Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''மார்ச் 1 முதல் புதுப்படங்கள் இல்லை! - டிஜிட்டல் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன... தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

திரையிடலுக்கான டிஜிட்டல் தொழிநுட்ப சேவை வழங்குநர்கள் கியூப், யூ.எஃப்.ஓ  வசூலிக்கும் அதிகப்படியான தொகையைக் கண்டித்து  மார்ச் 1 முதல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எந்தப் புது திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாது என நான்கு மொழிப் படங்களின் தயாரிப்பாளர் சங்கங்கள் கூட்டாக நேற்று முடிவு செய்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்களின் கூட்டு நடவடிக்கை குழுவிற்கும் தொழிநுட்ப வழங்குநரான கியூப் நிறுவனத்துக்கும் நடந்த மூன்று பேச்சுவார்த்தைகளும் சுமூகமான முடிவை எட்டாததால், நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தப் பிரச்னைக்கான இறுதிப் பேச்சுவார்த்தை என்பதால், தயாரிப்பாளர்களுக்கு சாதகமான முடிவுகள் எட்டவில்லை. எனவே, ஏற்கெனவே முடிவெடுத்திருந்தபடி மார்ச் 1-ஆம் தேதிமுதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். 

கியூப்

தமிழகத்தில் கிட்டத்தட்ட 1200 ஸ்கீரின்கள் இருக்கின்றன. அதில், மொத்தம் 746 ஸ்கிரீன்களைக் கையாண்டு வருகிறது கியூப் நிறுவனம். இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளர்களின் கோரிக்கை என்ன, கியூப் நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்பதை கியூப் நிறுவனத்தினரிடம் கேட்டறிந்தோம்.

அர்விந்த் - கியூப்கியூப் நிறுவத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்விந்த் ரங்கநாதன் பேசுகையில்,  "தயாரிப்பாளர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடிப்படை கோரிக்கை 'வி.பி.எஃப்' எனப்படும் விர்சுவல் ப்ரொஜெக்‌ஷன் கட்டணத்தை முற்றிலுமாக அகற்றுவது. ஒரு தயாரிப்பாளர், அவர் தயாரிக்கும் படத்தின் பட்ஜெட்டில் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இந்த டிஜிட்டல் சேவைக்கான தொகை வரும். இதை ஒரு பெரிய விஷயாமாக சித்திரிப்பது ஏன் என்று புரியவில்லை. மேலும் ஒரு ஸ்கீரீனுக்கு 22,500 ரூபாயில் இருந்து 27,500 வரை விர்சுவல் ப்ரொஜெக்‌ஷன் ஃபீஸ் கட்டுவதாகச் சொல்கின்றனர். குறிப்பிடப்படும் அத்தொகை எங்கள் ரேட் கார்டில் இருப்பதிலேயே அதிகபட்சத் தொகையாகும். படத்தின் ஒரு காட்சிக்கு 325 ரூபாய் முதல் ஒரு வாரத்திற்கு 9000 ரூபாய், வாழ்நாள் கணக்கிற்கான தொகையாக 22,500 ரூபாய் என வைத்திருக்கிறோம். இவையாவும் தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் 'இ-சினிமா' திரையிடல் தொழில்நுடபத்திற்கான கட்டணத்தொகை. இதன்மூலம் வரும் வருவாய் மற்றும் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டுதான், திரையரங்குகளுக்கு எங்கள் முதலீட்டில் ப்ரொஜெக்‌ஷன் கருவி, அதற்கான பராமரிப்பு மற்றும் தரமேற்றுதல் செலவீனங்களை மேற்கொண்டு வருகிறோம். ஒரு தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோதான் தனக்குத் தேவையான தியேட்டர்களில் எத்தனை ஷோ ஒட்டவேண்டும், அதை ஷோ கணக்கில், வார கணக்கில் அல்லது வாழ்நாள் கணக்கில் வேண்டுமா என்று முடிவு செய்வார். இந்தத் தொகையை எப்படிக் கணக்கிட்டாலும் ஒரு ஸ்கீரீனுக்கு இவர்கள் சொல்லும் 20,000 ரூபாய் என்ற தொகையைத் தொடாது. சின்னப் படங்களுக்கு இதைவிடக் குறைவாகவே செலவாகும். புதிய படங்களின் டிரெய்லர்களை சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அனுப்புவதற்குத்தான் 750 ரூபாய் கட்டணம். ஒரு கட்டணமே இல்லாமல் எப்படி ஒரு கருவியையும், தொழில்நுட்பத்தையும் இயக்குவது." என்றவர்,

