Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``நண்பனா சொல்றேன் விஷால்... நாம கமலுக்கு ஆதரவு கொடுப்போம்!" - ஆர்.கே.சுரேஷ்

கமல் அரசியலுக்கு வரப்போகிறார் என்று தெரிந்தவுடன் அவரது கொள்கைகள், கட்சி பெயர் மற்றும் உறுப்பினர்கள் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாகயிருந்தனர். 21-ம் தேதி கமல் தனது அரசியல் குறித்த சுற்றுப் பயணம் மற்றும் கட்சியின் கொடி மற்றும் பெயரை மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார். 

கமலின் இந்த அரசியல் பயணத்தில் அவருடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வலம் வந்தார். கமலின் அரசியல் கட்சியில் இவர் இணைந்துவிட்டாரா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்.கே.சுரேஷிடம் பேசினேன். 

கமல்

'கமலை சின்ன வயசுலே இருந்தே பிடிக்கும். நடிகராய் அவரது படங்கள் என்னை ரொம்ப கவர்ந்திருக்கு. ஒரு சின்ன சமூக அக்கறை அவரது படத்துல எதிர்பார்க்கலாம். ஆறு வருச காலமாவே சமூகம் சார்ந்த விசயங்களில்  நான் என்னை ஈடுப்படுத்திக்கிட்டு வர்றேன்.  ஜல்லிக்கட்டு, நெடுவாசல் பிரச்னையில் மக்களுடன் நானும் சேர்ந்து போராடினேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர்களிலிருந்து ஒருத்தர் சமுதாயத்துக்கு நல்லது பண்ணணும்னு வரும்போது அவருக்கு ஒத்துழைக்கிறதுல தப்பில்லை'' என்று பேச ஆரம்பிக்கிறார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்

கமலின் அரசியல் கட்சியில் உங்களை எதிர்பார்க்கலாமா?

கண்டிப்பா எதிர்பார்க்கலாம். அவருடைய கொள்கைகள் எனக்குப் பிடிச்சிருக்கு. அவருடைய அரசியல் பயணத்தில் அன்று அவருடன் நானும் இருந்தேன். என் சொந்த ஊர் தென் மாவட்ட இராமநாதபுரம். என் அப்பா சுயேட்சை வேட்பாளரா இராமநாதபுரத்தில் நின்னு ஒரு லட்சம் ஓட்டுக்கு மேலே வாங்கினார். அதனாலேயே, அந்த ஊரில் எங்களுக்கு ஆதரவா நிறைய மக்கள் இருக்காங்க. எங்க குடும்பம் ராஜகுடும்பமும்கூட. எங்கள் ஊரின் மண்ணிலிருந்து கமல் அவரது அரசியல் பயணத்தை ஆரம்பித்தபோது அதில் இருக்கணும்னு நினைச்சேன். மனசுல எதையும் வெச்சிக்காம பேசக் கூடியவர் கமல் சார். ஒரு கொள்கை உடையவர். அவருடைய அரசியல் கட்சியில் என்னை எதிர்பார்க்கலாம். நான் எது பண்ணாலும் யோசிச்சுதான் பண்ணுவேன். இதுவரைக்கும் எந்த அரசியல் கட்சியிலும் நான் உறுப்பினரா இல்லை. 

திராவிடக் கட்சிகளுக்கு இடையே கமல் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பாரா?

தி.மு.க-வுக்கு ஓட்டு வங்கிகள் அதிகமா இருக்கு. ஏன்னா, அவங்க இன்னைக்கு, நேத்து கட்சியில்ல. கடந்த ஐம்பது வருஷமா இருக்கிற பாரம்பர்யக் கட்சி. அ.தி.மு.க. அதிலிருந்து பிளவுபட்டு வந்த கட்சி. சுதந்திரம் வாங்கின காலத்திலிருந்து காங்கிரஸ் பயங்கரமான ஸ்ட்ராங். இப்போ, அவங்க வலிமை குறைஞ்சிருக்கு. அதே மாதிரி பி.ஜே.பி-யும் அப்போதிலிருந்தே இருக்காங்க. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஓட்டு பிரிஞ்சிருச்சு. ஆனா, தி.மு.க. ஓட்டு வங்கி அப்படியேதான் இருக்கு. 

