Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’என்னால செய்ய முடியாததை நீங்க செஞ்சுட்டீங்க அமீர்..!’’ - ’பருத்திவீரனை’ சிலாகித்த கமல் #11YearsOfParuthiveeran

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் அறிமுகத்திற்குப் பிறகே யதார்த்தவாதம் என்கிற  ஒரு கோட்பாடு மெல்ல பரவ ஆரம்பித்தது. நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு அரங்கிலிருந்து வெளியே வர வைத்தார் பாரதிராஜா. மேலும், அவர்களைக் களத்தில் நிற்க வைத்து, உண்மையான கிராமத்து மனிதர்களின் சாயலையும், பேச்சு வழக்கையும் திரையில் கொண்டுவர மிகவும் மெனக்கெட்டார். அப்படி, கேமராவை கிராமம் நோக்கிக் கொண்டுபோன வகையில்,’16வயதினிலே’ மிகப்பெரிய டிரெண்ட் செட்டராகப் பார்க்கப்படுகிறது. அவர் வந்த முப்பது வருடங்கள் கழித்து, அதேபோல, அதுவரை கிராமத்து சினிமாக்களின் மீதிருந்த அத்தனை பொதுப்புத்தியையும் வழக்கமான ஃபார்முலாக்களையும் உடைத்து தமிழில்  ஓர்  உலக சினிமாவாக வெளிவந்தது அமீருடைய  ‘பருத்திவீரன்’. இந்த படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆனபின்னும் இன்றும்  பேசுபொருளாய் இருப்பதற்கான காரணங்களை இனி காணலாம். 

பருத்திவீரன்

திருவிழாவும் தெம்மாங்குமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே புறப்படுகிறது மண்ணின் புழுதிவாசம். ஊர்த் திருவிழாவில் தாரைத்தப்பட்டை முழங்க, ஆட்டம், பாட்டம் என பட்டையைக் கிளப்ப, நம்மைக் கொண்டுபோய் அமர்க்களமாய் பருத்தியூர் மண்ணில் இறக்கிவிட்டுக் கதையைச்  சொல்ல ஆரம்பித்தார் அமீர். 

‘பருத்திவீரன்’, சாதாரணமாக நம் ஊரில் சுற்றித்திரியும் ஒரு சண்டியரின் கதைதான். ஆனால்,இந்தப் படம் அதையெல்லாம் தாண்டி மனதுக்கு நெருக்கமானதற்குக் காரணம்  பாத்திரத்தேர்வும், மண்வாசனைப் பேச்சும்தான். மேலும், சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொன்ன விதத்தில் அது ஒரு மாயாஜாலமாகப் பார்க்கப்பட்டது. இசையிலும் ஒளிப்பதிவிலும்  நிறைய மாற்றங்கள் எனத் தமிழ் சினிமா புது திசையில்  தன் பயணத்தை பருத்திவீரனில் இருந்து தொடங்கியது. 

முதல் படத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங்,  முந்நூறு நாள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் மற்றும் ரசிகர் மன்றம் எனத்  தமிழில் கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. "ஏன் சார்? நீங்கதான் சாமி கும்படணுமா.. நாங்கள்லாம் கும்புடக் கூடாதா! எங்களை என்னை ஒதுக்கியா வெச்சிருக்காங்க" என்னும் அறிமுகமும் அதன்பின் குஸ்தி வாத்தியாரைக் குத்துவதும் என ஆரம்பமே அதகளம். மதுரை பாஷை, சண்டியர்த்தனம், வாய்ச்சவடால்னு வெயிலிலும், புழுதி மண்ணிலும் மற்றும் முள்ளுக்காடுகளிலும் பருத்திவீரனாகவே சுற்றித் திரிந்தார் கார்த்தி. 

பருத்திவீரன்

'அது ஒரு கனாக்காலம்' படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் யாராலும் கவனிக்கப்படாமலே இருந்தார் பிரியாமணி. கிராமம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும் நிஜ சிட்டி பெண்ணான பிரியாமணி, ‘பருத்திவீரனில்' முத்தழகாக மாறியதை அவதாரம் என்றுகூடச் சொல்லலாம். அப்பாவிடம் மிதி வாங்கிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் சமயத்தில், "ஏய்.. கிழவி.. இங்க என்ன எழவா விழுந்துருக்கு. இப்படி அழுதுட்டு இருக்க. வா! வந்து கறியை எடுத்து வை" என அதட்டிவிட்டு, "உன் மவன் அடிக்கிறதையும் மிதிக்கிறதையும் தாங்க உடம்புல தெம்பு வேணாம்!?" எனப் பாட்டியிடம் கூறிவிட்டு சோற்றை அள்ளிச் சாப்பிடும் அந்த ஒற்றைக் காட்சியில் ஏகபட்ட உணர்ச்சிகளை ஜஸ்ட் லைக் தட்டில் செய்திருப்பார் பிரியாமணி.  எண்ணெய்த் தலை, ரெட்டை ஜடை,  பூப்போட்ட பாவாடை தாவணி, ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், பாடி லாங்வேஜ், பேச்சு என சகலமும் அடியோடு மாறி குரலிலிருந்து உடல்மொழி வரை பெண்மையின் சாயலே தெரியாமல் கம்பீரமாக  கிராமத்து முத்தழகுவைக் கண்முன் நிறுத்தினர் பிரியாமணி. 

