Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஸ்டிரைக்கின்போது `விஜய் 62' படத்துக்கு மட்டும் ஷுட்டிங் அனுமதி எப்படி? பிரச்னையின் விபரமும் பின்னணியும்! #VikatanExclusive

Chennai: 

கியூப் கட்டணப் பிரச்னை, தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களாகவே எந்த தமிழ்ப் படங்களும் ரிலீஸாகவில்லை. மேலும், தற்போது படப்பிடிப்புகளும் நடைபெறக்கூடாது என்றொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக மார்ச் 16-ஆம் தேதி முதல் உள்ளூர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. வெளிநாடுகளில் நடந்து கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு வருகின்ற 23-ஆம் தேதியோடு நிறுத்தப்பட இருக்கின்றன. இந்த சினிமா ஸ்டிரைக் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர்கள் சங்கம் என அனைத்து சங்கங்களின் சம்மதத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால், கியூப் பிரச்னைகள், தியேட்டரில் நடக்கும் முறைகேடுகள், நடிகர்களின் சம்பளம், சிறிய பட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர்கள் ஒதுக்கீடு... எனப் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையேதான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்தன. 'அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில், விஜய் படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கும்போது எப்படி படப்பிடிப்பை நடத்தலாம்?' என்று தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே டிவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஜே.எஸ்.கே

இதுபற்றி ஜே.எஸ்.கே-விடம் கேட்டபோது, ''ஃபெப்சி அமைப்பில் வேலை செய்கிற தொழிலாளர்கள், விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை செய்றாங்க. அவங்கதான் என்கிட்ட, அங்கே ஷூட்டிங் நடக்கிற விஷயத்தைச் சொன்னாங்க. சினிமா ஸ்டிரைக் எல்லோருக்கும் பொதுவானது. அதைமீறி இந்த மாதிரியான விஷயங்களை செய்வது சரி கிடையாது. இதுல ரெண்டு விஷயங்களைக் கவனிக்கணும். விஜய் படத்துல வேலை செஞ்சிட்டு இருக்கிற சிலர், ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க மற்ற சில படங்களிலும் வேலை பார்க்கிறாங்க. இந்த ஸ்டிரைக் காரணமா ஃபெப்சி அமைப்பினர் பலபேர் வேலையில்லாம முடங்கிப் போயிருக்காங்க. இவ்வளவு சீரியஸா சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டு இருக்கும்போது, பொறுப்பான இடத்துல இருக்கிற நாம படப்பிடிப்பை நடத்தக்கூடாதுனு விஜய்க்குத் தெரியதா என்ன...

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து, 'நாங்கதான் விஜய் படத்துக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தோம். ஏன்னா, அவங்க பெரிய லெவல்ல செட் போட்டிருந்தாங்க'னு சொல்றாங்க. ஆனா, இந்தத் தகவல் வெளிவந்ததே தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த துரைராஜ்கிட்ட இருந்துதான். விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தா, பிரச்னை வரும்ங்கிறதால வேறு சில சின்னப் படங்களுக்கும் அனுமதி கொடுத்திருக்காங்க. இதுக்குப் பதிலா, ஷூட்டிங் பாதியில நிற்கிற 40 படங்களுக்கும் சேர்த்து அனுமதி கொடுத்திருக்கலாமே?.

விஜய்

இதைப்பத்தி நான் கவுன்சில் பொறுப்புல இருக்கிற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுகிட்ட பேசினேன். 'அப்படியா, இதைப்பத்தி எனக்கு எந்தத் தகவலும் தெரியலையே!'னு சொன்னார். இன்னும் சிலபேர் என் போனைக்கூட எடுக்கலை. என்னைப் பொருத்தவரைக்கும் சினிமா ஸ்டிரைக் நடந்துட்டு இருக்கும்போது, படப்பிடிப்பு நடக்ககூடாது, எல்லாத்தையும் நிறுத்தணும். எல்லோருடைய உணர்வுக்கும் மரியாதை கொடுக்கணும்" என்று முடித்தார், ஜே.எஸ்.கே. 

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேவின் குற்றச்சாட்டு குறித்து கவுன்சிலின் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜிடம் பேசியபோது, "சென்னைக்கு மார்ச் 16-ஆம் தேதியிலிருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு 23-ஆம் தேதியிலிருந்தும் ஷூட்டிங்கை ரத்து செய்யணும்னு முடிவு செய்யபட்டிருந்தது. 'ஷூட்டிங்கை ஒத்திவைப்பதில் ஒன்றிரண்டு நாள்கள் முன்னப்பின்னே ஆச்சுனா, அதுக்கான அனுமதிகளைக் கேட்டு வாங்கிட்டு ஷூட்டிங்கை நடத்தலாம்'னு முடிவு எடுத்திருந்தாங்க.  சமுத்திரக்கனி சார் இயக்குற 'நாடோடிகள் 2' படத்துக்கான ஷூட்டிங் மதுரையில நடந்திட்டு இருக்கு. அவங்க கூடுதலா சில நாள்கள் அனுமதி கேட்டிருந்ததுனால, 23-ஆம் தேதி வரை ஷூட்டிங்கை நடத்திக்க அனுமதி கொடுத்திருந்தோம். மேலும், ஈ.சி.ஆர்ல நடக்குற ஒரு ஷூட்டுக்கும், டெல்லியில நடந்துக்கிட்டு இருக்கிற ஒரு ஷூட்டுக்கும் தேதிகளை 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திருந்தோம். நாங்க எல்லாப் படப்பிடிப்புகளையும்  கண்காணிச்சுக்கிட்டுதான் இருக்கோம். சிலபேரால டக்குனு ஷூட்டிங்கை ரத்து செய்திட முடியாது. அதுக்காக மட்டும்தான் சில படக்குழுவினருக்கு தேதிகளை நீட்டிச்சிருக்கோம். 

விஜய் படத்துக்கும் அந்த அடிப்படையில்தான் மூன்று நாள்கள் அனுமதி கொடுத்திருந்தோம். விஜய்க்கு வெளிநாட்டுல இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் வந்து பயிற்சி தர்றதா சொல்லியிருந்தாங்க. தவிர, படத்துக்காக பெரிய தொகையை செலவு செஞ்சு செட் போட்டிருக்காங்க. அவங்களோட கோரிக்கைகள் நியாயமானதா, இல்லையானு பரிசீலனை பண்ணிப் பார்த்தபிறகுதான், மூன்று நாள்கள் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. இந்த வாரத்துலேயே விஜய் படத்துக்கான ஷூட்டிங் கட்டாயம் முடிஞ்சிடும். தேவையில்லாம யார்மேலேயும் குறைகூற வேண்டாம்" என்று கூறினார், எஸ்.எஸ்.துரைராஜ். 

ஸ்டிரைக் முடிவால், இதுபோன்ற சூழல்களை எப்படிச் சமாளிப்பது என முடிவெடுத்தவர்கள், அதை முறையாக விளக்கிக் கூறாததுதான், இதுபோன்ற வாதங்களுக்குக் காரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement