வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (05/03/2018)

கடைசி தொடர்பு:17:37 (05/03/2018)

"நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க முயற்சிக்காமல், இந்த சாதாரணப் பிரச்னைக்கு போராடுகிறார்கள்!" - சினிமா ஸ்டிரைக் அப்டேட்

கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்தியாவின் நான்கு மொழி புதுப்படங்களும் மார்ச் 1 முதல் வெளிவராது என அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நடந்துவந்த பேச்சு வார்த்தைகளில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால், இந்த முடிவு நீடிக்கும் என அறிவிப்பு வெளியானது. அதில், 'டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்த விதமான சுமுக முடிவுகளும் எட்டப்படாததால், இனி அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை' எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கியூப் யூ,ஃப்.ஓ

மேலும், தயாரிப்பாளர்கள் செலுத்திவந்த VPF கட்டணத்தை இனி செலுத்துவது இல்லை என்றும், handling Charges மட்டுமே செலுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. முக்கியமாக, இந்த விவகாரம் தொடர்பாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும் தனியாக அமைக்கப்படும். டிஜிட்டல் திரையிடலின் அடிப்படைத் தேவைகளான ப்ரொஜக்டர் மற்றும் சர்வர் போன்ற கருவிகளை வைத்துகொள்ள வேண்டும், அப்படி வைத்துக்கொள்ளும் திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

'தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாறு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளைக் கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறப்பட்ட  முடிவினை மீறும் தயாரிப்பாளர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தனஞ்செயன் கூறும்போது, "கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் ஒரு வெளிப்படைத்தன்மையே இல்லாம செயல்படுறாங்க. தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் ஆங்கிலப் படத்திற்கு ஒருமுறை வி.பி.எஃப் கட்டணமாக வெறும் பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இ-சினிமாவிற்கு 22,500 ரூபாய், டி-சினிமாவிற்கு 27,500 ரூபாய் என இரண்டு விதமான விலைப்பட்டியல் இருப்பதுதான் எங்களுக்குப் புரியாத விஷயம். தமிழ்நாட்டில் ரிலீஸாகும் ஆங்கிலப் படங்களைவிட, தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆங்கிலப்  படங்களுக்கு மட்டும் ஒருமுறை கட்டணம் வசூலித்துவிட்டு, நமது பிராந்திய மொழிப் படங்களுக்கு எதற்கு வார வாரம் கட்டணம் வசூலிக்கிறார்கள்? இந்தக் குளறுபடிகளுக்கு அவர்கள் தெளிவான ஒரு தீர்வு தரும்வரை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவு நீடிக்கும். சில படங்களுக்கு அந்தப் படத்தோட மொத்த கலெக்‌ஷனைவிட அதிமாக இருக்கிறது இந்த டிஜிட்டல் செலவு." என்கிறார், அவர்.

தனஞ்செயன்

சென்னை மத்தியப் பகுதியிலுள்ள திரையரங்கத்தின் நிர்வாகி (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஒருவர் கூறும்போது, "பொதுவாக மார்ச் மாதம் குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பிக்கும் என்பதால், பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாது. வருடத்திற்கு பெரிய நடிகர்கள் நடிக்கும் பத்து படங்களைத் தவிர, மற்ற அனைத்தும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்தான். மாசத்துக்கு நான்கு படங்கள் என்ற கணக்கு மாறி இப்போது வாரத்துக்கு நான்கு படங்கள் ரிலீஸ் ஆகுது. இந்த ஒரு மாத காலத்துல அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகி ஓடுனா, அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது. மொத்த பட்ஜெட்டில் ரொம்பக் குறைவான இந்த டிஜிட்டல் சேவை தொகைக்கு ஏன் இவ்வளவு பெரிய போராட்டம்னு தெரியலை. டெக்னீஷியன்கள், நடிகர், நடிகைகள் வாங்குற சம்பளம் எவ்வளவு மடங்கு வளர்ந்திருக்கு... அதை யாரும் கேட்கமாட்டாங்க. தொடர்ந்து ப்ரொஜெக்டர் டெக்னாலஜியை அப்டேட் செய்துவரும் இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் மீது ஒரு விரோத உணர்வைக் கடை பிடிப்பது ஏன் என்று புரியவில்லை. இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மற்ற மொழி திரைப்படங்கள் எங்களது திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கும், அதனால் பாதிப்பு அவர்களுக்குத்தான்!" என்றார் அவர்.   

சிறுபட்ஜெட் படங்களைத் தயாரித்துவரும் சுரேஷ் காமாட்சி இது சம்பந்தமாகப் பேசும்போது, "கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களிடம் தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைகள் பலவும் பரிசீலிக்கப்பட்டு, சிறுபட்ஜெட் படங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் கேட்டபடி ஒரு ஷோவிற்கு 325 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், வாழ்நாள் கட்டணத்தை 22,500-லிருந்து 14,000 ரூபாயாகவும் குறைத்துள்ளனர். நடப்புப் பிரச்னையைக் கையாள்பவர்கள், பதவியில் இருப்பவர்கள் அனைவரும் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களே. அவர்களுக்கான பலன் கிடைக்கும்வரை இந்தப் பிரச்னையை முடிக்கமாட்டார்கள். இதில் எல்லோருக்கும் ஃப்ளாட்ரேட் முறை வந்தால் சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்தான் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும், போட்டிமிக்க திரைத்துறையில் பழையபடி 2007-ல் உபயோகித்த கருவிகளை வைத்துப் படம் காட்டினால், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் எப்படி வருவார்கள்?" என்றார்.                   

