'ஜுலிக்கு முக்கியமான படம்... ஆனா, அனிதா குடும்பம்தான்...?!' - 'அனிதா' பட தயாரிப்பாளர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர். ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், 'மன்னர் வகையறா' படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார். 

ஜூலி

இந்நிலையில், நீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று 'அனிதா எம்.பி.பி.எஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் அஜய்யைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பேச விரும்பாததால், படத்தின் தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசினார். 

''என் தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் படம் 'அனிதா எம்.பி.பி.எஸ்'. சமூக சிந்தனை கொண்ட படத்தைத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கான கதையைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, படத்தின் இயக்குநர் அஜய் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம்னு சொன்னார். எனக்கும் அது சரியாகப்பட்டது. உடனே, படத்துக்கான நடிகர்களைத் தேடினோம். அப்போது, இந்தக் கதையில் லட்சுமி மேனன் நடித்தால் நன்றாக இருக்குமென எங்களுக்குத் தோன்றியது. ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், வேறொருவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தோம். அப்போதுதான், 'பிக்பாஸ்' ஜூலி எங்கள் நினைவுக்கு வந்தார். அவர் முதலில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 'வீரத்மிழச்சி'யாக மக்களிடம் அறிமுகமானவர். ஆனால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் அவருக்கு வந்துவிட்டது. இந்தக் கதையில் அவர் அனிதாவாகப் பொருத்தமாக இருப்பார்'னு தீர்மானிச்சு, ஜூலியிடம் கதையைச் சொன்னோம். இந்தக் கதையில் நடிப்பதில் அவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். இது மூலமா அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஜூலி ஏற்கெனவே 'உத்தமி'னு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது மூலமா அவர் இன்னும் பேமஸாகி விடுவார். ஏனெனில், அனிதாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட விஷயம். அவரது கனவுகள் நசுங்கியது. இந்தப் படம் அவருக்குச் சமர்ப்பணம். படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்த அனைவரும் ஜூலி எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை, மாணவி அனிதாதான் தெரிந்தார் என்கிறார்கள். ஜூலி அனிதாவாகவே மாறி, நடித்தார். மேலும், அனிதாவின் மரணம் தொடர்பான பல வீடியோக்களைப் பார்த்துவிட்டு கண் கலங்கிவிட்டார். அனிதா கேரக்டரில் நடிக்க சரியான நபர், ஜூலிதான். 

ஜூலி

அனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இதுவரைக்கும் அவரின் குடும்பத்தார் யாரிடமும் நாங்கள் பேசவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானவுடன் அனிதாவின் அண்ணன் எங்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். 

இந்தப் படத்துக்கான ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் ஏப்ரல் முதல் வாரத்துக்கு அப்புறம் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணியிருக்கிறோம். அனிதாவின் சொந்த ஊரான அரியலூரில் படத்துக்கான ஷூட்டிங் நடக்கும். அதற்காக லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படத்தில் ஜூலியின் அப்பாவாக நானே நடிக்கவிருக்கிறேன். படத்தோட இசைக்காக இளையராஜா அல்லது ஜி.வி.பிரகாஷிடம் கேட்கலாம்னு நினைக்கிறோம். அவர்கள் ஓகே சொல்லிவிட்டால், வேலையை ஆரம்பித்து விடுவோம். கண்டிப்பாக இந்தப் படம் மக்கள் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக அமையும்" என்கிறார், தயாரிப்பாளர் ராஜா. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!