"புதுப்படங்கள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, நிகழ்ச்சிகளும் கூடாது! - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு?" #TamilCinemaStrike | Problems in Tamil cinema protests take a new turn

வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (14/03/2018)

கடைசி தொடர்பு:09:37 (15/03/2018)

"புதுப்படங்கள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, நிகழ்ச்சிகளும் கூடாது! - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு?" #TamilCinemaStrike

பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் தமிழ்த் திரைத்துறை தவித்து வருகிறது. வாரவாரம் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், ஏதேனும்  புது பிரச்னை உருவெடுக்கிறது. கியூப், யூ.எஃப்.ஓ கட்டணப் பிரச்னை தீரும் வரை  மார்ச் 1- ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்கள்  வெளியாகாது எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

தயாரிப்பாளர்கள்

இதைத் தொடர்ந்து, தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, லைசென்ஸ் புதுப்பிப்பு, உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து என முன் வைத்திருந்த பல கோரிக்கைகளை மார்ச் 16- ம் தேதிக்குள் ஆரசு ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில், திரையரங்குகள் மூடப்படும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தினர். தங்களது இந்த அறிவிப்புக்கும் தயாரிப்பாளர்களின் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும் அறிவித்தனர். 

கியூப் , யூ.எஃப்.ஓ விவகாரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து புதுப் படங்களை வெளியிடுவதில்லை என உறுதியாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு, கியூப் நிறுவனத்தின் புதிய கட்டணங்கள் திருப்தியளிக்கவே இப்பிரச்னையை முடித்துக் கொண்டனர். பிறகு, இப்பிரச்னையைத் தனியாக எதிர்கொண்டுவரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளார் சங்கம் மார்ச் 16- ம் தேதி முதல் படத் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவித்தது. 

அந்தக் கூட்டத்தில், நடப்பில் இருக்கும் கியூப், யூ,எஃப்.ஓ கட்டணப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் இனி வி.பி.எஃப் கட்டணத்தை ஏற்கக் கூடாது என்பது முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதேநேரத்தில், தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் சிறிய படம், பெரிய படம் எனப் படத்திகேற்ற வகையில் விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.   

தவிர, வளர்ந்து வரும் இன்டர்நெட் யுகத்தில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி செய்துதரும் நிறுவனங்கள், மக்களிடம் வசூலிக்கும் அதிகக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைத் தயாரிப்பாளர்களும் கவனிக்கும் வகையில் திரையரங்க டிக்கெட் விற்பனை மையங்கள் கணினிமயமாக்கப்பட வேண்டும்.       

சிறிய திரைப்படங்கள் வெளிவரும்போது, அதற்கேற்ற அளவுக்குப் பரவலாக திரையரங்குகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க அனைத்துவிதமான நெறிமுறை நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்... எனப் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், போராட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பற்றி விளக்கப்பட்டது.  மார்ச் 16- ம் தேதிக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெறாது எனவும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் 23- ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.  இதுகுறித்த அனைத்து விவாதங்களையும் ஆலோசித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மற்ற திரைத்துறை சங்கங்கள் மேற்கண்ட முடிவுகளையெல்லாம் ஒருமனதாக ஆதரித்துள்ளன.

சினிமாவில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அங்கமாய் இருக்கும் சங்கங்களின் ஒருங்கிணைந்த சம்மேளனமான ஃபெப்சி அமைப்பு  தயாரிப்பாளர் சங்கங்கத்தின் இந்த முடிவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கியூப் நிறுவனம் தங்களது கணக்குகளின்படி 18 முதல் 23 சதவிகிதம் வரை அவர்கள் வசூலிக்கும் திரையிடல் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது 

மொத்தத்தில், இந்த விவகாரம் தற்போது ஒரு புது வடிவை எட்டியுள்ளது. இதை அரசு தலையிட்டு விரைந்து முடித்து வைக்கவேண்டும் என்பது திரைத்துறையினரின் அறைகூவல். அதற்கு அரசாங்கம் செவிசாய்க்குமா... என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

   


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close