’’அஜித் ’முகவரி’ கதை கேட்கவேயில்லை..!’’ - வி.இஸட்.துரை #18YearsOfMugavaree #VikatanExclusive | Director v.z.dhorai speaks about mugavaree movie experience

வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:31 (20/02/2018)

’’அஜித் ’முகவரி’ கதை கேட்கவேயில்லை..!’’ - வி.இஸட்.துரை #18YearsOfMugavaree #VikatanExclusive

ஓர் அறிமுக இயக்குநர் என்றைக்குமே தன்னுடைய முதல் படத்தை மறக்க மாட்டார். அது அவருக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த முதல் படத்தில் டாப் நடிகர்கள், டெக்னீஷியர்கள் வேலை பார்த்தால்... படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால்...  இன்னும் ஸ்பெஷலாகத்தானே இருக்கும். வி.இஸட்.துரைக்கு அப்படியான படம்தான் ’முகவரி’. ’ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ் ஆகிடுச்சு...’னு விகடன் பேட்டியில் வி.இஸட்.துரை சொல்லியிருப்பார். இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துக்கொள்ள அவரிடம் பேசினோம். 

முகவரி

’முகவரி’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?

’’பல இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பு அதிக சிரமங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும். ஆனால், எனக்கு அப்படியில்லை. ’காதல் கோட்டை’ படம் வருவதற்கு முன்னாடியே அதே மாதிரி ஒரு கதையை லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளி சாரிடம் சொல்லியிருந்தேன். அப்போது நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தனால படம் ஆரம்பிக்க தாமதமாச்சு. கொஞ்ச நாள்ல ’காதல் கோட்டை’ படமும் ரிலீஸாகிடுச்சு. அந்தப் படம் ரீச்சான அதே சமயம், இதே மாதிரி ஒரு கதையை இன்னொரு பையனும் சொல்லிட்டு இருந்தான்னு, நானும் ரீச்சானேன். அப்போது இருந்த டாப் தயாரிப்பாளர்கள் எல்லாரும் என்னை அழைத்துக் கதை கேட்டார்கள். அப்படி நான் சக்கரவர்த்தி சார்கிட்ட சொன்ன கதைதான் முகவரி. ’சூப்பர்யா... இதுதான் உன்னோட முதல் படம்’னு அவர் சொல்லி, எனக்கு கிடைத்ததுதான் ’முகவரி’ வாய்ப்பு.’’

முகவரி

அஜித் இந்தப் படத்திற்குள் எப்படி வந்தார்..?

’’அஜித்தான் இந்தப் படத்தில் நடிக்கணும்னு ஒத்த காலில் நின்னேன். அஜித்தை துரத்தி, துரத்தி ஒரு வழியா நடிக்க வெச்சுட்டேன். அவர் கதை கேட்கவேயில்லை. ’நான் சக்கரவர்த்தியை நம்புறேன், சக்கரவர்த்தி உங்களை நம்புறார்’னு சொல்லித்தான் படத்தில் நடிக்கவே வந்தார். அப்புறம், ’என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி படம் எடுங்க. உங்களுக்கு கார் கிஃப்ட் பண்றேன்’னு சொன்னார். ‘கார் எல்லாம் வேண்டாம் சார். உங்க கால்ஷீட்தான் வேணும்’னு சொல்லி இந்தப் படத்தை தொடங்கினோம். ரீரெக்கார்டிங்கின்போது படம் பார்த்த அஜித்,’ நீங்க சொன்ன மாதிரி நல்ல படம் எடுத்துட்டீங்க. இப்போ நான் சொன்ன மாதிரி உங்களுக்கு கார் கொடுக்குறேன்’னு சொல்லி, அப்பவே சாண்ட்ரோ கார் கிஃப்ட் பன்ணினார்.’’

’முகவரி’ படத்திற்குப் பிறகு உங்களுக்கும் அஜித்திற்குமான நட்பு எப்படியிருக்கிறது..?

''அஜித் இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப மேல போய் ’தல’யா இருக்கார். நான் சாதாரணமா இருக்கேன். இந்த 18 வருஷத்தில் நாங்க அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்கிறது இல்லை. ஆனால், இன்னும் அந்த ’முகவரி’ நினைவுகளில்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். ஷூட்டிங் டைம்ல நாங்க பேசிக்கிட்டது, பழகுனது எல்லாம் என்றைக்கும் மறக்காது. ’முகவரி’ படம் முடிஞ்ச உடனே இன்னொரு படம் பண்ற ஐடியாவில் இருந்தோம். அது ஏனோ இன்னைக்கு வரை நடக்கலை.

அஜித் ஒரு பேட்டியில், ‘நான் நடித்த படங்களில் முகவரி என் மனதிற்கு மிக நெருக்கமான படம்’னு சொல்லியிருப்பார். அதுமட்டுமில்லாமல், ரீரெக்கார்டிங்கில் படம் பார்க்கும்போது, ‘இந்தப் படத்தில் நான் நடிச்ச மாதிரி எனக்குத் தெரியலை. வேற ஆளைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கு’’னு சொன்னார். ஒரு இயக்குநருக்கு இதைவிட வேற என்ன வேணும்.’’

வி.இஸட்.துரை

’முகவரி’ படத்தின் க்ளைமாக்ஸை மாற்றணும்னு கோரிக்கை வந்ததா..?

''ஆமாம். ஆனால், அதுக்காக நாங்க ரீ-ஷூட் போகலை. படத்தோட க்ளைமாக்ஸ் சுபமா இருந்தால்தான் வணிக ரீதியா வெற்றி பெற முடியும்னு, படத்தில் முன்னாடி யூஸ் பண்ணியிருந்த சில ஷாட்டை க்ளைமாக்ஸில் திரும்ப வர்ற மாதிரி பண்ணினோம். ஆனால், ஹீரோ வேற வேலைக்குப் போறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ். சமீபத்தில் பி.சி.ஸ்ரீராம் சாரைப் பார்க்கும்போதுகூட அந்த க்ளைமாக்ஸைப் பற்றிப் பேசினார். அந்தத் தோல்வியிலும் ஒரு சுகம் இருக்கும். நாம யாருக்காக தோல்வி அடைகிறோம், எதுக்காக தோல்வி அடைகிறோம்னு ஒரு விஷயம் இருக்குல. அந்த சுகம் ’முகவரி’ படத்துல இருக்கும்.’’


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close