’சூர்யகாந்தி’ முதல் ’அருவி’ வரை... பெண்களைப் போற்றிய தமிழ்ப்படங்கள்..! #WomensDay

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

சூரியகாந்தி:

சூரியகாந்தி

பெண்களை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் என்றே சொல்லலாம். வேலை பார்க்கும் கணவன் மனைவி இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் மிக நுட்பமாகப் பதிவு செய்த திரைப்படம் ’சூரியகாந்தி’. திரைப்படத்தில் ராதா என்னும் கதாபாத்திரத்தில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்.

அவள் ஒரு தொடர்கதை:

அவள் ஒரு தொடர்கதை

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவள் ஒரு தொடர்கதை’; அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. தன் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்மணியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் நலனுக்காக தன்னுடைய காதல், மகிழ்ச்சி போன்றவற்றை தியாகம் செய்யும் கவிதாவாகவே நடிகை சுஜாதா திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார்.

புதுமைப் பெண்:

புதுமைப் பெண்

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் வரதட்சணை கொடுமை, பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றைக் குறித்துப் பேசியது. இத்திரைப்படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாத அளவிற்கு நடித்திருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம்:

சம்சாரம் அது மின்சாரம்

 இயக்குநர் விசு அவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கும். எனினும் அவற்றில் தனிச்சிறப்பை பெற்ற திரைப்படம் ’சம்சாரம் அது மின்சாரம்’. விசுவின் திரைப்படங்களில் பெண்களின் பிரச்னைகளுக்கு விசுவின் கதாபாத்திரம் தீர்வு தேடி தருவதாக திரைக்கதை அமைந்திருக்கும். ஆனால், இப்படத்தில் குடும்பச் சிக்கல்களை வீட்டின் முதல் மருமகளான பெண் கதாபாத்திரமே புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீர்த்து வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

மனதில் உறுதி வேண்டும்:

மனதில் உறுதி வேண்டும்

இத்திரைப்படமும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பும் சில காட்சிகளும் ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் சாயலில் அமைந்தாலும், சுஹாசினி ஏற்றிந்திருந்த செவிலியர் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன், தமிழ் சினிமாவில் தனி இடத்தையும் பெற்றது.

மகளிர் மட்டும் (1994):

மகளிர் மட்டும் (1994

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைப் பற்றி பேசிய திரைப்படம். படத்தின் திரைக்கதை நகைச்சுவையாக அமைந்திருந்தாலும் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யதிருந்தது. பாப்பம்மா, ஜானகி, சத்யா என திரைப்படத்தின் முதன்மை பாத்திரங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களைப் பிரதிபலித்தன.

கருத்தம்மா:

கருத்தம்மா

பெண் சிசுக்களை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அவலத்தை பாரதிராஜாவைத் தவிர வேறு எவராலும் இந்த அளவிற்கு உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்க முடியாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு ’கருத்தம்மா’.

சிநேகிதியே:

சிநேகிதியே

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் மாறுபட்ட ஒரு திரைப்படம் ’சிநேகிதியே’. த்ரில்லர் படமான இதில், தங்கள்மேல் விழுந்த கொலைப்பழியை பொய் என்று நிரூபிக்கப் போராடும் இரு தோழிகளின் கதையாக அமைந்திருக்கும்.

மொழி:

மொழி

காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு தன்னம்பிக்கை கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணையும் அவளை விரும்பும் ஒரு இசைக் கலைஞனின் கதையும் என, தான் எடுத்துக்கொண்ட கதையை கலகலப்புடன் சேர்த்து உணர்ச்சிபூர்வமாகக் கொடுத்திருப்பார் இயக்குநர் ராதா மோகன். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேரும் ராதா மோகன் - ஜோதிகாவிடமிருந்து ’மொழி’ போன்ற இன்னொரு நல்ல படைப்பை எதிர்பார்க்கலாம்.

36 வயதினிலே:

36 வயதினிலே

திருமணத்திற்கு பின்பு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களின் கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள், தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தினராலேயே எவ்வாறு உதாசீனப்படுத்தப்படுகிறது; அதில் இருந்து மீண்டு வந்து எப்படிச் சாதிப்பது என்பதைச் சொன்ன படம். ஜோதிகாவிற்கு ஒரு கம் பேக் மூவியாக அமைந்தது.

இறுதிச்சுற்று:

இறுதிச்சுற்று

விளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியலினால் ஏற்படும் பாதிப்புகளையும், மீன் விற்கும் ஒரு சாமானியப் பெண்மணி குத்துச்சண்டைப்போட்டியில் தேசிய அளவில் சாதிப்பதையும் ஒருசேர காண்பித்த திரைப்படம். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், நடிப்பிலும் ரசிகர்களை நாக்அவுட் செய்திருப்பார்.

 மகளிர் மட்டும் (2017):

 மகளிர் மட்டும் (2017)

ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் பெயரைக் கொண்டு வெளிவந்தாலும், அப்பெயருக்கு நியாயம் சேர்த்தது இந்த ’மகளிர் மட்டும்’. படத்தில் ஆவணப்பட இயக்குநராகவும் பெரியாரிசக் கொள்கைகள் கொண்ட புதுமைப்பெண்ணாகவும் ஜோதிகா நம் மனதில் பதிந்திருப்பார்.

அறம்:

அறம்

ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்துகொண்டு அதிகார வர்க்கத்தின் அனைத்துத் தலையீடுகளையும் மீறி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஓர் இரும்புப் பெண்மணியாக வந்து ’அறம்’ செய்திருப்பார் மதிவதனி. 

அருவி:

அருவி

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களைக் குடும்பமும் சமுதாயமும் எப்படியெல்லாம் புறக்கணித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்த திரைப்படம் இந்த 'அருவி’. 'அருவி’ கதாபாத்திரத்திற்கென பிறந்தவர்போல இந்தப் படத்தில் ஒன்றி நடித்திருப்பார் அதிதி பாலன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!