கமல்

மாற்று அரசியல் வேணும்னு நினைக்கிற இளைஞர்களின் ஓட்டுகள் கண்டிப்பா கமலுக்குக் கிடைக்கும். நோட்டாவுக்கு ஓட்டு போட்டுக் கொண்டிருந்தவர்கள்லாம் இனி கமலுக்கு ஓட்டு போட ஆரம்பிச்சுருவாங்க. ஓட்டு போட மாட்டேன்னு இருந்தவர்களும் கமலுக்குப் போடுவாங்க. இனி நூறு சதவிகிதம் ஓட்டு பதிவு நடக்கும். ஏன்னா, இந்த முறை மக்கள் சிந்தித்துதான் ஓட்டு போடுவாங்க.  ஒன்றரை வருசமா தமிழ்நாட்டில் என்ன நடந்துக்கிட்டு இருக்குனு மக்கள் பார்க்குறாங்க. கமல், ரஜினி சார் ரெண்டு பேருமே ஏதோ ஒரு நல்லது மக்களுக்குப் பண்ணணும்னுதான் அரசியலுக்கு வராங்க. குறிப்பா கமல் சார் தென் தமிழகத்தில் பிறந்தவர். மக்களுடைய உணர்ச்சி அவருக்குப் புரியும். என்ன அவங்களுக்குத் தேவைனும் அவருக்குத் தெரியும். இது பற்றிய பெரிய சர்வே கமல் செய்திருக்கிறார். களத்தில் நேரா மக்களைப் பார்க்கும்போது அவருக்கு மக்களின் பிரச்னைகள் இன்னும் நல்லாவே புரிஞ்சிருக்கு. அதனால, அவர் நல்லதையே செய்வார். கண்டிப்பா வெற்றி அடைவார்.

விஷாலின் அரசியல் தொடக்கம் பற்றி?

விஷால் அரசியலில் போட்டியிடுகிறேன்னு சொன்னா, வேண்டாம்னு சொல்லிருவேன். ஏன்னா, அவர் அரசியலுக்கு ஆதரவு கொடுத்து வரலாம்.  தலைமை தாங்கி வர வேண்டாம். விஷால் நல்ல மனிதர். அதைப் பண்ணனும், இதைப் பண்ணணும்னு  யோசிப்பார். ஆனா, அரசியலில் அவர் கால் எடுத்து வைக்கும்போது அவருக்குப் பிரச்னை வந்தது.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டபோது வந்த பிரச்னை எல்லாருக்கும் தெரியும். அப்போது விஷால் அதற்காகப் போராட்டம் செஞ்சிருக்கணும். அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கணும்.  அப்படிச் செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து. 

ஒரு நல்ல நண்பனாதான் விஷாலுக்குச் சொல்றேன். இப்போதைக்கு வேண்டாம். இன்னும் ஐந்து வருசம் ஆகட்டும். ஏன்னா, இப்போ ரெண்டு சீனியர்ஸ் வந்துருக்காங்க. நம்ம கமல் சாருக்கு ஆதரவு தெரிவிப்போம். 

இடைத்தேர்தலுக்காக விஷால் நாமினேஷன் பண்ணும்போது அவருடன் இருந்தற்குக் காரணம்?

ஒரு அண்ணன் நாமினேஷன் பண்ணும்போது, நீங்க  கூட போக மாட்டீர்களானு சிலர் கேட்டாங்க. அந்த வகையில்தான் போனேன். அரசியல் கட்சி விஷால் ஆரம்பிக்கிறார் அப்படினா அவருடன் நான் போவதும், போகாததும் என் தனிப்பட்ட விருப்பம். ஆனா, என்னைக் கேட்டால், விஷால் அரசியல் கட்சித் தொடங்க வேண்டாம்னுதான் சொல்லுவேன். விஷால் தமிழர் இல்லை அதனால்தான் இப்படி சொல்றேன்னு இல்லை. எல்லாரும் நம்ம சகோதர்கள்தான். ஆனா, எனக்குத் தமிழன் என்கிற உணர்வு  அதிகம். 

ரஜினி அரசியல் பற்றி?

ரஜினி சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைக் கடவுளா சினிமாவில் பார்க்கிறேன். அவருடைய அரசியல் கொள்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. அதனால என் ஆதரவு கமல் சாருக்குதான். ஏன்னா, அவர் சொந்த மண் சார்ந்தவர்ங்கிற உணர்வு.  சாதி அடிப்படையில்கூட கமல் படங்களில் முன் நின்றவர் இல்லை. 'தேவர் மகன்', 'விருமாண்டி' படமெல்லாம் கமல் பண்ணிருந்தாலும் அதே நேரத்தில் எவ்வளவு படங்கள்ல சாதி இல்லைனு கமல் செய்திருக்கிறார். தூக்கு தண்டனைக்கு எதிரா கமல்  படங்களின் மூலம் பேசியிருக்கிறார். பேச்சுக்கு சொல்லலாம், சினிமா கமர்ஷியலுக்காகத்தான் எடுக்குறாங்கனு. அப்படியிருந்தால்,  அவர் படங்களில் சமுதாயக் கருத்தை முன்னிருத்தி கமல் பேசியிருக்க வேண்டாமே. நாலு ஃபைட், பாட்டுனு போயிருக்கலாமே. 

கமலின்

கமல் உங்களை அவரது கட்சியின் பிரதிநிதியா தேர்தலில் நிற்கச் சொன்ன நிற்பீர்களா?

கமல் சாரின் அரசியல் பயணத்தில் அவருடன் நிற்பேன். ஆனா, தேர்தலில் நிற்கச் சொன்ன நிற்க மாட்டேன். ஏன்னா, அதுக்குனு என் அண்ணன், அக்கா இருக்காங்க. அவர்களை நிற்க வைச்சுட்டு ஆதரவு தெரிவிப்பேன். சினிமாவில் நான் என்ட்ரி ஆனதே லேட்தான். இப்போதான் ஹீரோவா ஆறு படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நிறைய வருஷங்கள் சினிமாவில் இருக்க ஆசைப்படுறேன். சினிமாவில் செய்ய வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கு. இந்தச் சூழ்நிலையில் என்னை அரசியலில் இணைத்து என்னை நானே குழப்பிக்கொள்ள விரும்பல. ஒருவேளை நான் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆனா அந்தத் தொகுதி மக்களுடன் தினமும் நான் களத்தில் நின்னு பேசணும், போராடணும். வெறுமேன ஜெயிச்சுட்டு சென்னையிலிருந்து எப்போதாவது தொகுதிப் பக்கம் தலையை மட்டும் காட்டக் கூடாது. அது மக்களுக்குக் கொடுக்கிற மரியாதை இல்லை. சட்டசபை போயிட்டு வர்ற நேரம் தவிர மற்ற நேரத்தில் தொகுதி மக்களின் நல்லது, கெட்டதில் இருக்கணும். நான் எம்.எல்.ஏ ஆனா இப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதனால இப்போ என்னால் இதைச் செய்ய முடியாது. 

கமல் சார் மூணு படங்களுக்கு அப்புறம் நான் நடிக்க மாட்டேன். முழு நேரா அரசியல்வாதியா இருப்பேன்னு சொன்னார். அது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அப்படித்தான் ஒருவர் இருக்கணும். அங்கேயும், இங்கேயும் ஒரு காலுன்னு இல்லாமல் முழுமையா அரசியலில் இருக்கணும். அதுவும் எங்க இராமநாதபுர ஏரியா வானம் பார்த்த வறண்ட மண். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடியவர் யாராகயிருந்தாலும் மக்களுடன் ஒருவரா இருக்கணும். தொகுதி மக்களுக்கு வேலைகள் செய்யணும். கமல் சாருக்காக பிரசாரத்தில், சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவேன். எனக்கு அரசியல் தாண்டி, சமூக ஈடுபாடுகள் அதிகம்  உண்டு. 

கமலின் திட்டங்கள் பற்றி?

ஊழல் அற்ற அரசைக் கொண்டுவருவதுதான் அவரின் முதல் கடமை. அவர் திட்டத்துடன்தான் செய்வார். புத்திசாலியும்கூட. என் அப்பா ஜெயலலிதா மேடத்துக்கு நல்ல நண்பர், நலம் விரும்பி. அதனால, அவங்களை, அப்பா பார்க்கும்போது நானும் பார்த்திருக்கிறேன். ஜெயலலிதா மேடத்துக்கு இருக்கிற சிஸ்டம் அறிவு இவரிடம் இருக்கு. அறிவாளி அவர், காவிரித் தண்ணீர் கொடுக்க மாட்டாங்கனு சொன்னா,  அதுக்கு என்ன பண்ணணும், முடிவு எடுக்கணும்னு கமலுக்குத் தெரியும். 

கலாமுடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாதற்குக் கமல் சொன்ன பதில் பற்றி?

கமலை அப்போது பேசவே விடலை. அதை ட்விஸ்ட் பண்ணிப் பேசிட்டாங்க. அவர் முழுமையா பேசியிருந்தால்  காரணத்தைச் சொல்லியிருப்பார். தெளிவான பதில் சொல்லக்கூடியவர் கமல். அவரைப் பேச விடல. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்