"சீக்கிரமே கெளதம் மேனன் என் படத்தில் நடிப்பார்!" - 'நாடக மேடை' கார்த்திக் நரேன்.

" 'துருவங்கள் பதினாறு' படம் ரிலீஸான பிறகு எனக்கு ரெண்டு, மூணு மாசம் டைம் இருந்தது. அந்த நேரத்துல இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன். 'நரகாசூரன்' படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. என் அடுத்த அறிவிப்பைச் சொல்ல சரியான நேரம் இதுதான்... அதனால, 'நாடக மேடை' டைட்டிலை அறிவிச்சுட்டேன். கூடிய விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வரும்" - 'துருவங்கள் பதினாறு', 'நரகாசூரன்' படங்களுக்குப் பிறகு, அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார், கார்த்திக் நரேன். 

 

கார்த்திக் நரேன்

 

'நாடக மேடை' ரொம்ப கனமில்லாத படமாகத்தான் ஆடியன்ஸூக்கு இருக்கும். ரொம்ப ஈஸியான ஒரு கதையைத்தான் ரெடி பண்ணியிருக்கேன். இதொரு ஃபீல் குட் ஃபிலிமாக இருக்கும். என் படங்கள்ல இருக்கிற த்ரில்லரைத் தாண்டி, இந்தப் படத்துல ஹூயூமர் எதிர்பாக்கலாம். முழுக்க இளைஞர்களை மையப்படுத்துன கதைதான். இளைஞர்களை மையப்படுத்திருப்பதாலேயே அவர்களுக்கே உண்டான எல்லா விஷயங்களும் படத்தில் நீங்கள் எதிர்பாக்கலாம். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ஒரு நடிகரை மட்டும் சுத்தி நடக்குற கதையா இருக்காது. யார் யார்  நடிக்கப் போறாங்கனு டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருக்கோம். 

என் முந்தைய ரெண்டு படங்களில் என்கூட டிராவல் பண்ணுன என் டீம், இந்தப் படத்திலேயும் இருக்காங்க. ஒரு இயக்குநருக்கு அவருடைய டீம் ரொம்ப முக்கியம். என் மைண்ட்டில் இருக்குறதை என்கூட சேர்ந்து அப்படியே அவங்கதான் திரையில் கொண்டு வரப்போறாங்க. எனக்கு அவங்ககூட நல்ல புரிதல் இருக்கு. இன்னும் பத்து நாளில் 'நரகாசூரன்' படத்தை சென்சாருக்கு அப்ளை பண்ணிருவோம். புரொடக்‌ஷன் சைட்ல இருந்துதான், ரிலீஸ் தேதி எப்போனு சொல்லணும்'' என்றவரிடம் சில கேள்விகள். 

" 'நாடக மேடை' படத்தில் பாடல்களை எதிர்பார்க்கலாமா?"

"முந்தைய ரெண்டு படத்திலும் பாடல்கள் எதுவும் கிடையாது. 'நாடக மேடை' கதையையும் அப்படித்தான் ரெடி பண்ணியிருக்கேன். பாட்டே இல்லாமலும் நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்கமுடியும்." 

"இளைஞர்களை மையப்படுத்திய கதைனு சொல்றீங்க. உங்களுக்கு நடிக்கிற ஐடியா இருக்கா?"

"இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை. கதை, திரைக்கதை எழுதுறதுல மட்டும்தான் கவனம் செலுத்துறேன்."

" 'நரகாசூரன்' படத்தைப் பார்த்துட்டு கெளதம் மேனன் ரியாக்‌ஷன் என்ன?" 

"படத்தின் கதையைச் சொன்னப்பவே, கெளதம் மேனன் சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. படம் ரெடியானவுடன் பார்க்க ஆர்வமா இருந்தார். படத்தோட எடிட்டிங் போயிட்டு இருந்தப்போதான், சாருக்குப் போட்டுக் காட்டினேன். 'ரொம்ப நல்லாயிருக்குடா'னு பாராட்டினார்."

கார்த்திக் நரேன்

"கெளதம் மேனனுக்கு நடிப்புல ஆர்வம் இருக்கு. உங்க படத்துல அவரை நடிகரா பார்க்கலாமா?" 

" 'நாடக மேடை' படத்துல கெளதம் சார் நடிக்கலை. ஆனா, அவரை வெச்சு படம் டைரக்‌ஷன் பண்ணனும்னு எனக்கு ஆசை இருக்கு. அது அவருக்கும் தெரியும். என்னோட பல கதைகளை விவாதிக்கும்போது, அடிக்கடி அவர்கிட்ட சொல்வேன். இன்னும் அவருக்காக ஒரு கதை உருவாக்கலை, அதைப் பண்ணிட்டா, கண்டிப்பா அவர் நடிப்பார். எதிர்காலத்துல என் இயக்கத்துல கெளதம் சார் கண்டிப்பா நடிப்பார்னு நம்பிக்கை இருக்கு."  

" 'நாடக மேடை'  என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம்?"

"நான் எப்பவுமே படத்தோட கதைக்குத் தகுந்தமாதிரிதான் பெயர் வைப்பேன். காலேஜ் முடிச்சவுடன் பசங்க இந்தச் சமூகத்தை பத்தி நிறைய எதிர்ப்பார்ப்புகளோட இருப்பாங்க. ஆனா, நடக்குறது அவங்களுக்கு நேரெதிரா இருக்கும். அப்போ அவங்க மனசுக்குள்ளே, 'இந்த உலகம் எவ்வளவு பெரிய நாடக மேடைனு அவங்களுக்கு ஒரு ஃபீல் வரும். இதை மையப்படுத்திதான் படத்துக்கு 'நாடக மேடை'னு பெயர் வெச்சேன்.  

"ஸ்ரேயாவுக்கு என்ன ஸ்பெஷல்?"

'நரகாசூரன்' படத்துல மூணு ஹீரோக்கள் இருந்தாலும் எல்லாருக்கும் சமமான ரோல்தான். ஸ்ரேயா  மேடம்  இதுவரைக்கும் பண்ணாத கேரக்டரை, இந்தப் படத்துல பண்ணியிருக்காங்க. நிறைய படத்துல அவங்களை கிளாமர் கேரக்டர்ல பார்த்திருப்பீங்க, இந்தப் படத்தில அப்படி இல்லாம, ஒரு பவர்ஃபுல் கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.

எப்பவுமே எனக்கு பெரிய சப்போர்ட் கொடுக்கிறது, என் அப்பா. எப்போவும் ஆடியன்ஸ் பார்வையிலிருந்து அப்பா கமென்ட் பண்ணுவார். 'நரகாசூரன்' படத்தை அப்பா இன்னும் பார்க்கலை. பார்த்துட்டு அவர் என்ன சொல்வார்னு கேட்க வெயிட் பண்றேன்'' என்கிறார், கார்த்திக் நரேன்.

நரகாசூரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!