`` மேயாத மான், யாழ் மட்டுமல்ல... மெர்சல், விவேகமும் ஆன் தி வே!' - 'ரீ-ரிலீஸ்' படங்கள் | Mersal and Vivegam joins the list of re release movies

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (09/03/2018)

கடைசி தொடர்பு:21:55 (09/03/2018)

`` மேயாத மான், யாழ் மட்டுமல்ல... மெர்சல், விவேகமும் ஆன் தி வே!' - 'ரீ-ரிலீஸ்' படங்கள்

தற்போது தமிழ் சினிமா இருக்கும் சூழ்நிலையில் வார வாரம் படங்கள் ரிலீஸாகிறதோ இல்லையோ திரைப்படத் துறையின் பிரச்னைகள் நடந்துகொண்டே இருக்கிறது.  கியூப், யூ.எஃப.ஓ நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம்  வசூலிப்பதற்கு  எதிராகத்  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1-ம் தேதியிலிருந்து புதுப்படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே எந்தப் புதுத் தமிழ் திரைப்படங்களும் வெளியாகவில்லை. 

மேயாதமான்

இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெளியான சில திரைப்படங்கள் தங்கள் படங்களை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு அதன்படி சில படங்களும் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'மேயாதமான்' திரைப்படத்துக்கு அதிக தியேட்டர்கள் தென் தமிழகத்தில் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாகப் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரிடம் பேசினேன். 

"தற்போது சேலத்தில் என் அடுத்த படம் தொடர்பாக வந்திருக்கிறேன். இங்கே 'மேயாதமான்' படத்தின் ரீ-ரிலீஸூக்காக நிறைய போஸ்டர்ஸ் ஒட்டியிருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு'' எனப் பேசத் தொடங்கினார், இயக்குநர் ரத்னகுமார். 

"ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் 'மேயாதமான்' படத்தை ரீ-ரிலீஸ் பண்ற தகவல் எனக்கு வந்துச்சு. கேட்டவுடனேயே ரொம்ப சந்தோஷம் எனக்கு. இப்போ இருக்ககிற சூழ்நிலையில தயாரிப்பாளர்களுடைய ஸ்ட்ரைக் காரணமா புதுப்படங்களையே ரிலீஸ் செய்யாம இருக்காங்க. சென்னை போன்ற நகரங்கள்லகூட இந்தி, இங்கிலீஷ் படங்கள்தான் ரிலீஸ் ஆச்சு. மதுரை, திருநெல்வேலி, சேலம் பக்கமெல்லாம் எந்தப் படமும் ரிலீஸ் ஆகலை. அதனால்தான், விநியோகஸ்தர்கள் ஒண்ணா சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்காங்க. 

முக்கியமா, என் படம் ரிலீஸானப்போ கூடவே 'மெர்சல்' படமும் ரிலீஸ் ஆச்சு. அதனாலே என் படத்துக்கு அதிகமா ஸ்கிரீன்ஸ் கிடைக்கலை. ஆனா, கிடைச்ச வரைக்கும் படம் நல்லாப் போச்சு. என் படத்துல இடம்பெற்ற 'என் வீட்டுக் குத்துவிளக்கே' பாட்டைக்கூட பலபேர் 'மெர்சல்' படத்தோட பாட்டுனுதான் நினைச்சுக்கிட்டாங்க. யூடியூபில் இந்தப் பாட்டோட வியூவர்ஸ் அதிகமாயிருந்தாக்கூட, என் படத்தோட பாட்டுனு மதுரை, திண்டுக்கல், சேலம், நெல்லை பக்கத்துல இருந்தவங்களுக்கெல்லாம் தெரியலை.  

மேயாதமான்

அதனாலதான், விநியோகஸ்தர்கள் இப்போ என் படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. முதல்ல சின்னதா தியேட்டர் கிடைக்க ஆரம்பிச்சு, இப்போ மொத்தம் 80 தியேட்டர்ஸ் வரைக்கும் இந்தப் படத்துக்குக் கிடைச்சியிருக்கு. சேலத்துல மட்டும் அஞ்சு தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கு. 

