''இந்தக் குருவி பனங்காய் இல்ல.... பாறாங்கல்லைக் கூடத் தாங்கும்!' - விஜய் பற்றி விக்ரமன் #22yearsOfPooveUnakkaga

தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வரும் போகும். சில காதல் படங்களே காவியங்களாக மாறி மக்கள் மனதில் உன்னத இடம் பிடிக்கும். அந்த வகையில், நல்ல காதல் திரைப்படமாகவும், நல்ல நடிகனாக விஜயையும் நிலை நிறுத்திய இந்த "பூவே உனக்காக" திரைப்படம் வெளிவந்து 22 வருடங்கள் ஆனதையொட்டி இயக்குநர் விக்ரமனை தொடர்புகொண்டோம்.

பூவே உனக்காக

"பூவே உனக்காக" திரைப்படத்துக்கு எதனால் விஜய் தேவைப்பட்டார்?

" 'பூவே உனக்காக' கதையை பண்ணி முடிச்சதுமே, ஒரு யூத்தான ஆர்டிஸ்ட் அந்தக் கதைக்குத் தேவைப்பட்டார். அதுவரைக்கும், விஜய் நடிச்ச எந்தப் படத்தையும் நான் பார்த்தது கிடையாது. ஒருநாள் டிவியில் 'தேவா' படத்தோட பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. எனக்கு விஜயை  ரொம்பப் பிடிச்சிருந்தது. இவரு இந்தக் கதைக்கு நிச்சயம் பொருந்துவார்னு முடிவு பண்ணேன். அதற்கப்புறம் இந்தக் கதையில் நடிக்க விஜயைத் தவிர வேற யாரையும் நான் அணுகலை."

விஜய் கமிட் ஆனதும் உங்ககிட்ட யாராவது நெகட்டிவ்வா சொன்னாங்களா?

''நிறைய பேர் சொன்னாங்க. அப்போ அவருடைய இமேஜ் வேற. என் கதையோட இமேஜ் வேற. ஒரு ஃபேமிலி ஓரியன்டட் கதையில அவரு செட் ஆக மாட்டாரு. நீங்க ரிஸ்க் எடுக்குறீங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க. இந்த 'பூவே உனக்காக' படத்துல நடிச்ச ஒரு நடிகரே கூட, "நீங்க இந்தப் பையனை வெச்சு ரிஸ்க் எடுக்குறீங்க. குருவி தலையில பனங்காயை வைக்கிறீங்க. இந்தக் கதைக்கு எப்படி இந்தப் பையன் செட் ஆவான்'னு சொன்னாரு. 

முதல் நாள் நாகர்கோவில்ல ஷூட்டிங் நடந்துச்சு. ஷூட்டிங் முடிஞ்சதுக்கப்புறம், டெலிபோன் பூத்துக்குப் போய் அந்த நடிகருக்குக் கால் பண்ணி சொன்னேன், "குருவி தலையிலை பனங்காயை வைக்கிறேன்னு சொன்னீங்க. ஆனால், இந்தக் குருவி தலையில பனங்காயை இல்லை சார், பாறாங்கல்லை வெச்சாலும் தாங்குவான் சார்."னு சொன்னேன். ஏன், சௌத்ரி சாருக்கே கூட பிரசாந்தை ஹீரோவா போடலாம்னு அபிப்பிராயம் இருந்துச்சு. நான் ஒருத்தன் மட்டும்தான் விஜய் இந்த கேரக்டர்க்கு உயிர் கொடுப்பாருன்னு நம்பினேன்.''

பூவே உனக்காக

விஜய் இந்தப் படத்திற்கு எவ்வளவு உழைப்பை கொடுத்தார்?

''அவரு மேக்சிமம் அவுட்புட் என்னவோ அதை அவ்வளவு சிறப்பா கொடுத்தாரு. நல்லா டெடிகேட் பண்ணார். அப்போவே  எல்லா தயாரிப்பாளர்களுக்கும் போன் பண்ணி, "தயவு செஞ்சு விஜயை வெச்சுப் படம் பண்ணுங்க. ரொம்ப சின்சியர் ஹீரோ. ஏழு மணிக்கு ஷூட்டிங்னா ஆறரை மணிக்கு எல்லாம் மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்துடுவாருன்னு" ரெக்கமண்ட் பண்ணேன். சிட்டுலெட் சாங்குல ஊட்டி மலை உச்சியில இருந்து குதிரையில கீழே வரணும். முதல்முறையா அவரேதான் குதிரையில வந்தாரு. அப்போ, குதிரையில இருந்து விழுந்து கால் மடங்கி ஸ்லிப் ஆகிட்டாரு. அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமல் இரண்டாவது தடவையே அந்த ஷாட்டை ஓகே பண்ணாரு. அந்தப் படத்துல ஒரு ஃபைட் இருந்துச்சு. அந்த ஃபைட்டுக்குலாம் டூப் வெச்சிக்கமாட்டாரு. ஆனா அந்த ஃபைட்டை நாங்க தூக்கிட்டோம். டான்ஸ்தான் எல்லாருக்கும் தெரியுமே. ஷூட்டிங் அப்போலாம், "ஒரு இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கிற ஹீரோக்குள்ள இவ்ளோ திறமையான்னு" ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கேன். 

"பூவே உனக்காக " படத்தோட வெற்றியை நீங்களும் விஜயும் எப்படிக் கொண்டாடுனீங்க? 

'பூவே உனக்காக' கதையைச்  சொல்லி முடிச்சதுல இருந்து "இந்தக் கதை நிச்சயம் சூப்பர் ஹிட்டுங்கறதுல" ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு விஜய். இந்தப் படத்தோட வெற்றி மிகப்பெரிய சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்தது. வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி கிடைச்சுது. ஏழெட்டு சென்டர்ல 270 நாள்களுக்கு மேல ஓடுச்சு. இடையில தீபாவளி வந்துடுச்சு. இல்லனா நிச்சயம் ஒரு வருடம் ஓடியிருக்கும். படத்தைத் தூக்குறவரைக்கும்கூட 80% ஆடியன்ஸ் வந்துட்டு இருந்தாங்க. 

விஜய்க்கும் இது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. அதுவரைக்கும் கமர்ஷியலா பண்ணிட்டு ஒரு கிளாஸ் ஹிட் கொடுத்தது விஜய்க்கும் ஒரு மனநிறைவைத் தந்துச்சு. மேலும், இந்தப் படம் மேல ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்ததால அந்த வெற்றி விஜய்க்கு சர்ப்ரைஸ் தரலை. இந்த வெற்றி அவர் எதிர்பார்த்த ஒண்ணுதான்.''

பூவே உனக்காக

"பூவே உனக்காக " படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிறது. எப்படி ஃபீல் பண்றீங்க?

''விஜய் இவ்வளவு பெரிய உயரத்துக்குப் போயிருக்காரு. படம் பண்ணும்போதே எதிர்பார்த்ததுதான், "இவரு நிச்சயம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவார்"னு உறுதியா நம்புனேன். ஒரு நல்ல படம்ங்கறது என்னன்னா, காலம் கடந்தும் அந்தப் படம் கொண்டாடப்படணும். அவ்வளவுதான். 'பூவே உனக்காக' படம்  பார்த்த யங்ஸ்டர்ஸ் எல்லோருக்கும் இப்போ 40, 45 வயசு இருக்கும். ஆனால், அதற்கடுத்த பதினாறு வயசு தலைமுறைகூட இந்தப் படத்தைக் கொண்டாடுறாங்க. இதற்குமேல என்னங்க வேணும்... ரொம்ப சந்தோஷமா இருக்கு."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!