சுரேஷ் காமாட்சி

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனோ, "இது தயாரிப்பாளர்களுக்கும் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பிரச்னை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. வழக்கம்போல எங்கள் திரையரங்கங்கள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களை அழைத்துப் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள், அதற்காக காத்திருக்கிறோம்!" என்கிறார். 

அபிராமி ராமநாதன்

விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசும்போது, "ஆரம்ப காலகட்டத்தில் ஃபிலிம் ரீல்களில் தியேட்டரில் படம் ஓட்டிக்கொண்டிருந்தோம். பத்து வருட காலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். மெள்ள மெள்ள வளர்ந்து இன்று கியூப், யூ.எஃப்.ஓ தொழில்நுட்பங்கள் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது. இது சாதாரணமாகப் பார்த்தாலே தேவையில்லாத ஒரு போராட்டமாகத் தெரியும். முதலில் நான்கு மொழி சினிமாத்துறையினர் போராடுகிறார்கள் என்றனர். ஆனால், கேரளா, கர்நாடகா சினிமாத்துறையினர் இந்தப் போராட்டத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். 

அனலாக் பிரின்ட் எனச் சொல்லப்படும் இந்த ஃபிலிம் ரீல்கள் 65,000 ரூபாயாக இருந்தது. தமிழ்நாட்டில் டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரின்ட் சேதமடையாது, விலையும் 20,000 ரூபாய் என்று குறைவாக இருந்தது. அதனால் அனைவரும் இ-சினிமா ப்ரொஜெக்டர்களுக்கு மாறினோம். விநியோகஸ்தர், தயாரிப்பாளருக்குச் செலவில் பெரிய சேமிப்பாக இருந்தது. அந்த ப்ரொஜெக்டர் வைக்கும் செலவை கியூப் நிறுவனமே ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த ப்ரொஜெக்‌ஷன் மிஷின்களில் அவ்வப்போது வரும் தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தகுந்தமாதிரி அப்கிரேடும் செய்து தந்தனர். பழசை எல்லாம் மறந்துட்டுப் பேசிக்கிட்டு இருக்காங்க.

ஒரு தனியார் நிறுவனத்தின் தொழிலில் அரசாங்கம் எப்படித் தலையிட முடியும், வாய்ப்பே இல்லை. அதுகூடத் தெரியாம பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரு படத்திற்கு 1 முதல்  4% வரைதான் டிஜிட்டல் சேவைக்கான செலவு ஆகும். 25% தயாரிப்புச் செலவாகும். மீதமுள்ள 70 % சம்பளங்களாகத்தான் தயாரிப்பாளருக்குச் செலவாகிறது. இதைக் குறைக்க யாரும் முன்வரமாட்டாங்களாம், கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் மட்டும் எப்படி தங்கள் சேவையை இலவசமாகக் கொடுக்கும்? 

திருப்பூர் சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் 80% திரையரங்குகளில் கியூப்,யூ.எஃப்.ஓ ப்ரொஜெக்டர்கள்தான் இருக்கின்றன. புதிய ப்ரொஜெக்டரை இன்ஸ்டால் செய்ய ஒரு கால நிர்ணயம் தேவை. இவர்கள் நினைத்தவுடனே மாற்றமுடியாது. கோயம்புத்தூரில் உள்ள 169 தியேட்டர்களில் வெறும் ஏழு தியேட்டர்களில்தான் சொந்தமாக ப்ரொஜெக்டர் வெச்சிருக்காங்க. தமிழ்நாட்டில் சொந்த ப்ரொஜெக்டர் இருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையில் 100 முதல் 150  வரையே இருக்கும். இவர்கள் வேறோரு புதிய போட்டி சேவை வழங்குநரை வளர்த்துவிட்டுத்தான் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களிடம் பிரச்னை செய்திருக்க வேண்டும்.

இவர்களது வரட்டுப் பிடிவாதம் வேலைக்கு ஆகாது. என்னோட தியேட்டர், அதை எப்படிப் பாத்துக்கணும்னு எனக்குத் தெரியும். டி.டி.எஸ், அட்மாஸ் என இருக்கும் தொழில்நுட்பங்களை விட்டுவிட்டு பத்து வருடத்திற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பத்தை வைத்துப் படம் காட்டச் சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல. மார்ச் மாதம் முடிந்தவுடனேயே பெரிய படங்கள் வெளிவரவிருக்கின்றன. இந்த வெளியீடு நிறுத்தம் அதுவரை தொடருமா எனத் தெரியவில்லை" என்று முடித்தார்.

இது புதுப்பட வெளியீட்டு விவகாரத்தை முடிக்க ஹைதராபாத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லாத நிலையில், கேரள, கர்நாடக சினிமா தயாரிப்பாளார்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரும்பொருட்டு ஒருநாள் மட்டுமே அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். எனவே, இது நீடிக்குமா என்பது சந்தேகம்தான்!


டிரெண்டிங் @ விகடன்