எல்லாமே முடிவு பண்ணுது. இது எல்லாத்தையும் தாண்டிதான் இங்கே ஒரு காதலை சக்சஸ் ஆக்கி கல்யாணத்துல கொண்டுபோக முடியும். ஒரு சிலர் சொல்வாங்க, 'இவங்கதான் என்னைக் காதல் வலியிலிருந்து மீட்டாங்க'னு அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. நம்ம மனசுக்குள்ளே ஒரு முடிவு எடுத்திருப்போம் 'பிரேக்அப்' வலியிலிருந்து மீண்டு வரலாம்னு. அதுக்குக் கருவியா மத்தவங்களைப் பயன்படுத்தியிருப்போம். அதுதான் உண்மை. யாராயிருந்தாலும் வலியிலிருந்து வெளியே வரலாமா, வேண்டாமா என்பதை அவங்கதான் முடிவு பண்றாங்க. அதுக்கு இன்னொருத்தவங்களை உதாரணமா காட்டுறாங்க. என் ரேடியோ நிகழ்ச்சிகூட அப்படித்தான். யாரையும் நம்ம கையை பிடிச்சு, 'வாங்க, உங்களை இந்த வலியிலிருந்து வெளியே கொண்டு வர்றோம்'னு சொல்றதில்லை. நம்ம வேலையைப் பண்றோம். அந்த வேலை அவங்களுக்குள்ள ஒரு வேலையைப் பார்க்குது. 

உங்க வாழ்க்கையில் நீங்க பார்த்த வித்தியாசமான பிரேக்அப்?

என் நிகழ்ச்சியில் ஒண்ணு நடந்துச்சு. கார் டிரைவரை ஐ.டியில் வேலை பார்க்குற பொண்ணு லவ் பண்ணியிருக்கு. இந்தப் பொண்ணு என் நிகழ்ச்சிக்கு லெட்டர் எழுதுச்சு. 'ஒரு கார் டிரைவரை லவ் பண்னேன். இப்போ, அவரை பிரேக்அப் பண்ணலாம்னு நினைச்சா, அவர் ரொம்ப கோபமா பிஹேவ் பண்றார்'னு எழுதியிருந்தாங்க. நான் அந்தப் பையன் நம்பர் வாங்கிப் பேசினேன். அவர் என் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்குற நேயர். அவர்கிட்ட பேசுன உடனே உடைஞ்சு அழுதுட்டார். 'சார், அந்தப் பொண்ணை நான் முதல்ல லவ் பண்ணவேயில்ல. அந்தப் பொண்ணுதான் எனக்குப் புரொபோஸ் பண்னாங்க. அப்பவே என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எனக்கு வார்ன் பண்ணாங்க. இது பெரிய இடம் வேண்டாம்'னு. ஆனா, நான் அவங்களைத் தீவிரமா லவ் பண்ண ஆரம்பிச்சேன். கடைசி நாலு, ஐந்து மாசமா என் காருக்குக்கூட தவணை கட்டலை, அவங்களுக்குதான் எல்லாத்தையும் செலவு பண்ணியிருக்கேன். இப்போ, அவங்க என்னை விட்டுப்போனாக்கூட பரவாயில்லை. ஆனா, அவங்களுக்கு நான் செலவு பண்ணுன ஐம்பதாயிரத்தை கொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க'னு சொன்னார். இதை அப்படியே அந்தப் பொண்ணுக்கிட்ட சொன்னேன். அந்தப் பொண்ணு, 'பார்த்தீங்களா, எப்படி கீழ்த்தரமா நடந்துக்கிறார்'னு சொல்லி அவரைப் பத்தி தப்பா பேசுனாங்க. ரெண்டு பேரும் பிரியலாம்னு முடிவு பண்ணியாச்சு. நீங்க முடிவு பண்ணுங்கனு சொன்னேன். அந்தப் பொண்ணு பணத்தைக் கொடுக்கவும் ஓகே சொன்னாங்க. கடைசியில அந்த கார் டிரைவர், 'எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். நான் கோபத்துலதான் சொன்னேன். அவளுடைய அடுத்த காதலாவது உண்மையா இருக்கட்டும்'னு சொல்லிட்டுப் போயிட்டார். இந்தக் கதையை  பேஸ் பண்ணி இப்போ ஒரு குறும்படமே ரெடி ஆயிட்டு இருக்கு!.  

ஒரு மனுஷனுக்கு எத்தனை முறை காதல் வரலாம்?

காதல் இத்தனை முறைதான் வரணும்னு சொல்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா, ஒருமுறை வந்தால்தான் காதல், ரெண்டாவது முறை வந்தால் தேவை. முதல் காதல்தான் உண்மையானது, புனிதமானது அப்படினு சொல்வதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில போதும்ங்கிற அளவுக்கு, பண்ணலாம். ஒரு சிலர் வெளியே சொல்வாங்க, பலர் சொல்லமாட்டாங்க. அதுதான் உண்மை. என்னைப் பொறுத்தவரைக்கும் இத்தனை தடவைதான் காதல் வரணும் அப்படினு எந்தவொரு கட்டுப்பாடுமில்லை. 

