Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''முறைகேடு, சீர்கேடு!" - ரோகிணி vs "ஆதாரம் எங்கே?" ராதாரவி டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல்

30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாமல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த 'தென்னிந்தியத் திரைப்பட, டிவி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க (டப்பிங் யூனியன்)'த்தின் தேர்தல் வரும் மார்ச் 3- ம் தேதி சனிக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறது.

நடிகர் ராதாரவி தலைமையிலான அணியும் கண்டசாலா ரத்னகுமார் தலைமையிலான 'ராமராஜ்யம்' அணியும் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. ராதாரவி தரப்பு, உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கே இருப்பதாகச் சொல்லிவந்த வேளையில், ராதாரவியைத் தொடர்புபடுத்தி முந்தைய நிர்வாகத்தின் மீது பல்வேறு முறைகேடு புகார்களைப் பட்டியிலிட்டுள்ளது, ரத்னகுமார் தரப்பு.

ரத்னகுமார் அணியில் செயலாளர் பதவிக்கு தாசரதி, பொருளாரர் பதவிக்குக் காளிதாஸ், துணைத்தலைவர் பதவிக்கு நடிகை ரோகிணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ராதாரவி

ரோகிணியிடம் பேசினோம்.

''நிறைய சமூகப் பிரச்னைகளுக்கு நான் குரல் கொடுத்துட்டு வர்றேன். ஆனா, நான் உறுப்பினரா இருக்கிற இந்தச் சங்கத்துக்கு உள்ளேயே அவ்வளவு அழுக்கு. பொறுப்புல இருக்கிறவங்கெல்லாம் பெரியவங்க; பொறுப்பை உணர்ந்து செயல்படுறவங்கனு நினைச்சுப் பேசாம இருந்தேன். ஆனா, நல்லது எதுவும் நடக்கலை. அதனால நானே இறங்கிப் போட்டியிட வேண்டியதாயிடுச்சு.

நடந்த முறைகேடு பத்திப் பேசுனா பேசிக்கிட்டே போகலாம். தோண்டத் தோண்ட வந்துக்கிட்டே இருக்கு. ஆர்.டி.ஐ மூலமா சில தகவல்களை வாங்கிப் பார்த்தா, எங்களுக்குக் கிறுகிறுனு தலை சுத்துது. யூனியன் கட்டடத்துக்கான நிலம் வாங்கப்பட்ட தொகையில குளறுபடி இருக்கு. வருடா வருடம் டப்பிங் சங்கத்துக்குக் கிடைக்கிற இலவசக் கல்லூரி சீட்கள் யாருக்குப் போகுதுன்னே தெரியலை. 45,000 செலவு செஞ்சு சங்கத்திற்கான வெப்சைட் தொடங்கப்பட்டதாகச் சொன்னாங்க. அந்த வெப்சைட்டையே இன்னைக்குக் காணோம். 2016- ம் ஆண்டு  நடக்கவேண்டிய தேர்தல் நடக்கலை. ஆனா, தேர்தல் செலவுனு 88,000 ரூபாய் கணக்குக் காட்டியிருக்காங்க. சரியான நிதி அறிக்கைகளைப் பொதுக்குழுவுல தாக்கல் செய்யாம, உறுப்பினர்களோட ஒப்புதலே இல்லாம பொய்யான நிதி அறிக்கையைத் தொழிலாளர் நலத்துறையில தாக்கல் செய்திருக்காங்க. இப்படிப் பல நிர்வாகச் சீர்கேடுகளைச் சொல்லிட்டே போகலாம். அதனால, தேர்தல் நடந்தே ஆகணும்னு நாங்க கோர்ட் படியேறுனதுனாலதான் இந்தத் தேர்தலே நடக்குது.

உறுப்பினர்களுக்கு நடந்ததை எல்லாம் விளக்கியிருக்கோம். அதனால, நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள்ல எப்படி மாற்றம் வந்துச்சோ அதே மாதிரியான மாற்றம் டப்பிங் யூனியன்லேயும் நிச்சயம் வரும்னு நம்பறோம்'' என்கிறார்.

ராதாரவி

ரோகிணி தவிர, நடிகர் முரளிகுமார் மற்றும் துர்கா சுந்தர்ராஜனும் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். சிஜிமோல், ராம்பாபு, எல்.பி.ராஜேஸ்வரி ஆகியோர் இணைச் செயலாளர் பதவிக்கும், டப்பிங் கலைஞர்கள் கோபிநாத், ஜிஜி உள்ளிட்ட 14 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். ராதாரவி அணியில் கதிர் செயலாளர் பதவிக்கும், ராஜ்கிருஷ்ணா பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

ராதாரவியிடம் பேசினோம்.

''இதே ரத்னகுமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னைக்கு தேர்தலே நடத்தப்படலைன்னு கூச்சல் போடலை. இன்னிக்குப் பேசறாங்க. முறைகேடுனு லிஸ்ட் போட்டுத் தந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். லிஸ்டையும் அதற்கான ஆதாரத்தையும் எடுத்துக்கிட்டு வரட்டும், பேசலாம். 50 ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்த டப்பிங் கலைஞர்கள் இன்னிக்கு 4000 ரூபாய் வாங்கறதுக்குக் காரணம் நான். ராத்திரி ஒன்பது மணிக்குமேல டப்பிங் போச்சுனா, பெண் கலைஞர்களுக்கு கார் தந்து அனுப்பிவிடணும்னு தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு அதையும் செய்து கொடுத்தேன். ஃப்ரீ காலேஜ் சீட் வேணும்னா கல்லூரி நிர்வாகம் தரும். ஆனா, பையன் மார்க் வாங்கணுமே... அதிக மார்க் வாங்கி சங்கத்தை அணுகினவங்களுக்கு காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்திருக்கோம். ஜெனரல் பாடிக்கு ஸ்டே வாங்கிட்டு பொதுக்குழு கூடலைனு சொன்னா, என்ன சொல்றது? யூனியனை சொந்தக் கட்டடத்துல இயங்க வச்சவனை யூனியன் பதவிக்கு வரக் கூடாதுக்கிறார், தலைவரா இருந்த காலத்துல ஏழே ஏழு தடவைதான் யூனியன் ஆபீஸிக்கு வந்தவர். சங்கத்துக்கு வந்து போறதுக்கே நேரமில்ல, தலைவரா வந்து என்ன செய்யப் போறாராம்' என்கிறார்.

'உங்களை எதிர்க்கும் அணிக்கு நடிகர் விஷாலின் ஆதரவு இருக்குமென நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு ராதாரவியின் பதில் இது..

'அவர் இந்த யூனியன்ல உறுப்பினர் இல்லை. அதனால அவரோட பங்கு இருக்காதுனு நான் பெருந்தன்மையோட நம்புறேன். அதேநேரம் அவரோட கைங்கர்யம் இருந்தாலும் நான் கவலைப்படப் போறதில்லை’.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்