பருத்திவீரனுக்கு முன்பு இருபது படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நடிகராகவே இருந்த சரவணன், கார்த்தியின் சித்தப்பூவாக செய்ததெல்லாம் அதகளம்.மேலும், கழுவச் சேர்வை பொன்வண்ணன், சுஜாதா, 'டக்ளஸ் 'கஞ்சா கருப்பு,' பொணந்தின்னி'  செவ்வாழைராஜ், 'குட்டிச்சாக்கு 'விமல்ராஜ் என அத்தனை பேரும் படத்தோடு படு இயல்பாகப் பொருந்திப்போனார்கள். 

பருத்திவீரனின் இரு பெரும் பலங்கள் ஒளிப்பதிவும் இசையும்.சின்னச் சின்ன ஷாட்களில்கூட  ராம்ஜி  இயல்பு மீறாத நுணுக்கமான ஒளிப்பதிவை தனது உழைப்பின் மூலம் கொட்டிக் கொடுத்தார்.  

பருத்திவீரன்

'பருத்திவீரன்' திரைப்படத்திற்கு இசையமைக்கும் சமயத்தில் யுவனின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு தினமும்  லாரியில் நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அழைத்து வரப்படுவார்கள். அந்தக் கலைஞர்கள் பாடும் முறை, அந்தப் பாடல்களின் தாளமுறை என அத்தனையையும் உன்னிப்பாகக் கவனிப்பார் யுவன். பின் தான் இசையமைத்து வைத்திருந்த பாடல்களுக்குத் தேவையான குரலையும், வாத்தியக் கோர்ப்புகளையும் அவர்களையே வாசிக்கக் கேட்டு அதிலிருந்துதான் 'பருத்திவீரன்' பாடல்களை உருவாக்கினார். 

 `டங்காடுங்கா தவுட்டுக்காரி' பாட்டுல ஆரம்பிக்குற படம்,  முழுக்க முழுக்க ஒரு மியூசிகல் ட்ரீட்டாகப் பார்வையாளனை லயிக்கச் செய்தது.படத்தின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி; அந்த மண் சார்ந்த இசையாகவே அள்ளித் தந்தார் யுவன். நாட்டுப்புறக் கலைக்கும், பாடல்களுக்கும்  'ஊரோரம் புளியமரம்' மற்றும் 'டங்காடுங்கா' பாடல்களின் மூலம் புத்துயிர் தந்தார் யுவன்.

அமீரின் பெஸ்ட் `பருத்திவீரன்' தான். தமிழில் இயல்பான சினிமா எடுக்கும்  இயக்குநர்கள் பட்டியலில் தனது மூன்றாவது திரைப்படத்திலேயே பளிச்சென இடம் பிடித்தார் அமீர்.  புழுதியும் வேர்வையுமாக, தான் பார்த்த கிராமத்தை, அந்த மக்களுடைய கோபத்தை, பாசத்தை, காதலை, உறவுகளைக்  காட்டுகின்ற முயற்சியில் கலப்படம் இல்லாமல் இருநூறு சதவிகிதம் இரத்தமும் சதையுமாக பதிவு செய்தார் அமீர். 

பருத்திவீரன்

 'பருத்திவீரன்' படம் எடுக்கும்போதே "இது உன்னுடைய பாடி லாங்குவேஜ். நீ பார்த்து, கேட்டு ரசித்த விஷயம். நீயே நடி’’ன்னு நிறைய பேர் அமீரை வற்புறுத்தினார்களாம். அமீர்தான் நடிக்க மறுத்து, பருத்திவீரன் கதாபாத்திரத்தைக் கார்த்தியிடம்  இறக்கி வைத்தார். 'பருத்திவீரன்’ படத்திற்குத் தேவையான அனைத்துக் கதாபாத்திரங்களையும்  மிக நேர்த்தியாகவும்  நம்பகத்தன்மையுடனும்  படைத்து இருப்பார் அமீர். மேலும், படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் கிராமத்து நையாண்டி நக்கலுடன் எழுதப்பட்டு இருக்கும். படம் முழுக்கவே ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாகவும் குறியீடாகவும் பதிவு செய்து இருப்பார் அமீர். 

பருத்திவீரன்

படத்தின் முடிவு, பார்த்த அனைவரின் இதயத்தையும் கனக்க வைத்தது.’பருத்திவீரன்’ படம் வந்த சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, படத்தை பார்த்துவிட்டு,  படம் தந்த தாக்கத்தில் மூன்று நாள்கள் தூக்கத்தைத் தொலைத்தார். சில நாள்களில், படக்குழுவினரை அழைத்து, "அந்த க்ளைமாக்ஸ் காட்சி பார்த்ததுல இருந்து என்னால ஒண்ணும் பண்ண முடியலைப்பா" எனப் பாராட்டி மகிழ்ந்தார். கமலின் மிகப்பெரிய ரசிகர் அமீர். ‘தசாவதாரம்’ படப்பிடிப்பில் கமலைச் சந்தித்த அமீரிடம், "விருமாண்டியில் என்னால் செய்ய முடியாததையெல்லாம் நீங்க பருத்திவீரனில் செய்துட்டீங்க" என கமல் கூறினார். அதன்பிறகு ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி, "எப்படி... எப்படி கார்த்தியை அப்படிக் கொண்டுவந்தீங்க... சொல்லுங்க, சொல்லுங்க. மூணு தடவை... மூணு தடவை பருத்திவீரனைப் பார்த்துட்டேன்" என அமீரிடம் குழந்தைபோல படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம் ரஜினி. இவ்வாறு கலைஞர்,ரஜினி, கமல், பாரதிராஜா என அன்றைய அனைத்து ஆளுமைகளும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அமீரையும் பருத்திவீரனையும் தூக்கி வைத்துக் கொண்டாடியது. 
       
தமிழ் சினிமாவில் பருத்திவீரனுக்கு எப்போதுமே தனி இடம்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்