Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’அட்மினிடம் பிரச்னையா, இல்லை அட்மினிஸ்ட்ரேஷனில் பிரச்னையா..!?’’ - ஹெச்.ராஜாவுக்கு எஸ்.பி.ஜனநாதனின் பதிலடி

திரிபுராவில் கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது. இதற்கு  ஹெச்ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட ஒரு ட்வீட் வைரலானது. அதைப் பற்றி இயக்குநர் ஜனநாதனிடம் பேசினேன்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்

திரிபுராவில் லெனினின் சிலையை பா.ஜ.கவினர் அகற்றியது குறித்து உங்களின் கருத்து என்ன..?

’’லெனினின் சிலையை அகற்றியபோது டிவிட்டரில் எச்.ராஜா, அந்நியர்களின் சிலை இங்கு எதற்கு என்பதைப் போல், ’லெனினிற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு’ என பதிவிட்டார். தாம்ஸ் ஆல்வா எடிசனுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, அவர் கண்டுபிடித்த பல்பை நாம் பயன்படுத்தாமலா இருக்கோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, அவரோட தியரியை நாம் ஃபாலோ பண்ணலையா. விஞ்ஞானிகள் உலக மக்களுக்கு பொதுவானவர்கள்; லெனின் உலக மக்களுக்கான தலைவர். அவரை அந்நியர் என்று பிடிக்கக்கூடாது. அவர்கள் லெனினின் சிலையை அழிக்கலாம், ஆனால் அவரை அழிக்கவே முடியாது.’’

இன்று லெனினின் சிலை, அடுத்து பெரியாரின் சிலைனு சொன்னாரே..?

’’என்னுடைய முதல் கண்டனத்தை நான் லெனின் சிலை அகற்றத்திற்குத்தான் தெரிவிப்பேன். ஏனென்றால், லெனின் மகத்தான விஞ்ஞானி. மக்களுக்காக போராடியவர். சும்மா வாய்ச்சொல்லில் போராடியவர் இல்லை; அறிவியல்பூர்வமாக போராடியவர். லெனினின் வழிகாட்டுதல் உலக மக்களுக்குத் தேவை. 

எச்.ராஜா ட்வீட்

திரிபுராவில் லெனினின் சிலையை அகற்றிவிட்டு, அடுத்து பெரியார் சிலைதான் என்று சொல்லுவது ரொம்ப எரிச்சலடையச் செய்கிறது. சாதி வெறியர்னு அவரை விமர்சித்திருக்கிறார் ஹெச்.ராஜா. பல கோடி சொத்துக்கு உரிமையாளர், தன் முதுமையையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக வீதிக்கு இறங்கி வந்து போராடியவர் பெரியார். அவரை விமர்சிக்கிறதுக்கு ஒரு தகுதி வேண்டும். எச்.ராஜாவின் இந்தப் போக்கு மக்களை தப்பான வழிக்கு திசைத்திருப்பதைப் போல் இருக்கிறது. இது ரொம்ப வருத்தமான செயல். 

ஹெச்.ராஜாவைப் பற்றி மீம்ஸ் போடும்போதும் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். அவருடைய கருத்து பிடிக்கவில்லை என்றால் நாம் அதைத்தான் விமர்சிக்க வேண்டும். அவரை விமர்சித்து மீம்ஸ் போடுவதும் தவறுதான்.’’

ஆனால், ’இந்த ட்வீட்டை எனது அட்மின்தான் பதிவிட்டார்’ என ஹெச்.ராஜா கூறியுள்ளாரே..?

’’அது எப்படிங்க; என்னோட படத்தில் எனக்கு தெரியாமல் ஒரு சீன் வந்துவிட்டது என்று நான் சொல்லமுடியுமா, ஒவ்வொரு ஃப்ரேமும் என்னோட பொறுப்புத்தானே. உங்களுடைய அட்மினிடம் பிரச்னை இருக்கிறது என்றால், உங்களுடைய அட்மினிஸ்ட்ரேஷனிலும் பிரச்னை இருக்கிறது என்று தானே அர்த்தம்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்