அல்லு அர்ஜூன் முதல் டொவினோ தாமஸ் வரை... தமிழில் ஆர்வம் காட்டும் பிறமொழி நடிகர்கள்! | Non Tamil actors find interest to act in tamil movies

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (16/03/2018)

கடைசி தொடர்பு:19:30 (16/03/2018)

அல்லு அர்ஜூன் முதல் டொவினோ தாமஸ் வரை... தமிழில் ஆர்வம் காட்டும் பிறமொழி நடிகர்கள்!

சமீபகாலமாக பிற மொழிப்படங்களில் ஜொலித்த நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். நானி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பஹத் பாசில், மகேஷ் பாபு என நீளும் பட்டியலில் இன்னும் பலர் சேரயிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

அல்லு அர்ஜூன்:

அல்லு அர்ஜூன்

லிங்குசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் தமிழ்ப்படத்தில்தான் அல்லு அர்ஜூன் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார். டோலிவுட்டைத் தாண்டி கோலிவுட் வரைக்கும் நன்கு தெரிந்த முகமாக இருப்பவர் அல்லு அர்ஜூன். நீண்ட நாள்களாகவே தமிழில் படம் பண்ணவேண்டும் என்கிற அல்லு அர்ஜூனின் ஆசை, இப்போதுதான் நடக்கவிருக்கிறது. சண்டகோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கும் இயக்குநர் லிங்குசாமி, அதன் வேலைகளை முடித்துவிட்டு அல்லு அர்ஜூன் படத்தில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. 

நாக சைதன்யா:

நாக சைதன்யா

சென்னை பல்லாவர பெண்ணான சம்ந்தாவை திருமணம் செய்து சென்னைக்கு நெருக்கமான நாக சைதன்யா, இப்போது தமிழ்ப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தியது போலவே, தான் நடிக்கும் முதல் படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும் என்று கதை தேர்வில் அதிக கவனம் செலுத்திவருகிறார். சைதன்யாவின் அப்பா நாகார்ஜூனாவின் தமிழ்ப்படங்கள் பலவும் ஹிட் என்பதால் அவரைப் போலவே நல்ல படங்களையே இவரும் தேர்வு செய்வார் என நம்பலாம். சைதன்யா நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் எனவும் எதிர்பார்க்கலாம்.

விஜய் தேவரகொண்டா:

விஜய் தேவரகொண்டா

’பெல்லி சூப்புலு’, ‘அர்ஜூன் ரெட்டி’ படங்கள் மூலம் தெலுங்கில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்ற விஜய் தேவரகொண்டா, ‘அர்ஜூன் ரெட்டி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். தற்போது விஜய் தேவரகொண்டா, ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'நோட்டா' படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காகவே தமிழ் பேச கற்றுவருகிறார் விஜய் தேவரகொண்டா.

நாக செளரியா:

நாக செளரியா

பிரேமம் ஃபீவரால் உச்சம் பெற்ற சாய் பல்லவி தமிழில் நடிக்கும் முதல் படம் கரு. விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி,’நிழல்கள்’ ரவி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் தெலுங்கு நட்சத்திரம் நாக செளரியாதான் சாய் பல்லவிக்கு ஜோடி. இந்தப் படம் வெளியானப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறார் நாக செளரியா. இந்தப் படத்தை கனம் என்கிற பெயரில் தெலுங்கிலும் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

டொவினோ தாமஸ்:

டொவினோ தாமஸ்

கெளதம் மேனன் இயக்கத்தில் டிடி நடித்த ’உலவிரவு’ பாடலில், டிடிக்கு ஜோடியான நடித்தவர் டொவினோ தாமஸ். ’ஒரு மெக்ஸிகன் அபராதா’, ’கோதா’, ’தரங்கம்’, ’மாயநதி’ படங்கள் மூலம் மலையாளத்தில் ஃபேமஸான டொவினோ, அபினும் அனுவும் படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பியாவுக்கு ஜோடியா நடித்திருக்கும் டொவினோ, மாரி-2 படத்தில் தனுஷுக்கு வில்லனாகவும் நடிக்கிறார். ஒரே வருடத்தில் ஹீரோ, வில்லன் என கலக்கயிருக்கிறார் டொவினோ தாமஸ்.


டிரெண்டிங் @ விகடன்