காதல் தோல்விக்குப் பிறகு தாடி வைக்கிறவங்க, சரக்கு அடிக்கிறவங்களையெல்லாம் எப்படித் திருத்தலாம்னு நினைக்கிறீங்க? 

அவங்களைத் திருத்த முடியாது. காதல் தோல்வியில் ஒருத்தன் இருக்கும்போது குழப்பமான மனநிலையில் இருப்பான். ஐந்து வருடம் ஒருத்தன் உருகி உருகி காதல் பண்ணியிருக்கான். ஆனா, அவனுக்கு இன்னைக்கு பிரேக்அப் ஆயிருச்சு. மறுநாளிலிருந்து அவன் ரெகுலர் வாழ்க்கையை அப்படியே வாழ ஆரம்பிச்சுட்டான்னா, இந்தச் சமூகம் அவனை, 'எவ்வளவு சீரியஸா லவ் பண்ணுனான். அந்தப் பொண்ணு விட்டுவிட்டுப் போயிருச்சு. இவன் கொஞ்சமாவது மனசுல சோகம் இருக்குதா பாரு'னு சொல்லுது. இதை அவன் தாடி வெச்சுட்டு சுத்திக்கிட்டிருந்தா, 'அறிவுகெட்ட பையன், ஒரு பொண்ணு விட்டுட்டுப் போனதுக்காக தாடி வெச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கான்'னு அப்போவும் இந்தச் சமூகம் பேசும். ஸோ, இந்தத் தாடி வைக்கிறது, தண்ணி அடிக்கிறது எல்லாம் மத்தவங்க நம்மளைப் பார்த்துப் பரிதாபப்படணும்னுதான். அது நமக்குப் பிடிக்கும். நம்மளும் அதை என்ஜாய் பண்ணுவோம். இந்தக் கை, காதை, மூக்கை அறுத்துக்குறதுகூட இதுக்குதான். உண்மை என்னானா, இந்தக் காதல் வலியை யாரொருவன் கடந்து வர்றானோ,  அவன் அடுத்த காதலில் உண்மையா இருப்பான். போலித் தன்மை இருக்காது.

பிரேக்அப் ஆனதுக்கு அப்புறம், ஏன் அப்படி ஆச்சுனு யோச்சிருக்கீங்களா? 

கண்டிப்பா... தவறுகள் நம்ம பக்கம்தான் இருந்திருக்குங்கிற எண்ணமும் வந்திருக்கு. அந்தக் குற்ற உணர்ச்சியின் அடிப்படையில் அவங்ககிட்ட என்னைக்காவது ஒருநாள் மன்னிப்பு கேட்கணும்னு ஆதங்கமும் வந்திருக்கு. என் நிகழ்ச்சியில் பேசும்போது சொல்வேன், 'அன்பை நிராகரிக்காதீங்க'னு. ஏன்னா, நான் அதை ஃபீல் பண்ணியிருக்கேன். நம்ம வாழ்க்கையில யாரோ ஒருத்தருக்கு நாம துரோகம் செய்தால் நமக்கான துரோகம் ரெடியா வேறொரு இடத்தில் காத்திருக்கும். உயிருக்கு உயிராய் நேசிக்குற ஒரு பெண்ணை நிராகரிக்கிறதைவிட இந்த உலகத்தில் பெரிய பாவம் எதுவுமே இல்லை. அந்தப் பாவத்தை எந்தவொரு தருணத்தில் நாம செஞ்சுட்டு எந்தவொரு உறுத்தலும் இல்லாம நடந்து வருவோமில்லையா.. அது என்னைக்காவது நம்ம வாழ்க்கையில் சின்னதா உறுத்திக்கிட்டே இருக்கும்.

கிறுக்குத்தனமான காரியம் ஏதாவது லவ் பிரேக்அப்புக்குப் பிறகு பண்ணியிருக்கீங்களா?

எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சிருந்தாங்க. அதனால, அவங்க அதெல்லாம் பண்ணவிடாம பார்த்துக்கிட்டாங்க. அதிகபட்சமா என் வாழ்க்கையில் நான் பண்ன கிறுக்குத்தனமான விஷயம், அந்தப் பொண்ணு பெயரை டாட்டூ குத்துனது. கல்யாணத்துக்கு முன்னாடி அந்த டாட்டூ மேலே வேறொரு டாட்டூ போட்டு மறைச்சுட்டேன்.  

காதல் தோல்வி பாடல்களில் உங்கள் ஃபேவரைட்?

'7/G ரெயின்போ காலனி' படத்துல வந்த 'நினைத்து நினைத்து பார்த்தால்' பாட்டுதான். இந்தப் படமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். தவிர 'தீபாவளி' படத்துல வர்ற 'போகாதே போகாதே' பாட்டும் பிடிக்கும். என் நிகழ்ச்சியில் இந்த ரெண்டு பாட்டையும் அடிக்கடி கேட்கலாம்' எனச் சொல்லி முடிக்கிறார் ரேடியோ சிட்டி ஆர்.ஜே. லவ்குரு. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்