"அவர்கள் விருப்பம்; புதிய படங்களைக் கொடுக்கும்போது கொடுக்கட்டும்! திரையரங்குகள் இயங்கும்" - அபிராமி ராமநாதன் #TamilCinemaStrike

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ் சினிமா ஒரு இடியாப்பச் சிக்கல் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்திற்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1- ம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என்று முடிவு செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. மறுபுறம் கியூப் டிஜிட்டல் நிறுவனம் தங்களது செயல்முறைச் செலவுகளைக் கணக்கிட்டு முந்தைய கட்டணங்களிலிருந்து 18 முதல் 23 சதவிகிதம் வரை குறைத்துள்ளதாகக் கூறியிருக்கிறது. இந்தக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்கக்கோரி தயாரிப்பாளர்கள் ஃபெப்ஸியுடன் இணைந்து இன்று முதல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் போராட்டம் வலுத்து வருகின்றது. இதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாமல் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, லைசென்ஸ் புதுப்பிப்பு காலத்தை அதிகரித்தல், 8  சதவிகித உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து, ஃபிலிம் ரீல் காலத்திலிருந்த ஆபரேட்டர் உரிமம் பெரும் சட்டத்தை நீக்குதல்... உள்ளிட்ட பல கோரிக்கைகளைப் பரிசீலித்து அரசாணை வெளியிடுமாறும், அதுவரை படங்களைத் திரையிடாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாகவும் அறிவித்திருக்கிறார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.எம்.அண்ணாமலை.  அதேசமயம், 'மார்ச் 16- ம் தேதி முதல் படங்களைத் திரையிடுவோம்!' என சென்னை நகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

உதயம்

நேற்று சென்னையில் நடந்த சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில், "மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் திரையரங்குகளை மூடமாட்டோம். ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்ளமாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என வேறு மொழிப் படமாக இருந்தாலும், பொது மக்களின் பொழுதுபோக்கிற்காக திரையிடத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்'' என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

அபிராமி ராமநாதன்

இதுதொடர்பாக சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசினோம். "தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடம் திரையரங்குக்கு வந்து படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தமாதிரி ஸ்டிரைக் நடத்துவதும், அதில் திரையரங்க உரிமையாளர்கள் பங்கேற்பதும் தியேட்டர் வர்த்தகத்தை மேலும் மோசமாக்கி விடும். ஏற்கெனவே சில கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தோம். அதன்படியே 30 சதவிகிதமாக இருந்த கேளிக்கை வரி 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இப்போது, இந்த வரியை நீக்கக்கோரி மட்டுமல்லாது, வேறுசில கோரிக்கைகளோடு இந்த ஸ்டிரைக் நடந்து வருகிறது. நான் மேற்சொன்ன காரணத்திற்காக இதில், மல்ட்டிபிளக்ஸ் மற்றும் சென்னை  திரையரங்குகள் பங்கேற்காது. எப்போதும்போல் சென்னைத் திரையரங்குகள் இயங்கும்."

கியுப், யூ.எஃப்.ஓ விவாகாரத்தைப் பற்றிக் கூறியவர், "கியூப், யூ.எஃப்.ஓ மற்றும் தயாரிப்பாளர்களுக்கிடையே நடக்கும் இந்தப் பிரச்னையில் நாங்கள் கருத்துக் கூறவோ தலையிடவோ முடியாது. ஒரு படம் என்பது தயாரிப்பாளர்களின் பொருள். அதை அவர்கள் எப்பொழுது படத்தைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அப்போது தரட்டும்!" என்று சுருக்கமாக முடித்தார்.

இந்நிலையில், சென்னை வடபழனி பகுதியிலுள்ள உதயம் திரையரங்கம் இன்று மூடப்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் சார்பாக இருக்கும் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றைத் தமிழக ஆளுநரைச் சந்தித்து இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.   

எந்தத் திரையரங்கில் படம் ஓடுகிறது, எந்தப் படம் ஓடுகிறது... என்ற குழப்பத்தில் இருப்பது என்னவோ, ரசிகர்கள்தாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!