"இ-சினிமா, 2K, 4K என தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருவதால் திரையரங்கங்கள் அதற்கான நவீன கருவிகளைப் பொருத்துதல் அவசியம். அந்தத் தொழில்நுட்பத்ததிற்கான முதலீட்டில் இத்தகைய சேவைகளை வழங்கும் எங்களால் முற்றிலுமாக இலவசமாகவும் தர இயலாது. தற்போது இருக்கும் கட்டண விகிதங்கள் எங்கள் நிறுவனத்தின் நலன் மற்றும் தயாரிப்பாளர்களின் நலன், அதிலும் குறிப்பாக சிறிய தயாரிப்பாளர்களின் நலனையும் மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. எட்டு நிமிடங்களுக்குமேல் விளம்பரங்கள் திரையிடக்கூடாது என்கிறார்கள், தயாரிப்பாளர்கள். விளம்பரங்கள் வருவதன் காரணமாகத்தான் எங்கள் நிறுவனத்தை நடத்த முடிகிறது. தவிர, வி.பி.எஃப் கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கவும், விளம்பரங்களே பிரதானக் காரணியாகவும் உள்ளது. காலம் காலமாக திரையரங்குகளில் திரையிடப்படும் விளம்பரத்தில் வரும் வருமானம் திரையரங்க உரிமையாளர்களுக்கே செல்லும். இன்றைய காலகட்டத்தில் தியேட்டர்களில் ஓடும் திரைப்படங்களுக்கான ஆயுள் குறைந்துவிட்டது. அந்நிலையில், திரையரங்குகள் பிழைக்க இதுபோன்ற பல வருமான வழிகளை எதிர்பார்த்து இருக்கின்றன. ஒரு தொழிநுட்ப சேவை வழங்கும் நிறுவனம் அயல் நாடுகள்போல டிஜிட்டல் திரையிடல் சம்பந்தப்பட்ட மாஸ்டெரிங், கரெக்‌ஷன்... என அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்காமல், மூன்று முறை வரை இலவசமாக செய்து தருகிறோம். அதைப்பற்றி எந்தத் தயாரிப்பாளரும் பேசவில்லை" என்று தனது வாதத்தை முன்வைக்கிறார்.

ஜெயந்த்ராஇந்த விவகாரத்தின் மேலும் சில விஷயங்களை முன் வைத்த கியூப் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயேந்திரா பேசும்போது,

"நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தையின் முடிவை எதிர்பார்த்து இருந்தோம். எங்கள் நிறுவனத்தால் கட்டணத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துள்ளோம். இதன்பிறகும் கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்றால், நாங்கள் எங்கள் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் பிரச்னையில் சிறு தயாரிப்பாளர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. தியேட்டர்களால் இத்தகைய கருவிகளை தங்கள் செலவில் பொருத்திக்கொள்ள முடியும் என்றால், நாங்களும் அதற்கேற்ற மாதிரி சர்வீஸ் கட்டணங்களை மாற்றிக்கொள்கிறோம். டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன்மை நிறுவனமாக இருக்கும் கியூப், தமிழகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் எங்கள் பலவீனம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால்தான் ஒரு படம் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் படங்கள் கலந்து கொள்வதிலும், எங்கள் தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது. ஒரு படத்தின் ரிலீஸை சரியாக உறுதிசெய்ய எங்கள் நிறுவனத்தின் 600 நபர்கள் நேரடியாகக் களத்தில் வேலை செய்கிறார்கள். தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் இந்த ஸ்டிரைக்கினால் போஸ்டர் ஒட்டுபவர் முதல் பாப்கார்ன் விற்கும் சிறு வியாபாரி வரை... பலரும் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். எங்களது போட்டி நிறுவனங்களாலும் இவர்களது கோரிக்கைகளை எற்றுக்கொள்ளமுடியாது. இந்தப் பிரச்னைகளை முழுமையாய்ப் புரிந்துகொண்டு பேசினால்தான், சுமூகமான ஒரு முடிவு கிடைக்கும். அனைத்துவிதமான கட்டணங்களையும் நாங்கள் கணிசமான அளவு குறைக்கத் தயார். ஆனால், அவர்கள் எதற்கும் செவி சாய்ப்பதாய் இல்லை. 22,500 ரூபாய் என்ற தொகையிலிருந்து 14,000 ரூபாய் என்ற தொகை வரை வி.பி.எஃப் கட்டணத்தைக் குறைத்து கூறினோம். " என்றார்.எஸ்.ஆர்.பிரபு

தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர், எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது, 

"எங்களிடமிருந்து பெறப்பட்டு வந்த வி.பி.எஃப் கட்டணத்தை முற்றிலுமாக நீக்கக் கேட்டிருந்தோம். அல்லது குறைந்த பட்சமாக 25% கட்டணக் குறைப்பு செய்யச்சொல்லி கேட்டிருந்தோம். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் 8.5% குறைக்கிறேன் என்கிறார்கள். 22,500 ரூபாயிலிருந்து 14,000 ரூபாய் வரை குறைத்துள்ளோம் என்ற பெயரில் மற்ற கட்டணங்களைக் கூட்டியுள்ளார்கள். கியூப் - யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு நாங்கள் இனி படங்களைத் தரமாட்டோம். இதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றி விரைவில் பேசி முடிவெடுப்போம். மார்ச் 1-ஆம் தேதி முதல் புதுப்படங்கள் திரைக்கு வராது, இதில் உறுதியாக இருக்கிறோம்." எனத் தெரிவித்தார் 

திரையரங்க உரிமையாளர்கள் நிலைப்பாடு என்ன எனத் தெரிந்துகொள்ள, சென்னை ரோகிணி திரையரங்க நிர்வாகியான நிக்கிலேஷ் சூர்யாவிடம் பேசினோம். 

நிக்கிலேஷ் சூர்யா"ஒரு படத்தின் தயாரிப்பு செலவில் மிக சொர்ப்பமான தொகை, இந்த டிஜிட்டல் செலவு. இதற்காக படங்களை ரிலீஸ் செய்யாமல் இருப்பது பெரிய தவறு. சேட்டிலைட் சேனல்களும் படங்களின்போது விளம்பரம் போடுகிறார்கள்,  அதைத் தடுக்கமுடியுமா? விளம்பர வருவாயைக் கொண்டுதான் எங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தொழில்நுட்ப மேம்படுத்துதல்களையும் மேற்கொள்ள முடியும். விளம்பரங்களுக்கான நேர அளவைக் குறைக்கச் சொல்வதன் காரணம் புரியவில்லை. ப்ரொஜெக்‌ஷனுக்கான கருவி, பராமரித்தல் எனப் போட்ட முதலீட்டை எடுக்கவும், தொடர்ந்து டிஜிட்டல் சேவையைப் பெறவும் சில கட்டணங்களை வசூலிப்பதில் குற்றமில்லை. இப்போது அந்தக் கட்டணங்களையெல்லாம் திரையரங்க உரிமையாளர்தான் செலுத்தவேண்டும் என்றால், சிறு பட்ஜெட் படங்களை யாரும் திரையிடமாட்டார்கள். இந்தப் பிரச்னையை, திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்மை செய்வதுபோல பாவித்து வருகிறார்கள், தயாரிப்பாளர்கள். இவர்கள் எடுத்த ''மார்ச் 1-ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் என்ற முடிவு, ஒருவகையில் சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களையும், அந்தத் திரைப்படங்களையும்தான் பாதிக்கப்போகிறது. அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களால்தான், இந்த உயரத்தில் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் நம்மால் எதிர்த்துப் போட்டியிடமுடியாது. தொழில்நுட்பங்களோடு இணைந்துதான் வளரவேண்டும்." என்கிறார், நிக்கிலேஷ்.

இந்தப் பிரச்னையின் தீர்க்கமான முடிவு என்ன என்பது சில தினங்களில் தெரியவரும்.

 

       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement