''என்னோட ’மயில்ல்ல்ல்’ மாடுலேஷனுக்கு தீவிர ரசிகை ஸ்ரீதேவி..!’’ - ’16 வயதினிலே’ டாக்டர் சத்யஜித் | 16 vayathinile doctor character artist sathyajith shares his experience of working with sridevi

வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (27/02/2018)

கடைசி தொடர்பு:17:47 (27/02/2018)

''என்னோட ’மயில்ல்ல்ல்’ மாடுலேஷனுக்கு தீவிர ரசிகை ஸ்ரீதேவி..!’’ - ’16 வயதினிலே’ டாக்டர் சத்யஜித்

தனது உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்திற்காக மகள் குஷி கபூர் மற்றும் கணவர் போனீ கபூருடன் துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, மாரடைப்பு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கிப் போட்டியிருக்கும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு, அவரோடு பணியாற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். '16 வயதினிலே' படத்தில், ‘மயில்ல்ல்... மயில்ல்ல்ல்...’ என்று ஸ்ரீதேவியை செல்லமாக அழைக்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த சத்யஜித், ஸ்ரீதேவியுடனான தனது நினைவுகளைப் பகிர்கிறார். 

ஸ்ரீதேவி, சத்யஜித்

’’எனக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல கோல்டு மெடல் கிடைச்சப்போ என்னோட போட்டோ பேப்பர்ல வந்துச்சு. அதை அம்மன் கிரியேஷன்ஸ்ல பார்த்துட்டு போட்டோகிராபர் லெட்சுமிகாந்தனை அனுப்பி என்னை அழைச்சுட்டு வரச்சொல்லியிருக்காங்க. எனக்கும் லெட்சுமிகாந்தனுக்கும் ஆல்ரெடி பழக்கம். அவர் என்னோட ரூமுக்கு வந்து, ‘சீக்கிரம் கிளம்பு; ஒரு இடத்துக்குப் போகணும்’னு சொல்லி என்னை அழைச்சுட்டு ஆபீஸுக்குப் போனாங்க. அங்க எனக்கு ஆடிஷன் முடிஞ்சது; பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனோம். அங்கேதான் ஸ்ரீதேவியை முதல் முறையாகப் பார்த்தேன்...’’ சொல்லும்போதே கண்கலங்குகிறார் சத்யஜித்.

''அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே என்னை அறியாமல் அழுதுட்டேன். இப்போதும் என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியலை...’’ என்று தேம்பியவரைத் தேற்றியதும் மெள்ள பேச ஆரம்பித்தார். 

’’ஸ்ரீதேவி மாதிரி ஒரு நடிகை மட்டும் இல்ல, ஒரு மனுஷி இனிமேல் பிறக்கவே முடியாது. ஒரு வருடத்துக்கு முன்னாடிகூட ஸ்ரீதேவியை நான் பார்த்தபோது, அதே மயிலாகத்தான் பேசினார். எப்போதும் பழசை மறக்கவே மாட்டார். '16 வயதினிலே' ஷூட்டிங் ஸ்பாட்ல ஸ்ரீதேவியிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது உட்கார்ந்து இருந்தவங்க உடனே எழுந்திருச்சு, எனக்கு மரியாதை கொடுத்தாங்க. அந்த மரியாதையை எப்போதும் எனக்குக் கொடுக்கத் தவறியதேயில்லை. 

ஸ்ரீதேவி, சத்யஜித்

எனக்கும் ஸ்ரீதேவிக்கும் முதல் சீனே அந்த ஆற்றைக் கடக்குற சீன்தான். அப்போ எனக்கு தமிழ் சரியா தெரியாது; ஸ்ரீதேவிக்கும் அப்படித்தான். நான் இங்கிலீஷ், தமிழ்னு கலந்து கலந்துதான் பேசுவேன். அவங்களும் அப்படியே பேசுனதனால, நாங்க உடனே செட்டாகிட்டோம். எனக்கு தெலுங்கு நல்லா பேச வரும். ஸ்ரீதேவியோட அம்மாவும் நல்லா தெலுங்கு பேசுவாங்க. அதனால நாங்க ஃபேமிலி ஃப்ரெண்டாகவும் மாறிட்டோம். எப்போது வீட்டுக்குப் போனாலும் ஸ்ரீதேவி கேட்குற முதல் கேள்வி, ‘என்ன சாப்பிடுறீங்க'ன்னுதான். சாப்பிட ஏதாவது கொடுத்துட்டுத்தான், ‘எப்படி இருக்கீங்க’னு கேட்பாங்க. அந்தளவுக்கு உபசரிப்பாங்க. இப்போ அவங்க இல்லைன்னு நினைக்கும்போதுதான் கஷ்டமா இருக்கு. ஏதோ உடம்பு சரியில்லை; ரொம்ப நாளா ட்ரீட்மென்ட்ல இருந்தாங்கனு சொன்னாக்கூட ஏத்துக்கலாம். இறக்குறதுக்கு முந்தையநாள் வரைக்கும் நல்லா டான்ஸ் ஆடி ஜாலியா இருந்திருக்காங்க. அவங்களுக்கு இப்படி ஒரு இறப்பு வரணுமா... அவங்க இன்னும் ரொம்ப வருடம் வாழ வேண்டியவங்க.

'16 வயதினிலே' படத்துல நான்தான் டப்பிங் பேசுவேன்னு பிடிவாதமா இருந்தேன். பாரதிராஜா சாரும் வேற வழி இல்லாம, 'சரி நீயே பண்ணு’னு சொல்லிட்டார். அப்போதெல்லாம் ஒரு சீனுக்கு டப்பிங் பேசணும்னா, அந்த சீனில் நடிச்சிருக்கிற எல்லோரும் ஒரே ரூமில் இருந்து பேசுவோம். இப்போதுதான் தனித்தனியா டப்பிங் பேசுற வசதி வந்திருக்கு. அப்படி நானும், ஸ்ரீதேவியும் டப்பிங் பேசும்போது, ‘ஹேய் மயில்’னு என்னோட மாடுலேஷன்ல பேசுனேன். உடனே ஸ்ரீதேவி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரொம்ப நேரமா நிறுத்தாம சிரிச்சவங்க, எல்லோரையும் கூப்பிட்டு, ‘இவர் எப்படிப் பேசுறார்னு பாருங்க’ சொல்லி, என்னோட மயில் மாடுலேஷனை என்ஜாய் பண்ணாங்க. என் மனசுக்குள்ள இந்த மாதிரியான சம்பவங்களா நேற்றில் இருந்து ஓடிட்டு இருக்கு. ஸ்ரீதேவி இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், ஹாலிவுட் படங்களிலும் நடிச்சிருப்பார். ஸ்ரீதேவியோட மரணம் இந்திய சினிமாவுக்குப் பெரும் இழப்பு’’ என்று கனத்த இதயத்துடன் பேசி முடித்தார் நடிகர் சத்யஜித்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close