உங்க படத்தோட ரீ-ரிலீஸூக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து என்ன சொன்னாங்க?

தயாரிப்பாளர் சங்கம் எதுவும் சொல்லலை. ஏன்னா, கியூப் பிரச்னை காரணமாதான் இப்போ ஸ்ட்ரைக் போயிட்டிருக்கு. அடுத்த வாரத்துல இருந்து தியேட்டர்கள் ஸ்ட்ரைக்கும் நடக்கப்போகுது. அதனால, ஒரு வாரத்துக்குக் கண்டிப்பா 'மேயாத மான்' தியேட்டர்களில் ஓடும். அதுவே எனக்கு சந்தோஷமாதான் இருக்கு.  

தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் என்ன சொன்னார்?

ஆக்சுவலா, கார்த்திக் சுப்பராஜ் இப்போ ரஜினி சாரோட புதுப்பட வேலைகள்ல பிஸியா இருக்கார். அதுமட்டுமில்லாம, அவருடைய இயக்கத்தில் 'மெர்குரி' படத்தோட டீஸர் இப்போதான் ரிலீஸ் ஆச்சு. அதனால, அவர் ரீ-ரிலீஸ் தொடர்பா எந்தவொரு விஷயத்திலேயும் தலையிடலை. ஆனா, அவருக்குப் படம் ரீ-ரிலீஸ் ஆகுற விஷயம் தெரியும், அவருக்கும் ஹாப்பிதான். சேலத்துல இப்போ ரிலீஸ் ஆகியிருக்கிற தியேட்டர்ஸூக்குப் போய் விசிட் பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னா, இந்தப் படம் ரிலீஸ் ஆனப்போகூட இவ்வளவு தியேட்டர்ஸ் கிடைக்கலை. இப்போ நிறைய தியேட்டர்ஸ் கிடைச்சிருக்கிறது, பெரிய விஷயம்.

ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் மற்றொரு படமான 'யாழ்' படத்தோட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்ஆனந்திடம் பேசினேன். 

யாழ்

''என் படம் நவம்பர்ல ரிலீஸ் ஆனது. அப்போ எங்களுக்கு நல்ல தியேட்டர்ஸ் கிடைக்கவில்லை. அதனாலேயே என் படம் மக்களிடம் நல்ல ரீச் அடையவில்லை. நான் என் படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்காக ஜனவரி மாதத்திலிருந்து முயற்சி பண்னேன். ஆனா, பொங்கலுக்கு நிறைய புதுப்படங்கள் ரிலீஸானதால், எனக்கு தியேட்டர்ஸ் கிடைக்கலை... பல போராட்டங்களுக்குப் பிறகு, தற்போதுதான் ரீ-ரிலீஸாகிறது. ரீ-ரிலீஸ் என்பது கஷ்டமான விஷயம். இதுக்கு நிறைய தியேட்டர்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி தயாரிப்பாளர் சங்கமும் எங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்க.

இப்போ நடக்கிற ஸ்ட்ரைக் காரணமா புதுபடங்கள்தான் ரிலீஸாகாம இருக்கு. அதனாலதான், இது மாதிரியான சின்னப் படங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அடுத்த வாரத்திலிருந்து தியேட்டர்களும் ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க. அதனால, எங்களுக்குக் கிடைக்கிற இந்த கொஞ்சநாளில் எங்க படம் தியேட்டர்களில் ஓடுவது சந்தோஷமான விஷயம். மக்கள் தியேட்டரில் படம் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்றதுதான், எங்களுக்குத் தேவையான விஷயம். என்னைப் பார்த்து பல சின்னப் படங்களும் ரீ-ரிலீஸூக்குப் பிளான் பண்ணியிருக்காங்க" என்கிறார் இயக்குநர் ஆனந்த். 

யாழ் திரைப்படம் இயக்குநர் ஆனந்த்

சிறுபடங்கள் மட்டுமல்ல, 'மெர்சல்', 'விவேகம்' போன்ற ஸ்டார் நடிகர்களின் சில திரைப்படங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரீ-ரிலீஸ் செய்யப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close