Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிகாவின் மெளன ’மொழி’’... பிருத்விராஜின் அழுகை... பிரகாஷ்ராஜின் ஒன்லைன்..! #11YearsofMozhi

சில திரைப்படங்கள் ரம்மியமான இரயில் பயணத்தின் உணர்வினைத் தரும், சில திரைப்படங்கள் அழகான கவிதையினை நினைவூட்டும், சில திரைப்படங்கள் இசையின் அழகியலை உணர்த்தும். அப்படி ஒரு திரைப்படம் வெளியாகி இன்றோடு பதினோரு ஆண்டுகள் நிறைவடைகிறது. அத்திரைப்படம்தான் இயக்குநர் ராதாமோகனின் ’மொழி’. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள், ஆர்ட் சினிமா ரசிகர்கள் என பேதகங்களின்றி அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட திரைப்படம் ’மொழி’. திரைப்படம் வெளியான இந்த நாளில் ’மொழி’யிடம் நாம் ரசித்தவற்றைப் பார்ப்போம்.

மொழி, ஜோதிகா

’மொழி’யைப் பற்றி பேசத் தொடங்கினாலே நம்மையும் அறியாமல் நம் மனம் முதலில் ஜோதிகாவிடம்தான் செல்லும். படம் முழுவதும் ஜோதிகா பேசியது மௌன மொழிதான் என்றாலும் தன் கண் அசைவுகளால் படம் பார்த்தவர்களுக்குக் கடத்திய உணர்வுகளை நம்மால் எந்த மொழியிலும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. நன்கு கவனித்துப் பார்த்தால், ஜோதிகா படம் முழுவதிலும் தன்னிடம் பேசுபவர்களிடம் அவர்களின் உதடு அசைவுகளைக் கூர்ந்து கவனிக்கும்போது முகத்தில் காட்டும் முகபாவனை அந்தந்த காட்சிகளின் படி வேறுபடுத்திக் காட்டியிருப்பதை நம்மால் உணர முடியும். உதாரணமாக நகைச்சுவைக் காட்சிகளின் உரையாடலிலும் சரி படத்தின் இறுதி காட்சியில் பிருத்விராஜ், ஜோதிகாவிடம், “வாழணும்னு ஆசை உன் கண்ணுல தெரியுது, அத ஏன் மறைக்கிற, வாழ்ந்துதான் பாரேன் நிச்சயம் தோற்க மாட்ட” என்று சொல்லும்போது ஜோதிகா முகத்தில் காட்டும் முகபாவனைகள் ஜோதிகாவால் மட்டுமே முடியும்.

கதாநாயகியை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களில் சிலவற்றிலேயே கதாநாயகர்களின் நடிப்பு பேசப்பட்டுள்ளது. அதில் ’மொழி’யில் பிருத்விராஜின் நடிப்பும் ஒன்று. முதல் பாதி முழுக்க நகைச்சுவை ததும்ப தோன்றிவிட்டு பிற்பாதியில் ஜோதிகா தன் காதலை மறுத்த நிமிடத்திலிருந்து முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடத் தன் நடிப்பினை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. “எம்.ஜி.ஆர். செத்துட்டாரு, இந்திரா காந்தி செத்துட்டாங்க, உன் பையனும் செத்துட்டான், உலகம் 1984-ஐ தாண்டி ரொம்ப வருஷம் ஆச்சி வேணும்னா என்னை உன் மகனா நினைச்சுக்கோ” என எம்.எஸ்.பாஸ்கரிடம் பிருத்விராஜ் உடைந்து அழும் காட்சி ஒன்றே போதுமானது.

மொழி

மேலும் படத்தின் மிகப்பெரிய பலம் திரையில் தோன்றிய அனைத்து நட்சத்திரங்களையும் சரியான வகையில் கையாளப்பட்ட விதம்தான். படத்தின் கதாநாயகி ஜோதிகா என்றாலும் படம் முழுவதும் கதாநாயகன் பிருத்விராஜுடன் பயணித்தது பிரகாஷ் ராஜ்தான். ராதாமோகன் திரைப்படத்தில் நகைச்சுவைக்குப் பற்றாக்குறையே இருக்காது. பிறர் மனதை வருத்தாத வகையில் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது கூறிய ஒன் லைன்கள் ரசனைக்குரியன. “நீ பேச்சுலர்னு சொன்னா வீடுதான் தர மாட்டாங்க, நான் பேச்சுலர்னு சொன்னா பொண்ணே தர மாட்டாங்க”, “கார்த்திக்... வாழ்க்கையில சில விஷயங்களை வெள்ளைப் பூண்டால்கூட காப்பாத்த முடியாது”, எனக் காட்சிக்கு ஏற்றார்போல் அமைந்த நகைச்சுவை வசனங்கள் அனைத்தும் சிறப்பு. நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை ’மொழி’ திரைப்படத்தில் பயன்படுத்தியதைப் போன்று வேறு எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை.  எம்.எஸ்.பாஸ்கரை ஆஸம் தலைவா என்றுதான் சொல்ல வேண்டும். “இப்போகூட மணிரத்னம்னு புதுசா ஒரு பையன் சூப்பரா டைரக்‌ஷன் பண்றான்” என சிரிக்காமல் சொல்வதிலும், “பாபு எனக்கு ஒரு செருப்பு வாங்கிக் குடுக்குறியா” எனச் சொல்லும் இடத்திலும் தன் நடிப்பின் வெவ்வேறு பரிணாமத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

மொழி, ஜோதிகா

இப்போது கூட மியூசிக் சேனல்களில் “காற்றின் மொழி” பாடல் ஒலிபரப்பானால் நம்மால் பாடல் முழுவதையும் கேட்காமல் இடத்தை விட்டு அகல நமக்கு மனம் வராது. அப்படியொரு இசையால் அனைவரையும் வசீகரித்திருப்பார் வித்யாசாகர். அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் மௌனத்தை இசையாக வைத்த இடத்திலும் நம்மால் ஒரு மெல்லிய இசையைக் கேட்க முடிந்தது.

திரைப்படத்தின் தொடக்கத்தில் பிரகாஷ் ராஜ், பிருத்விராஜிடம், “பாவம்டா, பண்ணையாரோட பொண்ணுங்க ஒவ்வொரு படத்துலயும் பிச்சைக்காரனைத் தேடித்தேடி போய் லவ் பண்றாங்க” என்று சினிமாவின் க்ளிஷேவான விஷயங்களை கேலி செய்யும்படியான வசனம் இடம் பெற்றிருக்கும்.  அப்படிப்பட்ட க்ளிஷேவான விஷயங்களை உடைத்தெறிந்து ராதாமோகன் நமக்கு நிகழ்த்திக் காட்டிய அதிசயமே இந்த ’மொழி’!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்