வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (01/03/2018)

கடைசி தொடர்பு:11:32 (01/03/2018)

"ஜோதிகாவின் குரல், சூர்யாவின் ஆர்வம், நடிகையின் தேடல், நயன்தாராவுக்கான கதை..." - இயக்குநர் ராதாமோகன்

" 'மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவுடன் ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். என்கூட இருந்தவர்களுக்கும் அந்த ஆசையிருந்தது. ஜோதிகா சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தவுடனேயே எல்லோரும் என்கிட்ட 'நீங்களும் ஜோதிகாவும் திரும்பவும் ஒரு படம் பண்ணலாமே'னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்போ சாத்தியம் ஆகிடுச்சு!" சந்தோஷமாகச் சிரிக்கிறார், இயக்குநர் ராதா மோகன். 

ராதாமோகன்

''ஜோதிகா 'மொழி' படத்துல சூப்பரா நடிச்சிருப்பாங்க. அவங்க நடிப்புத் திறமைக்கு தீனி போடுற மாதிரியான கதை ரெடியாகும்போது கண்டிப்பா ஜோதிகாவை வெச்சுப் படம் பண்ணணும்னு நினைச்சேன். இப்போ, விக்ரம்பிரபுவை வெச்சு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கேன். படத்தோட ஷூட்டிங் 90 சதவிகிதம் முடிஞ்சிருச்சு. அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தப்போதான் இந்தியில் 'துமாரி சுலு' படத்தைப் பார்த்தேன். வித்யாபாலன் கேரக்டரைத் தமிழில் ஜோதிகா பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. படம் பார்த்து முடிக்கிற வரைக்கும் மைண்டில் ஜோதிகாதான் இருந்தார்.  என் யோசனையை புரொடியூசர்கிட்டேயும் சொன்னேன். அவருக்கும் ஜோதிகா நடிச்சா நல்லாயிருக்கும்னு ஃபீல் ஆச்சு.  

உடனே, ஜோதிகாகிட்ட 'துமாரி சுலு' ரீமேக்ல நீங்க நடிக்கணும்னு கேட்டேன். அவங்க உடனே ஓகே சொல்லிட்டாங்க. ஜோதிகாவும் ஏற்கெனவே இந்தப் படத்தை இந்தியில் பார்த்திருந்தாங்க. தவிர, அவங்க வித்யாபாலனின் மிகப்பெரிய ரசிகை. அதனால ஜோதிகா இந்தப் படத்துல கண்டிப்பா நடிப்பாங்கனு நம்புனேன். அவங்க ஓகே சொன்னது எனக்குப் பெரிய சந்தோஷம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிப்பது சூர்யாவுக்கும் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு அந்தச் சந்தோஷத்தை ட்விட்டரில் அவரே ஷேர் செய்திருந்தார். 

ராதாமோகன்

கிட்டத்தட்ட 'மொழி' படம் ரிலீஸாகி பத்து வருடத்துக்கு மேல ஆகிடுச்சு. நான் ரொம்ப ரசிச்சு இந்தப் படத்தை எடுத்தேன். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே 'மொழி' படத்துல ஜோதிகா நடிச்சாதான் நல்லாயிருக்கும்னு எழுதுனேன். அவங்களும் நிறைய உழைப்பைக் கொடுத்தாங்க. மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கூடத்துக்குப் போய் படத்துக்காக நிறைய கத்துக்கிட்டாங்க. கஷ்டமான ஒரு கேரக்டரை அவங்க அவ்வளவு மெனக்கெட்டு நேசிச்சுப் பண்ணுனாங்க. அதே மாதிரி 'துமாரி சுலு' படமும் ஜோதிகாவுக்கு நல்ல ஃபர்பார்மன்ஸ் ஃபிளாட்பார்ம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, அவங்களுக்கும் இருக்கு. 

இந்தப்படம் எஃப்.எம் ஸ்டேஷன்ல நடப்பது போலிருக்கும். அதற்காக எஃப்.எம் ஸ்டேஷன் சென்று பார்வையிட வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். முக்கியமா, 'துமாரி சுலு' படத்தில் வரும் ஸ்டேஷன் ஹெட் கதாபாத்திரம் படத்துக்கு வலு சேர்க்கும் கேரக்டர். அந்தக் கேரக்டருக்குப் பணி ஆளுமை, அறிவு, முகத்திலே புன்சிரிப்பு இருக்கக்கூடிய, அதேசமயம் இயல்பா இருக்கக்கூடிய பெண் நடித்தால் நன்றாகயிருக்கும். அதற்காக ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறோம். 

ராதா மோகன்

நம்ம தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். ஏன்னா, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் நம்ம ஆடியன்ஸுக்கு ஏத்த மாதிரி கொடுத்தாதான், அது ஆடியன்ஸுக்கும் பிடிக்கும். அதே நேரத்தில் மூலக்கதையின் சுவாராஸ்யம் குறையாமல் இருக்கும். மே மாசத்துல படத்தோட ஷூட்டிங் பிளான் பண்ணியிருக்கோம். சென்னையில்தான் ஷூட்டிங் நடக்கும். ஜோதிகா சமீபகாலமா நடிக்கற படங்களுக்கு அவங்க சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுத்துட்டு வர்றாங்க. அதனால, இந்தப் படத்துக்கும் அவங்க சொந்தக் குரலியே டப்பிங் கொடுப்பாங்க. என் படங்கள் எல்லாத்துலேயும் யதார்த்தத்தைப் பார்க்க முடியும். நமக்கு என்ன வருதோ, அந்த ஜானரை வைத்துப் படம் எடுத்தால் நல்லாயிருக்கும்னுதான் இதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். வாழ்க்கையில நான் கடந்துபோற மனிதர்களை வெச்சுதான் கதை எழுதுவேன். முக்கியமா பெண்களுக்கு என் ஸ்க்ரிப்ட்டில் நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன்'' என்று முடித்தவரிடம், "நயன்தாராவை உங்க கதையில் எதிர்பார்க்கலாமா?'' என்றேன்.  

"இதுவரை அவருக்காகக் கதை எழுதல. அதுக்கு ஏத்த மாதிரி சூழ்நிலையும் அமையலை. எதிர்காலத்தில் நயன்தாராவுக்கு ஏத்த மாதிரி கதை அமைஞ்சுட்டா, பண்ணுவேன்!" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்